ஈசாப் நீதிக் கதைகள்/கழுகும், காகமும், மேய்ப்பாளரும்

ஒரு நாள் ஒரு கழுகு ஓர் ஆட்டை நோக்கிப் பாய்ந்து தன் நகங்களால் பற்றி அதைத் தூக்கிச் செல்வதை ஒரு காகம் கண்டது. "குறித்துக் கொள், இதை நானே செய்வேன்" என காகம் தனக்குத் தானே கூறிக் கொண்டது. எனவே ஆகாயத்தில் உயரப் பறந்தது. பிறகு வேகமாக இரு சிறகுகளையும் ஒடுக்கிக் கொண்டு ஒரு செம்மறியாட்டுக் கடாவின் முதுகை நோக்கி பாய்ந்தது. ஆனால் ஆட்டின் கம்பளியில் அதன் நகங்கள் மாட்டிக் கொண்டன. காகம் சிறகடித்தது. ஆனால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. எந்த முயற்சியும் காகத்திற்குப் பலனளிக்கவில்லை. ஆடு மேய்ப்பாளர் சிறிது நேரத்தில் வந்தார். "இதைத் தான் நீ செய்து கொண்டிருக்கிறாயா?" அவர் கூறினார். காகத்தின் இரு சிறகுகளையும் கட்டி குழந்தைகளிடம் காட்டுவதற்காகத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். உருவம் வித்தியாசமாக இருந்த காகத்தை என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. "இது என்ன பறவை தந்தையே?" குழந்தைகள் கேட்டனர். "இது ஒரு காகம்" அவர் கூறினார். "ஆனால் தன்னை ஒரு கழுகாகக் கருதிய காகம்" என்றார்.

நீதி: உன் சக்திக்கு மீறி முயன்றால், நீ பட்ட சிரமம் வீணாகும், நீ தோல்வியை மட்டும் வரவழைக்காமல் அவமானத்தையும் வரவழைப்பாய்.