விடுதலையை விரும்புவோம்

விடுதலையடைந்து அறுபது ஆண்டுகளாகி விட்டதென்று ஆனந்தக் கூத்தாடி ஓய்வதற்குள் இப்படியொரு தலைப்பா! விசித்திரம் தான்!

என்ன செய்வது? சுதந்திரச் சூழல் இன்று பலமுனைகளிலும் சிக்குண்டு சுவாசிக்க சிரமப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றதே! சமூகப் பொருளாதார சுதந்திரம் பற்றியதா? அதைப் பற்றிதான் பலரும் தினசரி பல்லவிப் பாடுகின்றனரே! பிறகு?

டிஜிட்டல் காலம் இது! பல்துலக்குவது துவங்கி படுக்கைக்குப் போகும் நேரம் வரை எல்லாம் டிஜிட்டல் மயமாக்கப் பட்டு வருவது நாமறியாததா என்ன? நகைகள், ஆடைகள், பேருந்து, இரயில், சினிமா டிக்கட், வருமான வரித் தாக்கல் எனச் சகலமும் எலியத்தின் (mouse) ஒரு சொடுக்கில் நிறைவடைந்து நிறைவையும் தருகின்றனவே!

கணினி மட்டுமென்றில்லை, அரை நாண் கயிறுக்கு அடுத்தப் படியாக உடன் ஒட்டி உறவாடத் துவங்கி விட்ட செல் பேசி உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் சேர்த்தே சொல்கிறோம்!

உடலுக்கு உயிரைப் போன்று மேலேச் சுட்டிய மின்னணுச் சாதனங்கள் அனைத்துக்கும் உயிராய் இருப்பது மென்பொருள்! கண்ணுக்கு தெரியாத இதை உருவாக்குவதில் நாம் வல்லுநர்கள் என மார்தட்டிச் சொல்கிறோம். கண்ணுக்குத் தெரிந்த இவ்விடயத்தைச் சொல்லி நம் கண்களைக் கட்டும் வித்தைகளறியாது இருக்கிறோம்! என்ன செய்ய?

இவ்வித்தைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே இத்தொடரின் நோக்கம்..

சந்தைக்கு போகிறோம்.. சுண்டைக்காய் வாங்க! என் கடையில் வாங்கியதால், அதில் குழம்பு மட்டும்தான் ஆக்கிச் சாப்பிடலாம் எனக் கடைக் காரர் சொன்னால் என்ன செய்வீர்கள்? சொல்லத்தான் அவருக்கு உரிமையுண்டா?

வாங்கியப் பிறகு அதை என்ன செய்யவேண்டும் என்பதும், தங்களின் தேவைக் கேற்ப கூட்டு, பொறியல், குழம்பு என எவ்வகையிலும் சமைப்பதும் தங்கள் உரிமையென்றும் சண்டைக்கு போவீர்கள் தானே!

சரி! இன்னும் ஒரு படி மேலே போய் அந்தக் கடைக்காரர், இந்தச் சுண்டைக்காய் எங்களிடமிருந்து வாங்கப் பட்டதால் இதை பிறருக்கு வழங்கும் அருகதையைத் தாங்கள் இழக்கிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்! காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சார் பேசுகிற வசனம் மாதிரி "குமட்டில குத்துவேன்னு" சொல்லத் தோணும் தானே!

நாம விலைக் கொடுத்து வாங்கின சுண்டைக்காய். இதை விற்போம், விதைப்போம், பயிராக்குவோம், பகிர்ந்துக் கொள்வோம் அதைக் கேட்க நீ யாருன்னு வீர பாண்டிய கட்டபொம்மன் ரேஞ்சுக்கு வசனம் பேசனும்னு தோணும் தானே!

சரி! சாதாரண சுண்டைக் காய்க்கே இவ்ளோ வீராப்போட இருக்கோமே! நாம பயன்படுத்துகிற மென்பொருள் நமக்கிந்த அடிப் படைச் சுதந்திரத்தை கொடுக்குதான்னு என்றைக்காவது யோசிச்சிருக்கோமா! பிரபலமாக போலித்தனமாகவும், அங்கொன்றும் இங்கொன்றுமாக உண்மையான உரிமத்தோடும் இன்று பயன்படுத்தப்படும் இயங்குத் தளத்தின் உரிமம் சொல்வதன் தமிழாக்கத்தைக் கேளுங்கள்...

இந்த மென்பொருளை தாங்கள் வாங்கவில்லை. இதனைப் பயன்படுத்தும் உரிமம் மட்டுமே உங்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மீதான அனைத்து உரிமங்களும் மைக்ரோசாப்டுக்கே. வேறுவகையிலான சட்டங்கள் உங்களுக்கு இதைப் பயன்படுத்துவதற்கு சிறப்பு சலுகைகள் வழங்கிடாத பட்சத்தில் இந்த உடன்படிக்கைக்கு உட்பட்டு இம்மென்பொருளைப் பயன்படுத்துவதற்குச் சம்மதிக்கின்றீகள்.

நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்வது போலில்லை? சுகத்துக்காக சுதந்திரத்தை நம் சமூகம் விலையாகக் கொடுத்துக் கொண்டிருப்பது புலப்படுகிறதா? சுண்டைக்காய்க்கு மல்லு கட்டிய நாம் மென்பொருள் விடயத்தில் கோட்டை விடப் போகிறோமா?

தலைப்பின் நோக்கம் புரிந்திருக்குமே! அதான் விடுதலை விரும்பத் துவங்குவோமென்கிறோம்! விரும்பினால் மட்டும் போதுமா? அதற்கான வழி காட்ட வேண்டாமா எனத் தாங்கள் நினைப்பது புரிகிறது. வரும்வாரங்களில் வழிக்கான வாசல் திறக்கும்!

"https://ta.wikibooks.org/w/index.php?title=விடுதலையை_விரும்புவோம்&oldid=11601" இலிருந்து மீள்விக்கப்பட்டது