2-வது திருமொழி - சீதக்கடல்

திருப்பாதாதிகேச வண்மை

வெண்டிளையால் வந்த கலித்தாழிசை


சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி

கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த

பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்

பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்துகாணீரே.


முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்

தத்திப்பதிந்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்

பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்துகாணீரே.


பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை

அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை

இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்

கணைக்கால்இருந்தவா காணீரே காரிகை.யீர் வந்துகாணீரே.


உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண

இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்

பழந்தாம்பாலோச்ச பயத்தால்தவழ்தான்

முழந்தாளிருந்தவா காணீரே முகிழ்முலையீர் வந்துகாணீரே.


பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு

உறங்குவான்போலே கிடந்தஇப்பிள்ளை

மறங்கொளிரணியன் மார்வைமுன்கீண்டான்

குறங்குகளை வந்துகாணீரே குவிமுலையீர் வந்துகாணீரே.


மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை

சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்

அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்

முத்தம்இருந்தவா காணீரே முகிழ்நகையீர் வந்துகாணீரே.


இருங்கைமதறுகளி ஈர்க்கின்றவனை

பருங்கிப்பறித்துக் கொண்ஓடுபரமன்றன்

நெருங்குபவளமும் நேர்காணும்முத்தும்

மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்துகாணீரே.


வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து

தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்

நந்தன்மதலைக்கு நன்றுமழகிய

உந்திஇருந்தவா காணீரே ஒளியிழையீர் வந்துகாணீரே.


அதிருங்கடல்நிற வண்ணனை ஆய்ச்சி

மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து

பதறப்படாமே பழந்தாம்பாலார்த்த

உதரம்இருந்தவா காணீரே ஒளிவளையீர் வந்துகாணீரே.


பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு

இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை

குருமாமணிப்பூண் குலாவித்திகழும்

திருமார்விருந்தவா சேயிழையீர் வந்துகாணீரே.


நாள்களோர் நாலைந்துதிங்களளவிலே

தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்

வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்

தோள்கள்இருந்தவா காணீரே சுரிகுழளீர் வந்துகாணீரே.


மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற

செய்த்தலை நீலநிறத்துச்சிறுபிள்ளை

நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய

கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர் வந்துகாணீரே.


வண்டமர் பூங்குழல் ஆய்ச்சிமகனாக

கொண்டுவளர்க்கின்ற கோவலர்குட்டற்கு

அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய

கண்டம்இருந்தவா காணீரே காரிகையீர் வந்துகாணீரே.


எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு

அந்தொண்டைவாயமு தாதரித்து ஆயச்சியர்

தந்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்

செந்தொண்டைவாய் வந்துகாணீரே சேயிழையீர் வந்துகாணீரே.


நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்

நாக்குவழித்து நீராட்டும் இந்நம்பிக்கு

வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்

மூக்கும்இருந்தவா காணீரே மொய்குழலீர் வந்துகாணீரே.


விண்கொள்அமரர்கள் வேதனைதீரமுன்

மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து

திண்கொள்அசுரரைத் தேயவளரகின்றான்

கண்கள்இருந்தவா காணீரே கனவளையீர் வந்துகாணீரே.


பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய

திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற

உருவுகரிய ஒளிமணிவண்ணன்

புருவம்இருந்தவா காணீரே பூண்முலையீர் வந்துகாணீரே.



மண்ணும்மலையும் கடலும்உலகேழும்

உண்ணும்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு

வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை

திண்ணம்இருந்தவா காணீரே சேயிழையீர் வந்துகாணீரே.


முற்றிலும்தூதையும் முன்கைமேல்பூவையும்

சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை

பற்றிப்பறித்துக் கொண்டும் ஓடுபரமன்றன்

நெற்றிஇருந்தவா காணீரே நேரிழையீர் வந்துகாணீரே.


அழகியபைம்பொன்னின் கோள்அங்கைக்கொண்டு

கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப

மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்

குழல்கள்இருந்தவா காணீரே குவிமுலையீர் வந்துகாணீரே.


தரவு கொச்சக கலிப்பா


சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன

திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்

விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்

உரைப்பார்போய் வைகுந்தத்தொன்றுவர்தாமே.


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

"https://ta.wikibooks.org/w/index.php?title=2-வது_திருமொழி_-_சீதக்கடல்&oldid=9348" இலிருந்து மீள்விக்கப்பட்டது