ஈசாப் நீதிக் கதைகள்/கிணற்றில் குள்ளநரியும், ஆடும்
ஒரு குள்ளநரி ஒரு கிணற்றில் தவறி விழுந்தது. அதனால் கிணற்றிலிருந்து மீண்டும் வெளியே வர இயலவில்லை. அங்கு ஒரு தாகமுடைய ஆடு வந்தது. குள்ளநரியை அந்தக் கிணற்றில் கண்ட ஆடு "தண்ணீர் நன்றாக உள்ளதா?" என்று கேட்டது. "நன்றாக உள்ளது" என்றது குள்ளநரி. "என் வாழ்நாளில் சுவைத்த நீரிலேயே இதுவே சிறந்தது. கீழே வந்து நீயே ஒரு முறை சுவைத்துப் பார்" என்றது. தன்னுடைய தாகத்தைத் தணிப்பதைத் தவிர்த்து எதைப் பற்றியும் யோசிக்காத ஆடு ஒரே தாவாகத் தாவி கிணற்றுக்குள் குதித்தது. தனது தாகம் தணிந்த பிறகு, குள்ளநரியைப் போலவே அதுவும் சுற்றி முற்றி கிணற்றில் இருந்து வெளியேறுவதற்கு வழியைத் தேடியது. ஆனால் அதனால் எந்த வழியையும் கண்டறிய இயலவில்லை. தற்போது நரி "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நீ உன் பின்னங்கால்களை ஊன்றி நில். உனது முன்னங்கால்களை கிணற்றின் சுவர் மீது வைத்து நில். நான் உன் முதுகில் ஏறி, பிறகு உனது கொம்புகளில் நடந்து வெளியே செல்கிறேன். நான் வெளியே சென்ற பிறகு, வெளியே வருவதற்கு உனக்கும் உதவி செய்வேன்" என்று கூறியது. நரி கேட்டுக் கொண்டவாறு ஆடு செய்தது. அதன் முதுகில் தாவிய நரி கிணற்றில் இருந்து வெளியேறியது. பிறகு அமைதியாக நடந்து சென்றது. ஆடு குள்ளநரியைச் சத்தமாக அழைத்தது. தன்னை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வர உதவுவதாக அளித்த உறுதி மொழியை நினைவுபடுத்தியது. ஆனால் குள்ளநரி வெறுமனே திரும்பி கூறியது "உன்னுடைய தாடியில் உள்ள முடியின் அளவுக்கு உன்னுடைய தலையில் அறிவு இருந்திருந்தால் கிணற்றிலிருந்து வெளியே வருவது எவ்வாறு என்பதை அறியாமல், நீ கிணற்றுக்குள் குதித்திருக்க மாட்டாய்" என்று கூறியது.
நீதி: ஆழம் தெரியாமல் காலை விடாதே.