அறன் வலியுறுத்தல்

<left> « முன் பக்கம்: நீத்தார் பெருமை | திருக்குறள் » பாயிரவியல் » அறன் வலியுறுத்தல் | அடுத்த பக்கம்: இல்வாழ்க்கை » </left>

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
  • சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்க கூடிய வழி வேறென்ன இருக்கிறது.
32. அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
  • நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
  • செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
  • மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
  • பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
  • பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்த பின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
  • அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல் வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவையாகக கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.
38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
  • பயனற்றதாக் ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
  • தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும்; அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
  • பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.


« முன் பக்கம்: நீத்தார் பெருமை | பொருளடக்கம் | அடுத்த பக்கம்: இல்வாழ்க்கை »

"https://ta.wikibooks.org/w/index.php?title=அறன்_வலியுறுத்தல்&oldid=17607" இலிருந்து மீள்விக்கப்பட்டது