ஈசாப் நீதிக் கதைகள்/கழுகும், குள்ளநரியும்

ஒரு கழுகும், ஒரு குள்ளநரியும் சிறந்த நண்பர்கள் ஆயின. இரண்டும் அருகருகில் வாழ்வதென முடிவெடுத்தன. ஒருவரையொருவர் எந்த அளவுக்கு அதிகமாகப் பார்த்துக் கொள்கின்றனவோ அந்த அளவுக்கு சிறந்த நண்பர்களாக அவை இருக்குமென நினைத்தன. எனவே கழுகு ஓர் உயர்ந்த மரத்தின் உச்சியில் கூடு கட்டியது. அம்மரத்தின் அடியில் ஒரு புதரில் குள்ளநரி வாழ ஆரம்பித்தது. சில குட்டிகளை ஈன்றது. ஒரு நாள் குள்ளநரி உணவு தேடி வெளியே சென்றது. கழுகும் தன் குஞ்சுகளுக்கு உணவு வேண்டியது. அப்புதரை நோக்கிப் பறந்து வந்தது. குள்ளநரிக் குட்டிகளைப் பிடித்தது. தனக்கும், தன் குடும்பத்திற்கும் உணவாவதற்காக அக்குட்டிகளை மரத்திற்குத் தூக்கிச் சென்றது. குள்ளநரி திரும்பி வந்த போது, என்ன நடந்தது என்பதை அறிந்தது. அதற்கு அதன் குட்டிகளை இழந்த கவலையை விட கோபம் அதிகமாக இருந்தது. ஏனெனில் அதனால் கழுகைப் பிடித்து அதன் துரோகத்திற்குப் பழி வாங்க இயலவில்லை. எனவே அந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து கழுகுக்குச் சாபமிட்டது. சீக்கிரமே பழியும் வாங்கியது. அருகில் இருந்த பலி பீடத்தில் சில ஊர்க் காரர்கள் ஓர் ஆட்டைப் பலியிட்டனர். கீழே பறந்து வந்த கழுகு எரிந்து கொண்டிருந்த ஒரு மாமிசத் துண்டை தன் கூட்டிற்குத் தூக்கிச் சென்றது. ஒரு பலத்த காற்று அடித்தது. கூட்டில் தீப்பிடித்தது. கழுகுக் குஞ்சுகள் பாதி எரிந்தவாறு தரையில் விழுந்தன. பிறகு நரி அந்த இடத்திற்கு ஓடி வந்தது. கழுகு பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவற்றை உண்டது.

நீதி: துரோகம் செய்தவர் மனித தண்டனையில் இருந்து தப்பிக்கலாம், ஆனால் தெய்வ தண்டனையில் இருந்து தப்பிக்க இயலாது.