ஒழுக்கம் உடைமை

திருக்குறள் > இல்லறவியல்

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
  • பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.
132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
  • எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கமே வாழ்க்கைக்கு சிறந்தது என்பதால் அதை பேணிக் காத்திடல் வேண்டும்
133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
  • ஒழுக்கத்துடன் வாழ்பவர் உயர் குடியினர் எனவும் அஃதிலார் இழிந்தவர் எனவும் கொள்ளல் தகும்
134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
  • ஒழுக்கம் தவறியவன் தான் இழிபிறப்பின் நிலை எய்தியதை காண்பான்.
135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
  • மனத்தூய்மை இல்லாதவனின் செயல் பயனுடையதன்று, அது போல் ஒழுக்கமில்லாதனுக்கு உயர்வு வாய்க்காது.
136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
  • ஒழுக்கம் தவறியதால் நேரும் துன்பம் அறிந்தவர், ஒழுக்கத்தினின்று பிறழ மாட்டார்.
137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
  • ஒழுக்கமுடையவர் மேன்மை அடைவர், ஒழுக்கம் தவறியவர் கொடும் பழியைப் பெறுவர்.
138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
  • நல்ல செயல்களுக்கு நல்ல ஒழுக்கமே அடிப்படை; தீய ஒழுக்கம் தீமையையே தரும்.
139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
  • ஒழுக்கமுடையவர் தீயனவாயின் வாயால் கூட, தவறியும் கூற மாட்டார்கள்
140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
  • பல கல்வி கற்றும் உலக வழக்கத்தை ஏற்று நடக்க கல்லாதவர் அறிவற்றவராகவே கருதப் படுவர்.


« முன் பக்கம்: அடக்கம் உடைமை | திருக்குறள் » இல்லறவியல் » இனியவை கூறல் | அடுத்த பக்கம்: பிறன் இல் விழையாமை »



வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikibooks.org/w/index.php?title=ஒழுக்கம்_உடைமை&oldid=4837" இலிருந்து மீள்விக்கப்பட்டது