ஈசாப் நீதிக் கதைகள்/கழுகும், வண்டும்

ஒரு கழுகு ஒரு முயலைத் துரத்திக் கொண்டிருந்தது. முயல் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. அதற்கு எங்கு உதவி கேட்பது என்று தெரியவில்லை. அப்போது ஒரு வண்டைக் கண்டது. தனக்கு உதவுமாறு அதனிடம் மன்றாடியது. எனவே கழுகு வந்த போது தனது பாதுகாப்பின் கீழ் இருக்கும் முயலைத் தொடக்கூடாது என வண்டு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் வண்டு மிகவும் சிறியதாக இருந்ததால் கழுகால் வண்டைக் காண முடியவில்லை. அது முயலைப் பிடித்து முழுவதுமாக உண்டு விட்டது. வண்டு இதை என்றுமே மறக்கவில்லை. கழுகின் கூட்டின் மீது எப்போதுமே ஒரு பார்வை வைத்திருந்தது. எப்போதெல்லாம் கழுகு முட்டையிட்டதோ அப்போதெல்லாம் வண்டு அதன் கூட்டிற்கு ஏறி முட்டையைக் கூட்டிலிருந்து உருட்டி வெளியே தள்ளி உடைத்தது. இறுதியாக தனது முட்டைகள் உடைந்து போவதால் மிகுந்த வருத்தமடைந்த கழுகு கடவுள் ஜூப்பிட்டரிடம் சென்றது. அவர் கழுகுகளின் தனிச்சிறப்பான பாதுகாவலர் ஆவார். தான் கூடு கட்டுவதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குமாறு அவரிடம் கழுகு மன்றாடியது. எனவே அவர் தனது மடியில் முட்டைகளை இடுமாறு கழுகுக்குக் கூறினார். ஆனால் இதை வண்டு கவனித்தது. கழுகின் முட்டையின் அளவுடைய ஒரு பந்தை சேறு மூலம் உருவாக்கியது. பறந்து சென்று ஜூப்பிட்டரின் மடியில் அந்தப் பந்தை வைத்தது. இந்த சேற்றுப் பந்தை ஜூப்பிட்டர் கண்ட போது அவர் எழுந்து நின்று தனது மேலங்கியை உதறினார். முட்டைகளை மறந்துவிட்டார். முட்டைகளையும் சேர்த்து உதறினார். முன்னர் போலவே முட்டைகள் மீண்டும் உடைந்தன. அன்றிலிருந்து தாங்கள் முட்டையிடும் காலத்தில் வண்டுகள் அருகில் இருக்கும் இடங்களில் கழுகுகள் என்றுமே முட்டையிடுவதில்லை என்று கூறப்படுகிறது.


நீதி: சில நேரங்களில் பலவீனமானவர்கள் தங்களை விட பலமானவர்களையும் கூட அவமானத்திற்குப் பழி வாங்க வழிகளைக் கண்டறிவார்கள்.