1ம் திருமொழி

அழகிய மணவாளன் - 1

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி

இனத்துத்தி யணிபணமா யிரங்கள் ஆர்ந்த*

அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்

அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி*

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி

திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்*

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்

கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே? 1


வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த

வளையுடம்பின் அழல்நாகம் உமிழ்ந்த செந்தீ*

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்

மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்*

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்

கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென்

வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே? 2


எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்

எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு*

எம்மாடும் எழிற்கண்க ளெட்டி னோடும்

தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற* செம்பொன்

அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற

அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*

அம்மான்றன் அடியிணைக்கீழ் அலர்கள் இட்டங்கு

அடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே? 3


மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை

வண்ணணைஎன் கண்ணணை* வன்குன்ற மேந்தி

ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை

அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்

பாவினை*அவ் வடமொழியைப் பற்றற் றார்கள்

பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*

கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள்

கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே? 4


இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத்

தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த*

துணையில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால்

தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த*

மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ

மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*

மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென்

மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே? 5


அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை

அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்*

தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித்

திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்*

களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக்

கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*

ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்

உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே? 6


மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி

ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்

துறந்து*இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத்

தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான*

அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி

அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*

நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள்

நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே? 7


கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்

கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்*

காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக்*

கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப*

சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த

திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்*

மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி

வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே? 8


தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்

குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி*

ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்

மழைசோர நினைந்துருகி யேத்தி* நாளும்

சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும்

திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்*

போராழி யம்மானைக் கண்டு துள்ளிப்

பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே? 9


வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய

மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய

துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்

சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ*

அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்

அணியரங்கன் திருமுற்றத்து* அடியார் தங்கள்

இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்

இசைந்துடனே யென்றுகொலோ விருக்கும் நாளே? 10


திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத்

திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்*

கடல்விளங்கு கருமேனி யம்மான் தன்னைக்

கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால்*

குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்

கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த*

நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்

நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 11


குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்

"https://ta.wikibooks.org/w/index.php?title=1ம்_திருமொழி&oldid=9380" இலிருந்து மீள்விக்கப்பட்டது