தமிழ் இலக்கியங்கள் காட்டும் குடி, குடிமக்கள் கோட்பாடு

ஆய்வுத் தலைப்பு

தொகு
“தமிழ் இலக்கியங்கள் காட்டும் குடி, குடிமக்கள் கோட்பாடு”

ஆய்வேடு பற்றிய பிற செய்திகள்

தொகு
ஆய்வாளர்
வே.சண்முகநாதன்.
பட்டம்
முனைவர் பட்டம் (பிஎச்.டி.)
ஆண்டு
1990
ஆய்வு நெறியாளர்
முனைவர் கோ.விஜய வேணுகோபால்
பல்கலைக்கழகம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்


ஆய்வுச் சுருக்கம்

தொகு

பண்டைத் தமிழ்மக்களின் சமூக, அரசியல், சமய வரலாறுகள் தமிழ் இலக்கியங்களின் துணைக்கொண்டே பெரிதும் அறியப்பட்டுள்ளன. மக்களின் சிந்தனைகளால் செய்தொழில் வேற்றுமைகளால், உயர்வு- தாழ்வுடைச் சமூகத்தளங்கள் உருவாகியுள்ளன. குடி என்பது, தொன்மைச் சிறப்புடைய ஒரு பழகுதமிழ்ச் சொல்லாகும். குடியாட்சி, குடியரசு போன்றன இன்றைய சொற்கள் ஆகும். பொதுமக்கள், குடிமக்கள் என்பன எப்படிப் பார்க்கப்பட்டுள்ளன என்பதைச் சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய 19 நூல்களை ஆய்வுக்களமாகக் கொண்டு இலக்கியச் சொல்லாட்சித் தரவுகளின்வழி ஆராயப்பட்டுள்ளது.

அகம் புறம் எனும் பாடுபொருள் பாகுபாடு, ஐந்திணைக் கோட்பாடு, கிரந்த எழுத்துக்கள் இடம்பெறாத மொழித்தூய்மை, சமயச் சார்பற்ற இலக்கியத் தன்மை ஆகியன இந்நூல்களின் சிறப்புக்களாக உள்ளமையே இவற்றை இவ்வாய்வுக்கு உட்படுத்தியமையின் காரணமாகும். நூல் சொல்லாட்சிகளின் துணைக்கொண்டே பொருண்மை வரையறைசெய்வது எனும் ஆய்வுநெறி பின்பற்றப்பட்டுள்ளது இதன்சிறப்பாகும். காலந்தோறும் பொருண்மை மாற்றங் கண்டுள்ள குடி, குடிதொடர்பான சொற்களில் `குடிமக்கள்` எனும்சொல் `பொதுமக்கள்` எனும் சொல்லினின்று எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும், மக்களைக் குறிக்கும் பல்வேறு சொற்களைத் தொகுத்தாய்வு செய்தும் ஆய்வுமுறை அமைந்துள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இலக்கியங்களில் குடிதொடர்பாக நிறையசொற்கள் இடம் பெற்றுள்ளமையே இதன்சிறப்பைத் தெரிவிக்கின்றது. முதுகுடி, தொல்குடி, நீள்குடி, சிறுகுடி, அம்குடி, வீழ்குடி, கொழுங்குடி, துளங்குகுடி, கெடுகுடி போன்ற பல்வேறு அடைகளுடன் ஆட்சிபெற்றுள்ள சொற்கள் தொகுக்கப்பெற்றுப் பொருண்மை வரையறை செய்யப்பட்டுள்ளது. குடிமக்களாகக் குறிக்கப்படுபவர்கள் அரசு உறவுடைய மக்களாக இருந்து அரசியலாளர்க்கு உற்றுழி உதவுபவராக இருந்துள்ளமை நிறுவப்பட்டுள்ளது.
ஆய்வமைப்பு
முன்னுரை, முடிவுரைதவிர இவ்வாய்வேடு நான்கு இயல்களாக அமைக்கப்பட்டுள்ளது.
இயல் ஒன்றில், குடி, குடிமக்கள் பற்றி மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் அலசப்பெற்றுள்ளன.
இயல்கள் 2,3,4 மூன்றிலும் முறையே தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் ஆட்சிபெற்றுள்ள குடிதொடர்பான அனைத்துச் சொற்களும் தொகுக்கப்பெற்றுக் கோட்பாடுகள் வரைமுறை செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இயலிலும், தொகுப்புரை, பின்னிணைப்புகள் தரப்பெற்றுள்ளன.

இவ்வாய்வின் மூலம் நிறுவப்படும் புதிய கருத்துக்கள்:

  • மக்களைக் குறிக்க ஜாதி, குலம், ஜனம் போன்ற தற்கால வழக்குகள் இடம்பெறவில்லை.
  • மக்களுள் அரசு தொடர்புடைய வணிகர்கள், வீரர்கள், புலவர்கள் போன்றவர்களே குடிமக்களாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
  • மாக்கள் எனும்சொல் இன்றுபோல் இழிசொல்லாகக் கருதப்படவில்லை. உரையாசிரியர்களின் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது.
  • `சோழர்குடி` எனும் குடிப்பெயரால் `சோழநாடு` எனும் நாட்டுப்பெயரும், `தமிழ்க்குடி` எனும் குடிப்பெயரால், `தமிழ்நாடு` எனும் நாட்டுப்பெயரும், `மக்களின் குடிப்பெயர்களால் நாட்டுப்பெயர்கள் வழங்கப்படும்` எனும் உண்மையைத் தெரிவிக்கின்றன.


பார்க்க

தொகு
  1. முன்னுரை
  2. முனைவர் பட்ட ஆய்வேடுகள்
  3. எம்ஃபில் பட்ட ஆய்வேடுகள்
  4. முதுகலைப்பட்ட ஆய்வேடுகள்
  5. ஆய்வுத்தலைப்புகள்- எம்.லிட்./எம்.ஃபில் பட்டம்
  6. ஆய்வுத்தலைப்புகள்- பி.எச்டி பட்டம்
  7. ஆய்வுத்தலைப்புகள்
  8. ஆய்வுத்துணை நூல்கள்