7-வது திருமொழி - தங்கையை மூக்கும்

 --வெ.ராமன் 10:17, 25 ஏப்ரில் 2006 (UTC)

 கங்கைக் கரையின் கண்டமெண்ணும் திருப்பதி (தேவப்பிரயாகை)

         அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம்தாசரதிபோய்*
எங்கும்தன் புகழா விருந்து அரசாண்ட எம்புருடோத்தமனிருக்கை*
கங்கை கங்கை யென்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென்னும் கடிநகரே.        1

சலம் பொதியுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச*
மலர்ந்தெழுந்தணவு மணிவண்ண வுருவின் மால்புருடோ த்தமன் வாழ்வு*
நலம்திகழ்சடையான் முடிக்கொன்றைமலரும்  நாரணன் பாதத்துழாயும்*
கலந்திழி புனலால் புகர்படுகங்கைக் கண்டமென்னும் கடிநகரே.             2

அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண்டெறிந்து* அங்கு
எதிர்முக வசுரர் தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை*
சதுமுகன் கையில் சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில் தங்கி*
கதிர்முகமணி கொண்டிழி புனல்கங்கைக்  கண்டமென்னும் கடிநகரே.       3

இமையவர் இறுமாந்திருந் தரசாள ஏற்று வந்தெதிர் பொருசேனை*
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புருடோத்தமன் நகர்தான்*
இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத்தாட*
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே. 4

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும்*
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புருடோ த்தமன் வாழ்வு*
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம்*
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே.   5

தலைப் பெய்து குமுறிச்சலம் பொதிமேகம் சலசல பொழிந்திடக் கண்டு*
மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புருடோத்தமன்  வாழ்வு*
அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட*
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே. 6

விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந்தவன் தலைசாடி*
மற்பொருதெழப் பாய்ந்து அரையன யுதைத்த மால்புருடோத்தமன் வாழ்வு*
அற்புத முடைய அயிராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும் *
கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென்னும் கடிநகரே.             7

திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரைவேந்து தன்மைத்துனன் மார்க்காய்*
அரசினை யவிய அரசினை யருளும் அரிபுருடோத்தம னமர்வு *
நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு* இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென்னும் கடிநகரே.         8

வடதிசை மதுரை சாளக்கிராமம்  வைகுந்தம் துவரை அயோத்தி*
இடமுடை வதரி யிடவகையுடைய எம்புருடோத்தம னிருக்கை*
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரைமரம்சாடி*
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடிநகரே.         9

மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்கு  இரக்கம் நன்குடைய எம்புருடோத்தம னிருக்கை*
மூன்றடிநிமிர்த்து மூன்றினில்தோன்றி  மூன்றினில் மூன்றுருவானான்*
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே.  10

பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுருடோத்தமனடிமேல்*
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்  விட்டுசித்தன் விருப்புற்று*
தங்கிய அன்பால் செய்ததமிழ்மாலை தங்கிய நாவுடையார்க்கு*
கங்கையில் திருமால் கழலிணைக்கீழே  குளித்திருந்த கணக்காமே.       11

         பெரியாழ்வார் திருவடிகளே சரணம்