ஈசாப் நீதிக் கதைகள்/ஆடு மேய்ப்பாளரும், காட்டு ஆடுகளும்

ஓர் ஆடு மேய்ப்பாளர் புல்வெளியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காட்டு ஆடுகள் அவரது மந்தையை நோக்கி வந்து கலப்பதைக் கண்டார். அந்த நாளின் முடிவில் அனைத்து ஆடுகளையும் தனது வீட்டிற்கு ஓட்டிச் சென்றார். ஒரே பட்டியில் அனைத்து ஆடுகளையும் அடைத்தார். அடுத்த நாள் கால நிலை மோசமாக இருந்ததால் எப்போதும் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல அவரால் இயலவில்லை. எனவே அவர் ஆடுகளை வீட்டில் உள்ள பட்டியிலேயே அடைத்து அவற்றுக்கு உணவிட்டார். தனது ஆடுகளுக்கு அவற்றின் பசிக்கும் அளவுக்கு உணவு கொடுத்தார். அதே நேரத்தில், காட்டு ஆடுகளுக்கு அவற்றால் எவ்வளவு உணவு உண்ண முடியுமா அந்த அளவு உணவையும், அதற்கு மேலும் கொடுத்தார். ஏனெனில், காட்டு ஆடுகள் தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். தான் அவற்றுக்கு நன்றாக உணவிட்டால் தன்னை விட்டு அவை செல்லாது என்று எண்ணினர். கால நிலை மேம்பட்ட போது புல்வெளிக்கு அனைத்து ஆடுகளையும் அவர் மீண்டும் ஓட்டிச் சென்றார். ஆனால் ஆடுகள் குன்றுக்கு அருகில் சென்ற போது மந்தையிலிருந்து காட்டு ஆடுகள் பிரிந்து குன்றுப் பகுதிக்குச் சென்று விட்டன. இதைக் கண்ட ஆடு மேய்ப்பாளர் அறுவறுப்படைந்தார். நன்றியற்ற தன்மைக்காக அவற்றை வசைபாடினார். "போக்கிரிகள்!" என்றார். "உங்களை நான் இவ்வளவு நல்ல முறையில் நடத்தியதற்குப் பிறகு இது போல நீங்கள் ஓடுவது சரியில்லை!" என்று கூறினார். இதைக் கேட்ட போது ஒரு காட்டு ஆடு திரும்பிக் கூறியது "ஆமாம். நீ எங்களை நல்ல விதமாக நடத்தினாய். உண்மையில் அளவுக்கு மீறி நல்ல விதமாக நடத்தினாய். புதிதாக வந்த எங்களைப் போன்றவர்களை உன்னுடைய சொந்த ஆடுகளை விட நல்ல விதமாக நடத்தினாய். இதே போல், நாளை உனது மந்தையில் சேருவதற்கு வரும் புதிய ஆடுகளை நன்றாகக் கவனிப்பதற்காக, எங்களை கவனிக்காமல் விட்டுவிடுவாய்" என்று கூறியது.


நீதி: புதிய நண்பர்களுக்காகப் பழைய நண்பர்களை மோசமாக நடத்துவது என்பது முட்டாள் தனமானது.