திருவாசக மொழிநடையும் கருத்துப் புலப்பாட்டுத் திறனும்
ஆய்வேடு பற்றிய தகவல்கள்
- ஆய்வாளர் -ஜ.பிரேமலதா
- ஆண்டு -1993
- ஆய்வுநெறியாளர் -முனைவர் வ.ஜெயா
- பல்கலைக்கழகம் -பாரதியார்
ஆய்வுச்சுருக்கம்
தொகு- நால்வர் என்ற தொடரால் சிறப்பாகப் போற்றப்படுபவர்கள் திருஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் போன்றோர் ஆவர். இந்நால்வரிலும் எலும்பையே உருக வைக்கும் பாடல்களினாலும், நடை எளிமையினாலும், மனநிறைவைத் தரும் இசையமைதியாலும் மக்கள் மனதில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் மாணிக்கவாசகர்.
- ‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது இதைப் படித்து சுவைத்தோரின் வாக்கு. கருங்கல் மனதையும் கனிய வைக்கும் இந்நூலின் சிறப்பிற்குக் காரணம் இதன் மொழியமைப்பும், கருத்துப்புலப்பாட்டிற்கு கையாளப்பட்டுள்ள உத்திகளுமேயாகும். இச்சிறப்புகளை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.இந்த ஆய்வு முன்னுரை மற்றும் முடிவுரையோடு சேர்த்து எட்டு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. திருவாகத்தின் இனிமைக்கும் சிறப்பிற்கும் காரணமான கூறுகளை ஆழ அறிதல் வேண்டி முதல் 15 பகுதிகளே ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.சிவபுராணம் முதல் திருத்தோணோக்கம் வரையுள்ள பகுதிகளே நுணுகி ஆராயும் பொருட்டு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னுரை
தொகு- முன்னுரை பகுதியானது, மொழியமைப்பு, நடையியல், கருத்துப்புலப்பாடல் போன்ற மொழியியல் கோட்பாடுகளைப் பற்றி எடுத்துக்கூறி, அக்கோட்பாடுகளை திருவாசகத்தில் பொருத்தி ஆராயும் முறை பற்றி எடுத்துரைக்கிறது.
திருவாசம் ஓர் பொதுப் பார்வை
தொகு- பக்தி இலக்கியங்களில் திருவாசகத்தின் இடம், பன்னிருதிருமுறைகளில் திருவாசகத்தின் சிறப்பு போன்றவை ஆராயப்பட்டுள்ளன. திருவாசகம் அறிவுறுத்தும் பொருட்டோ,பக்தியைப் பரப்பவேண்டும் என்ற நோக்கிலோ பாடப்பட்ட நூல் அன்று. உணர்ச்சி மேலீட்டால் வெளிப்படும் அனுபவங்களைக் கொண்ட பாடல்களையுடையது..
- ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தனிமனிதனின் இதயமாகும். சம்பந்தர் திருமுறை ‘தோடு’ என்றும் நாவுக்கரசர் திருமுறை ‘கூற்று’ என்றும், சுந்தரர் திருமுறை ‘பித்தா’ என்றும் தொடங்க, திருவாசகமோ இறைவனின் திருப்பெயரான (சிவமந்திரமான) ‘நமச்சிவாய வாழ்க’ எனத் தொடங்குகிறது.
- திருவாசகம் ஒரு முத்தமிழ் நூலாகவும்(இயல்,இசை,நாடகம்) திகழ்வது மற்றொரு சிறப்பாகும்.தேவாரம் பாடியோர் தலங்களை மையப்படுத்தி பாடியுள்ளது போலல்லாமல் உள்ளத்தில் எழும் இறைபக்தியின் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
- தேவாரமூவரிடத்தில் தான் பெற்ற இறை இன்பத்தை வெளிப்படுத்துமிடத்து, ஒருசில இடங்களில் மட்டுமே நெகிழ்வின் பொருட்டு அழுகை ஏற்படுகிறது. ஆனால், மாணிக்கவாசகரின் இறையருள் பெற்ற நிலையோ, அழுகை மூலமே பெரும்பாலும் வெளிப்படுகிறது. ஆணவத்தை நீக்கி, உள்ளம் உருகி அழுதால் இறைவனைப் பெறமுடியும் என்ற நோக்கிலேயே அவர் பாடல்கள் உள்ளன. இத்தகைய மணிவாசகருக்காக, இறைவனே விரும்பி வந்து குதிரைச் சேவகனாகியும், பிட்டுக்கு மண்சுமந்தும், பிரம்படி பட்டும் தொண்டு செய்துள்ளார்.
