ஈசாப் நீதிக் கதைகள்/சியுசுவிடம் தங்களுக்கென ஒரு மன்னனைக் கேட்ட தவளைகள்

குட்டையில் இருந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த தவளைகள் தங்களை ஆள்வதற்கு ஒரு மன்னனை கொடுக்குமாறு கடவுள் சியுசுவிடம் கத்த ஆரம்பித்தன. இதைக் கண்டு சிரித்த சியுசு தவளைகளுக்கு மன்னனாக ஒரு சிறிய மரத் துண்டை அந்த குட்டைக்குள் திடீரென இட்டார். அந்த மரத் துண்டானது நீரில் மெலிதாக விழுந்த போது அத்தவளைகள் அச்சம் அடைந்தன. மண்ணுக்குள் சென்று பதுங்கின. நீண்ட நேரத்திற்கு அங்கேயே இருந்தன. பிறகு ஒரு தவளை மட்டும் தண்ணீரில் இருந்து மெதுவாக எட்டிப் பார்த்தது. புதிய மன்னனை நன்றாக ஆய்வு செய்த பிறகு அது மற்ற தவளைகளை அழைத்தது. தங்களது அச்சத்தை தவிர்த்து விட்டு அனைத்து தவளைகளும் மரத் துண்டு மீது தாவ ஆரம்பித்தன. அதை வைத்து வேடிக்கை செய்தன. தங்களது மன்னனை அவமதித்து ஏளனம் செய்ததற்கு பிறகு, சியுசுவிடம் தங்களுக்கான மற்றோரு மன்னனை அனுப்புமாறு தவளைகள் கேட்டன. தான் அளித்த மன்னனை தவளைகள் ஏளனம் செய்தததைக் கண்டு சியுசு கோபம் அடைந்தார். எனவே அவர் இரண்டாவது மன்னனாக ஒரு தண்ணீர் பாம்பை அனுப்பினார். அப்பாம்பு ஒவ்வொரு தவளையாக கொல்ல ஆரம்பித்தது. இவ்வாறாக தண்ணீர் பாம்பு மகிழ்ச்சியுடன் கொன்று கொண்டிருந்த நேரத்தில் தவளைகள் பயத்தில் தப்பி ஓட ஆரம்பித்தன. இரகசியமாக அவை சியுசுவுக்கு ஒரு செய்தியை அனுப்பின. இந்த இறப்புகளை தடுக்குமாறு அவரிடம் கேட்டன. சியுசு பதிலளித்ததாவது "மோசமான ஒன்றை பெறுவதற்காக நான் உங்களுக்கு அளித்த நல்ல ஒன்றை நீங்கள் தவிர்த்து விட்டீர்கள். எனவே அதனுடன் தான் நீங்கள் வாழ வேண்டும் அல்லது இதை விட மோசமான ஒன்று உங்களுக்கு நிகழலாம்" என்றார்.


நீதி: ஒரு தீய ஆட்சியை விட ஆட்சி இல்லாததே சிறந்தது.