வாழ்க்கை வரலாறுகள்/இராஜகோபாலாச்சாரி
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (Chakravarti Rajagopalachari, 10 திசம்பர் 1878 – 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.