தமிழ்க்கவிதை நாடகங்களில் கதைக்கருக்களும், கதைப்பின்னல்களும்
- ஆய்வுத்தலைப்பு
"தமிழ்க் கவிதைநாடகங்களில் கதைக்கருக்களும், கதைப்பின்னல்களும்"
தொகுஆய்வேடு பற்றிய பிறசெய்திகள்
தொகு- ஆய்வாளர்
- ந. சக்திவேலு
- பட்டம்
- முனைவர் பட்டத்திற்கானது
- ஆண்டு
- 1990 (டாக்டர் பட்டம்)
- ஆய்வு நெறியாளர்
- க.த. திருநாவுக்கரசு
- பல்கலைக்கழகம்
- சென்னைப் பல்கலைக்கழகம்
ஆய்வுச்சுருக்கம்
தொகுதமிழ்க் கவிதைநாடகங்களின் 'கதைக்கருக்கள்', 'கதைப்பின்னல்கள்' குறித்து இதுநாள்வரை ஆய்வு நிகழ்த்தப்படவில்லை. ஆதலால், இப்பொருள் பற்றிய ஆய்வு இன்றியமையாததாகின்றது. விடுதலைக்குப்பின் தமிழ்நாட்டில், தனிநூல்வடிவில், அச்சில் வெளிவந்துள்ள தமிழ்க் கவிதை நாடகங்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வானொலிக் கவிதை நாடகங்கள், ஓரங்கக் கவிதை நாடகங்கள், நாட்டியக் கவிதை நாடகங்கள் இவ்வாய்வில் இடம்பெறவில்லை. 1947- ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் முதல் 1986- ஆம் ஆண்டு முடிய வெளிவந்துள்ள 'நாற்பத்திரண்டு கவிதைநாடகங்கள்' மட்டும் இவ்வாய்வில் இடம்பெறுகின்றன.
- முதல் இயல்
- 'கவிதை நாடகம்' என்ற தொடரின் வழக்குப் ப்றறியும், 'நாடகம்' என்ற சொல்லின் பொருள் குறித்தும், 'கவிதை நாடக வகை' பற்றியும் பேசுகின்றது.
- இரண்டாம் இயல்
- 'கதைக்கரு' என்றால் என்ன என்பது குறித்து, இலக்கியச் சொல்விளகக அகராதிகள், நாடக நூல்கள், இலக்கியத்திறனாய்வு நூல்கள் முதலியவற்றைக்கொண்டு வரையறை செய்கினறது.
- மூன்றாம் இயல்
- 'கதைப்பின்னல் எனும் செல்லாட்சி பற்றி விளக்குகிறது. கதைப்பின்னல் குறித்துக் கலைக்களஞ்சியம், இலக்கியச் சொல் விளக்க அகராதி, இலக்கிய ஆய்வாளர் கருத்து ஆகியவற்றைக் கொண்டு வரையறுக்கிறது. கதைப்பின்னல் வகைமை பற்றியும் தெளிவு படுத்துகிறது.
- நான்காம் இயல்
- கவிதை நாடகம் ஒவ்வொன்றும் எந்தவகைக் கவிதை நாடகத்தைச் சேர்ந்தது என்பதையும், ஒவ்வொரு நாடகமும் எந்தவிதக் கதைக்கருவை வைத்து எழுதப்படடிருக்கிறது என்பதையும் ஆராய்கிறது.
- ஐந்தாம் இயல்
- ஒவ்வொரு நாடகமும் கதைப்பின்னலை முறையாகக் கையாண்டிருக்கிறதா என்பதையும், ஒவ்வொரு் நாடகமும், எந்தவிதக் கதைப்பின்னல் வகையைச் சார்ந்தது என்பதையும், ஒவ்வொரு கதைப் பின்னலுள்ளும் எந்த நாடகம் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கூறுகிறது.
- 'கவிதைநாடகம்' என்ற தொடரே மிக அண்மைக் காலத்தில்தான் தோன்றியது. உரைநடை நாடகம் தோன்றிய பின்னர், அதனின்றும் வேறுபடுத்தி உணர்த்தக் 'கவிதை நாடகம்' என்ற சொல்லாட்சி உருவானது.
- "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்" எனத் தொல்காப்பியம் நாடகத்தைச் சுட்டுகின்றது. அதன் பிற குறிப்புகளையும், சிலப்பதிகார உரையையும், நாடக ஆய்வாளரின் கருத்துகளையும் கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றபொழுது, தொல்காப்பியத்திற்கு முன்னரே நாடகம் தோன்றியிருக்கிறது எனலாம். தொல்காப்பியர் காலத்திலும், கடைச்சங்க காலத்திலும் கவிதைநாடகம் வழக்கிலிருந்தது எனக்கருதலாம்.