- திருவாசகம், கல்லைப் போன்றவரின் நெஞ்சையும் உருக்குவதால் வேதத்தினும் உயர்ந்தது எனச் சிவப்பிரகாசசுவாமிகள் பாராட்டுகிறார்.திருவாசகம் அறம்,பொருள்,இன்பம்,இறைபேறு என்ற நான்கு பகுதிகளையும் பெற்றிருப்பதால் திருக்குறள் அமைப்போடு ஒப்பிடலாம்.திருவாசகத்தின் காலம் தொடர்பான முரண்பட்ட கருத்துகளில் 3ம் நூ கருத்தை ஆய்வாளர் தரவுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மாணிக்கவாசகரின் பக்திநெறி
தொகு- பக்தி இலக்கியங்களில் தனிப்பெருமை பெற்றுள்ள திருவாசகத்தின் சிறப்பிற்குக் காரணமான மாணிக்கவாசகரின் பக்தி நெறி ஆராயப்படுகிறது. உலகிலுள்ள நாடுகளில் பக்தி இலக்கியங்களை மிகுதியும் படைத்தளித்திருக்கும் மொழி தமிழ்மொழியே. இதனால் தமிழ் மொழிக்கு பக்திமொழி என்ற சிறப்புப் பெயரும் உள்ளது.சைவ சமயம் கூறும் நான்கு மார்கங்களில் மாணிக்கவாசகர் சன்மார்கத்தினர். சன்மார்க்க நெறியின் வழி அன்புநெறி,ஒளி நெறியை கையாண்டுள்ளார்.
திருவாசகத்தின் மொழியமைப்பு
தொகு- திருவாசகம் தோன்றிய காலந்தொட்டு அதைப்போற்றாத அறிஞரே இல்லை. திருவாசகத்தை மதுர வாசகம் என்று நான்மணிமாலையும், நற்கருப்பஞ் சாறு,தேன்,பால் என்று வள்ளலாரும் பாராட்டுவதற்குக் காரணம் அதன் மொழியமைப்பே ஆகும்.
- மொழியியல் கோட்பாட்டின் படி திருவாசகத்திலுள்ள ஒலியன்,உருபன்,ஒலிக்குறிப்புச் சொற்கள்,வினையெச்ச உருபன்,பெயரெச்ச உருபன்,சிவன்,பார்வதியைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ள பெயர்கள்,அடைகள்,புதுச்சொற்கள், எதிர்ச்சொற்கள், எளிமையாக்கம், புதுமையாக்கம், நிலைபேறாக்கம் ,திசைச்சொற்கள், சொற்றொடர் நயங்கள், தொடரமைப்பு, வருணனை போன்ற பல கூறுகள் ஆராயப்பட்டுள்ளன.எளிமையாக்கத்தில் ‘ஒப்பற்றவன்’ என்பதை ‘ஒப்பன்’ என எளிமையாக்குகிறார். புதுமையாக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்பதை ‘உடையவன்’ என்கிறார். நிலைபேறாக்கத்தில் திரும்பத்திரும்ப புதுச்சொற்களைக் கையாள்கிறார்.
திருவாசக மொழியும் மொழிப்பயன்பாடும்
தொகு- சொற்களைச் சரியான இடத்தில்,சரியான பொருள் தரும் வகையில் கேட்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்துவது ஒரு கலை.இக்காரணம் பற்றியே இலக்கியக்கலை உயர்ந்த கலையாகப் போற்றப்படுகிறது. சிவனின் பலஅரிய குணங்களைக் குறிக்க பல அடைமொழிகளைப் பயன்படுத்துகிறார். இறைக்க ருணையைப் புலப்படுத்த வேண்டி தன்னை நாயேன்,பேயன் பித்தன் என்று இழிவுபடுத்திக்கொண்டு, தன்னையே ஆட்கொண்ட இறைவன் பிறரையும் ஆட்கொள்வான் என்ற உண்மையை மக்கள் மனதில் பதிய வைக்கிறார்.அதற்கு ஏற்றவாறு சொற்களை, மொழியை எளிமைப்படுத்திப் பயன்படுத்துகிறார்.
