7-வது திருமொழி - தொடர்சங்கிலிகை

தளர்நடைப் பருவம்

தொகு

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்கு பொன்மணி யொலிப்ப*

படுமும் மதப்புனல் சோர வாரணம் பையநின்றூர் வதுபோல்*

உடன்கூடிக் கிண்கிணி யாரவாரிப்ப உடைமணி பறைகறங்க*

தடந்தாள் இணைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ. (1)


செக்க ரிடைநுனிக் கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைப்போல்*

நக்க செந்துவர்வாய்த் திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக*

அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்தசயனன்*

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ. (2)


மின்னுக் கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ்பரி வேடமுமாய்*

பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்*

மின்னல் பொலிந்ததோர் கார்முகில் போலக் கழுத்தினில் காறையொடும்*

தன்னில் பொலிந்த இருடி கேசன் தளர்நடை நடவானோ. (3)


கன்னற்குடம் திறந்தா லொத்தூறிக் கணகண சிரித்து வந்து*

முன்வந்து நின்று முத்தம்தரும் என்முகில் வண்ணன் திருமார்வன்*

தன்னைப்பெற் றேற்குத்தன் வாயமுதம்தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ. (4)


முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட*

பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவதுபோல்*

பன்னி யுலகம் பரவியோவாப் புகழ்ப்பல தேவ னென்னும்*

தன்நமபி யோடப் பின்கூடச் செலவான் தளர்நடை நடவானோ . (5)


ஒருகாலில் சங்குஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்த மைந்த*

இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினை படநடந்து*

பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின்மேல் பின்னையும் பெய்துபெய்து*

கருகார்க் கடல்வண்ணன் காமர்தாதை தளர்நடை நடவானோ. (6)


படர்பங்கய மலர்வாய் நெகிழப் பனிபடு சிறுதுளி போல்*

இடங்கொண்ட செவ்வா யூறியூறி இற்றிற்று வீழ நின்று*

கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல்போல் உடைமணி கண்கணென*

தடந்தா ளிணைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ. (7)


பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய*

அக்கு வடமழிந் தேறித் தாழ அணியல்குல் புடைபெயர*

மக்கள் உலகினில் பெய்தறியா மணிக்குழவி யுருவின்*

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ. (8)


வெண்புழுதிமேல்பெய்து கொண்டளைந்ததோர் வேழத்தின்கருஙகன்றுபோல்*

தென்புழுதி யாடித் திரிவிக் கிரமன் சிறுபுகர்பட வியர்த்து*

ஒண்போதலர் கமல சிறுக்கா லுரைத்துஒன்றும் நோவாமே*

தண்போது கொண்ட தவிசின்மேதே தளர்நடை நடவானோ. (9)


திரைநீர்ச் சந்திர மண்டலம்போல் செங்கண்மால் கேசவன்*தன்

திருநீர் முகத்துத் துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர*

பெருநீர்த் திரையெழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம்

தருநீர்* சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ. (10)


ஆயர்குலத்தினில் வந்துதோன்றிய அஞ்சன வண்ணந் தன்னை*

தாயர்மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை*

வேயர்புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்*

மாயன் மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப் பெறுவர்களே. (11)


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்