நாடகம், தொடக்கக் காலத்தில் கவிதை வடிவில்தான் இருந்தது எனறு 'நாடகக் கலைக்களஞ்சியம்' உரைக்கிறது. 'பள்ளு', 'குறவஞ்சி', 'நொண்டி' போன்ற நாடகங்கள் செய்யுள்வடிவில் கிடைததிருக்கின்றன. அதனால், அவற்றிற்கு முந்திய நாடகங்களும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருக்கலாம் எனக்கருதலாம். தமிழ்மக்கள் நாடகத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள்; ஆனால், பேணிக் காக்கவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் 'தெருக்கூத்து' தோன்றி வளர்ந்தது. அக்கூத்திலும், 'பாட்டு' மிகுதியாகவும், 'உரைநடை' குறைவாகவும் இருந்தன. பின்னர் 'உரைநடை நாடகம்' எழுந்தது. திருமிகு பெ.சுந்தரம்பிள்ளை அவர்கள், மனோன்மணீயம் என்ற கவிதை நாடகத்தை 1891- இல் இயற்றினார். இதுவே நமக்குக் கிடைத்துள்ள முதல் கவிதைநாடகம். இந்நாடகத்திலிருந்துதான் உண்மையான கவிதைநாடக வரலாறு துவங்குகிறது. 1971- ஆம் ஆண்டு முதல் 1980- ஆம் ஆண்டுக்குள் மட்டும் இருபத்துநான்கு கவிதை நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இப்பத்தாண்டுகளைக் கவிதைநாடக வரலாற்றின் பொற்காலம் எனக் கூறலாம்.
- நடி என்ற வினை அடியைக்கொண்டே 'நாடகம்' என்ற சொல் பிறந்திருக்க வேண்டும். வினை அடியாகப் பிறந்த சொற்கள், மொழியில் நிலைத்து நிற்கும் என மொழிநூலார் கருதுகின்றனர். இயல், இசை என்ற பிறசொற்களும் அவ்வாறே தோன்றியுள்ளன. நாடகம் என்பதற்கு 'நடித்தலை உள்ளடக்கியது', 'நடித்தல் தொழில் அமைந்தது' என்று பொருள் கொள்ளலாம்.
இவ்வாய்வுக்குரிய நாடகங்கள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வரலாறு, இலக்கியம், சமுதாயம், கற்பனை, தததுவம் எனப் பிரிக்கப்பட்டு இடம் பெறுகின்றன. பிறமொழி அடிப்படையில் மொழிபெயர்ப்பு, பிறமொழித்தழுவல் எனப்பகுக்கப்பெற்று அமைக்கப்பட்டிருக்கினறன. ஆக நாடகங்கள் யாவும் இந்நூலில் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் 'கதைக்கரு' குறித்து முதலில் ஆய்வு செய்யப்படுகிறது.
- 'தீம்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'அடிக்கருத்து', 'கதைக்குரிய கரு', 'கரு', 'கருப்பொருள்', 'கதைக்கரு' எனப் பலவாறாகப் பொருள்கள் இருக்கின்றன. அவற்றுள் 'கதைக்கரு' என்ற சொல்லே இந்த ஆய்வேட்டில் பயன்படுத்தப்படுகிறது.
- 'கதைக்கரு' என்பது, ஓர் இலக்கியப்படைப்பின் அடிப்படைக்கருத்தைக் குறிப்பது எனலாம். அது 'முதன்மைக் கருத்து' என்றும், 'தலைமைக் கருத்து' என்றும், 'மையக்கருத்து' என்றும் கூறப்படுகிறது. 'கதைக்கரு' எப்படைப்பிலும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ காட்டப்படலாம்.
- அம்பாபலி, சிவாஜி விஜயம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம், ராஜா ஜயசிங்கு, வேங்கையின் வேந்தன் இவை யாவும் இவ்வாய்வுக்கு உரிய வரலாற்றுக் கவிதை நாடகங்கள்.
- அனிச்சஅடி, அன்னிமகள், அன்னிமிஞிலி, ஆதிமந்தி, ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன், ஊமைக்குயில், கரிகால் வளவன், கருணை மறவன், கனகை, சிலம்புச் செல்வி, நெடுமான் அஞ்சி, புரவலர் உள்ளம், புலவர் உள்ளம், மேகலை நாடகம், முல்லை மாடம், வாள்விழி இவையாவும் இவ்வாய்வில் இடம்பெற்ற இலக்கியக் கவிதைநாடகங்கள்.
- அருள்மணீயம், செல்வம் அல்லது மகதநாட்டின் மக்கள் ஆட்சி, மாபெரும் வெற்றி, பனிமொழி, பால்மதி, பெரியவெற்றி இவை இந்தநூலில் இடம்பெற்ற சமுதாயக் கவிதை நாடகங்கள்.
- சிறைமீட்ட செம்மல், துறவியின் புதையல், தைப்பொங்கல், பாண்டியன் நெடுஞ்செழியன், புயலை அடக்கிய பூந்தென்றல், வைகறைக் கனவு, இவை கற்பனைக் கவிதை நாடகங்களாக அமைந்திருக்கின்றன.
