யாத்திரைப் பத்து/உரை 37-40

புரள்வார் தொழுவார் புகழ்வாராய்

இன்றே வந்தாள் ஆகாதீர்

மருள்வீர் பின்னை மதிப்பாரார்

மதியுட் கலங்கி மயங்குவீர்

தெருள்வீ ராகில் இதுசெய்மின்

சிவலோ கக்கோன் திருப்புயங்கள்

அருளார் பெறுவார் அகலிடத்தே

அந்தோ அந்தோ அந்தோவே.


பதப்பொருள் :

புரள்வார் - புரள்பவராயும், தொழுவார் - வணங்குபவராயும், புகழ்வார் - துதிப்பவராயும், இன்றே வந்து - இப்பொழுதே வந்து, ஆள் ஆகாதீர் - ஆட்படாதவர்களாய், மருள்வீர் - மயங்குகின்றவர்களே, பின்னை - பின்பு, மதியுள் கலங்கி - அறிவினுட்கலக்கமடைந்து, மயங்குவீர் யாவர்? தெருள்வீர் ஆகில் - தௌ¤வடைய விரும்புவீரானால், இது செய்மின் - எம்பெருமானுக்கு ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள்; சிவலோகக்கோன் - சிவலோக நாதனாகிய, திருப்புயங்கன் - பாம்பணிந்த பெருமானது, அருள் - திருவருளை, அகல் இடத்து - அகன்ற உலகின்கண், ஆர் பெறுவார் - யார் பெற வல்லார்கள்? அந்தோ அந்தோ அந்தோ - ஐயோ ஐயோ ஐயோ!


விளக்கம் :

புரளுதல் முதலாயின அன்பு வயப்பட்டார் செயல்.

'போற்றி என்றும் புகழ்ந்தும் புரண்டும்நின்று ஆற்றல் மிக்கஅன் பால்அழைக் கின்றிலேன்' என்று முன்பும் அடிகள் கூறியிருத்தல் அறிக.

அறிவு வயப்பட்டார் ஆராய்ச்சியில் தலைப்பட்டுப் புரளுதல் முதலியவற்றைச் செய்யக் கூசுவர் ஆதலின், அவர் இறைவனுக்கு ஆளாகமாட்டார் என்றபடி. 'இது செய்மின்' என்றது, புரளுதல் முதலியவற்றைச் செய்து இறைவனுக்கு ஆட்படுக' என்றதாம். இறைவனது திருவருள் எத்தகையோராலும் அடைதற்கு அரியது என்பார், 'திருப்புயங்கன் அருள் ஆர் பெறுவார் அகலிடத்தே' என்றும், அத்ததைகய அரிய அருள் புரளுதள் முதலியவற்றால் எளிதல் பெறுவதாயிருக்க, 'அவற்றைச் செய்யாதிருத்தல் என்ன அறியாமை! ' என்பார், 'அந்தோ அந்தோ அந்தோவே' என்றும் கூறினார்.

இதனால், இறைவன் திருவருளைப் பெற முயலாதவர் தாழ்வடைவர் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து/உரை_37-40&oldid=2379" இலிருந்து மீள்விக்கப்பட்டது