10-வது திருமொழி - நெறிந்தகருங்குழல்

--வெ.ராமன் 09:02, 18 ஏப்ரில் 2006 (UTC)

இலங்கைக்கு  தூது சென்ற திருவடி சீதாபிராட்டியைக் கண்டு
 சக்கரவர்த்தித்   திருமகன்  கூறிய சில அடையாளங்களைக் 
         கூறிக் கணையாழி கொடுத்துக் களிப்பித்தல்

                     கலிவிருத்தம்
நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம்*
செறிந்த மணிமுடிச் சனகன் சிலையிறுத்து நினைக்கொணர்ந்தது
அறிந்து* அரசுகளை கட்ட அருந்தவத்தோன் இடைவிலங்க*
செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம்.            1

அல்லியம் பூமலர்க் கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்*
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண்மடமானே!*
எல்லியம் போதினிதிருத்தல் இருந்ததோரிட வகையில்*
மல்லிகை மாமாலை கொண்டுஅங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்.          2

கலக்கிய மாமனத் தனளாய்க் கைகேசி வரம்வேண்ட*
மலக்கிய மாமனத் தனனாய் மன்னவனு மறாதொழிய*
குலக்குமரா!  காடுறையப்போ என்றுவிடை கொடுப்ப*
இலக்குமணன் தன்னொடும்  அங்குஏகியது ஓரடையாளம்                3

வாரணிந்த முலைமடவாய்! வைதேவீ! விண்ணப்பம்*
தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ! கேட்டருளாய்*
கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில்*
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓரடையாளம்.                       4

மானமருமெல்நோக்கி! வைதேவீ ! விண்ணப்பம்*
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து*
தேனமரும் பொழிற்சாரல் சித்திரகூடத்து இருப்ப*
பால்மொழியாய்!  பரதநம்பி பணிந்ததும் ஓரடையாளம்.                5

சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட*
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி*
வித்தகனே! இராமாவோ! நின்னபயம் என்றுஅழைப்ப*
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்.                   6

மின்னொத்த நுண்ணிடையாய்! மெய்யடியேன் விண்ணப்பம்*
பொன்னொத்த மானொன்று புகுந்துஇனிது விளையாட*
நின்னன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான்ஏக*
பின்னேஅங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம்.                 7

மைத்தகு மாமலர்க் குழலாய்! வைதேவீ! விண்ணப்பம்*
ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட*
அத்தகுசீர் அயோத்தியர்கோன் அடையாளமிவை மொழிந்தான்*
இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே.                  8

திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள்*
மிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் மோதிரம்கண்டு*
ஒக்குமால் அடையாளம் அனுமான்! என்றுஉச்சிமேல்
வைத்துக் கொண்டு* உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே.          9

வாராரும் முலைமடவாள் வைதேவி தனைக்கண்டு*
சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்*
பாராரும் புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான் பாடல்வல்லார்*
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.                     10

     பெரியாழ்வார் திருவடிகளே சரணம்