- காலத்தேர் என்பது தத்துவ நாடகம்.
- ஆகமன், காமக்களிமகன் கோமஸ் அல்லது கற்பின் வெற்றி, பொன்னி, முத்ரா ராக்ஷஸம் ஆகியன் மொழிபெயர்ப்பு நாடகங்களாக உள்ளன.
- இன்பவல்லி, காமஞ்சரி, காலக்கனி ஆகியன தழுவல் நாடகங்களாக இவ்வாய்வுக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. மேற்கூறிய நாடகங்களின் கதைக்கருக்கள் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றன.
- நன்னனை நல்லவனாக்கிக் காட்டுதல், அனிச்சம், அருளாழி இருவரின் உளம் மறைகாதலை உணர்த்துதல் 'அனிச்ச அடி'யின் கதைக்கருக்கள் ஆகும். தமிழ்ப்பண்பாடடையும், மரபையும் கூறுதல் 'ஆதிமந்தி'யின் கதைக்கருவாகும். இவ்வாறு ஆய்வுக்கு உட்பட்ட அனைத்து நாடகங்களின் கதைக்கருக்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
- தொடர்ந்து கவிதை நாடகங்களின் கதைப்பின்னல் குறித்து இவ்வாய்வு அமைகிறது.
- காலநிரல்படி நிகழ்ச்சிகளை ஓழுங்குபடுத்தியிருப்பதைக் 'கதை' என்று நாம் கதைக்கு இலக்கணம் கூறுகின்றோம். கதைப்பின்னலும் கதைநிகழ்ச்சிகள்தாம். ஆனால் கதைப்பின்னலுக்கு அழுத்தம் 'காரணத்தின்மீது' அமைகிறது. "அரசன் இறந்தான், பிறகு அரசி இறந்தாள்", இது கதை.
- "அரசன் இறந்தான், துக்கத்தால் அரசி இறந்தாள்", இது கதைப்பின்னல். இவ்விரண்டிலும் 'காலநிரல்' பாதுகாக்கப்படுகிறது. ஆனால் காரண உணர்வு கதைப்பின்னலில் அமைந்துள்ளது. கதையாக இருந்தால் நாம் "அதன்பிறகு" என்று கேட்கிறோம். அது கதைப்பினனலாக இருந்தால் "ஏன்?" என்று வினவுகிறோம். "ஒவ்வொரு செயலும், சொல்லும் கதைப்பின்னலில் கணக்கிடவேண்டும்" என இ.எம்.பார்ஸ்டர் எழுதிய நாவல் நோக்குகள் எனும் ஆங்கிலநூல், 'கதைப்பின்னல்' குறித்து விளக்குகிறது. அதனால் கதையில், நாடகத்தில், உரைநடை அல்லது கவிதையில் நிலைபெற்றுள்ள நிகழ்ச்சிகள் அறிவார்ந்த முறையில் காரணகாரியத்தோடு அமைக்கப்படுவது -தொடர்புபடுத்தப்படுவது- கதைப்பின்னல் ஆகும்.
- கதைப்பின்னல் வகைகள்
- அவை 'குறை கதைப்பின்னல்' (சிம்பிள் பிலாட்), 'நிறை கதைப்பின்னல்'( காம்ப்ளக்சு பிலாட்), 'தனிக் கதைப்பின்னல்'( சிங்கிள் பிலாட்), 'இரு கதைப்பின்னல்' (டபுள் பிலாட்), 'நெகிழ் கதைப்பின்னல்' (லூசு பிலாட்), 'செறி கதைப்பின்னல்' (டைட் பிலாட்), 'மோதல் கதைப்பின்னல்' (பிலாட் ஆஃப் கான்ஃபிளிக்ட்), 'சூழ்ச்சிக் கதைப்பின்னல்' (பிலாட் ஆஃப் இண்ட்ரிக்), 'எதிர்ப்பார்ப்புக் கதைப்பின்னல்' (பிலாட் ஆஃப் சஸ்பென்சு), 'வியப்பமை கதைப்பின்னல்' (பிலாட் ஆஃப் சர்ப்ரைஸ்), 'நிகழ்ச்சிகளின் கதைபபினனல்' (பிலாட் ஆஃப் இன்சிடெண்ட்சு) என்பனவாகும்.
- அக்கதைப்பின்னல் பற்றிய விளக்கங்கள் ஆய்வுக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. முன்னர்க் குறிப்பிட்ட நாடகங்கள் ஒவ்வொன்றும் எந்தவிதக் கதைப்பின்னலில் அடங்கும் என்பது இவ்வாய்வு நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.
- இந்தஆய்வு, நூலாக 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்திருக்கிறது. இந்நூலைப் படித்துத் தமிழ்க் கவிதைநாடகங்களின் 'கதைக்கரு'க்களையும், 'கதைப்பின்னல்'களையும் சுவைத்து மகிழலாம்.