திருக்குறள் > இல்லறவியல்

« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் »

இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் »


151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
  • தன்னை தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போல, நம்மை இகழ்பவரைப் பொறுத்தல் நன்று.


152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
  • தவறைப் பொறுத்தல் நீங்காத புகழ் தரும் என்றாலும், அதனை மறத்தல் அதனிலும் நல்லது.


153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
  • விருந்தினரை வரவேற்க இயலாத வறுமை மிகவும் கொடியது; மடமுடையோரின் செயலைப் பொறுத்தல் மிகுந்த வலிமை உடையது


154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
  • தான் பெற்ற புகழ் நிலைத்திருக்க நினைப்பவர் பொறுமையை கடை பிடித்தல் வேண்டும்.


155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
  • தன்னை தண்டித்தவரை வெறுக்காது பொறுத்து அரவணைப்பவரை பொன்னைப் போல் போற்றுவர்.


156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
  • தண்டித்தவருக்கு ஒரு நாள் இன்பம், பொறுத்தவறுக்கு அவர் மறையும் வரை புகழ் நிலைக்கும்.


157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
  • பிறர் நமக்கு தவறிழைப்பினும் அதனால் வெகுண்டு அறன் அல்லாதவற்றை செய்தல் கூடாது


158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
  • ஆணவத்தால் தவறிழைப்பவரை, அவற்றைப் பொறுக்கும் தகுதியால் வென்று விடலாம்.


159. துறந்தாரின் தூய்மை உடையவர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
  • தன்னை இகழும் சொற்களைப் பொறுத்தோர் துறவிகளை விட தூய்மை உடையவராக கருதப் படுவர்.


160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
  • உண்ணாமல் நோன்பிருக்கும் பெரியார் ஆயினும், தன்னை இகழ்ந்துரைத்த சொற்களைப் பொறுத்தவருக்கு பின்னால் தான் வரிசைப் படுத்தப் படுவர்.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikibooks.org/w/index.php?title=பொறை_உடைமை&oldid=4860" இலிருந்து மீள்விக்கப்பட்டது