யாப்பமைதி
தொகு- காலந்தோறும் யாப்பிலக்கணத்தார் விதிகளை வரையறை செய்து வந்தாலும் பாவலர்கள் அதை மீறி புதிய இலக்கியங்களைப் படைக்கின்றனர்.மாணிக்கவாசகர் பழமைக்கும் புதுமைக்கும் சமஅளவில் மதிப்பு கொடுத்துள்ளார். மரபு அடிப்படையில் நேரிசைவெண்பா, இணைக்குறளாசிரியப்பா, நிலைமண்டிலம், கலிவெண்பா என பத்து வகையான பா வகைகளில் பாடல்கள் உள்ளன. என்றாலும் தன் கற்பனை வளத்திற்கும்,சிந்தனைச்செழுமைக்கும் கைகொடுக்கும் நாட்டுப்புற இசைவடிவங்களுக்கும் இடம் கொடுத்துள்ளார்.
நடையியலும் கருத்துப் புலப்பாட்டுத்திறனும்
தொகு- எந்த ஒரு கூறு ஆசிரியரின் தனித்தன்மையைப் படம் பிடிக்கிறதோ அதுவே நடையாகும்.கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் மொழியைச் செப்பமுற அமைப்பதே கருத்துப்புலப்பாடாகும்.இவ்விரண்டும் தண்டவாளத்தின் இரு பக்கங்கள் போன்றிருந்து கருத்தை படிப்போர் மனதில் சென்று சேர்க்கின்றன.கருத்துப் புலப்பாட்டிற்கு பல வகை உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். உவமை,உருவகம்,வினா விடைமுறை,மேற்கோள் முறை, பழமொழி, வருணனை, அந்தாதி என திருவாசகம் முழுமையும் கருத்துப்புலப்பாடலுக்கேற்ற கூறுகளைக் கொண்டுள்ளது.
முடிவுரை
தொகு- திருவாசகம் ஒப்புயர்வற்ற பனுவல். கற்குந் தோறும் புது புதுப் பொருளைத் தரும் சிறப்புடையது,என்பதோடு சன்மார்க நெறி நின்று அன்பு மற்றும் ஒளி நெறியில் பேரின்ப நிலையடைய வழி காட்டும் பெருமையுடையது என்பது ஆய்வின்வழி தெரியவருகிறது. சோதி வடிவில் இறைவனைக் காணும் பெருநிலையானது, அனைவருக்கும் இறைவன் பொதுவானவன் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.
- தன்மை ஒருமை விகுதிகளை மிகுதியாகப் பயன்படுத்தியிருப்பது, தன் நிலையை உணர்த்துவதின் மூலம் இறைவனின் அருட்திறத்தை எளியவர்களுக்கும் புரியவைக்கும் உத்தியாகும்.அதுபோன்ற பல உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலக்கிய வழக்கு,பேச்சு வழக்கு,விசேடச் சொற்கள்,திசைச்சொற்கள் போன்றவை மாணிக்கவாசகரின் பரந்த அறிவனுபவத்தை வெளிப்படுத்துகின்றன.
- இவரது புதிய உத்தியான வினைமுற்றை முதலில் கூறிப் பின் எழுவாயைக்கூறும் உத்தியைப் பிறகாலத்தில் கம்பர் (கண்டேன் கற்பினுக்கனியைக் கண்களால்) பயன்படுத்தியுள்ளார்.மாணிக்கவாசகர் இறைவனின் கதைகளைக்கூற ஆசிரியப்பாவையும், சுருங்கச்சொல்லி விளங்க வைக்க,அறிவுறுத்தும் நிலையில் வெண்பாவையும் பயன்படுத்தியுள்ளார். இறைவனின் எளிமைத் தன்மையை விளக்க நாட்டுப்புற வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
உசாத்துணை நூல்கள்
தொகுஅரங்கன்.கி.,தொடரியல் மாற்றிலக்கண அணுகுமுறை தமிழ்ப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர். திருவாசகம்,மெய்கண்ட உரை,சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம்,திருநெல்வேலி.