பெரியாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு

--வெ.ராமன் 10:07, 9 ஜூன் 2006 (UTC)

			பெரியாழ்வார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலி 47 வதான உருத்ரோதன வருடம் ஆனி மாதம்
சுக்ல பக்ஷம் ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்
குல தம்பதி முகுந்தாசார்யாருக்கும் பதுமையாருக்கும் ஓர் ஆண் குழந்தை
பிறந்தது. விஷ்ணுசித்தர் என்று பெயரிடப்பட்ட அம்மகவே கருடனின்
அம்ஸமாக கருதப்படும் பெரியாழ்வார். இவர் இயல்பாகவே வட பெருங் 
கோயிலுடையான் ஆன எமபெருமானிடம் பக்தி மிக்கவர். எம்
பெருமானுக்கு எந்த தொண்டு செய்யலாம் என்று சிந்தித்த போது
கண்ணன் கம்சனின் திருமாலாகாரரிடம் பூக்களை இரந்து அவற்றை சூடி
மகிழ்ந்த நிகழ்வால் கவரப் பெற்றார். எனவே மாலை கட்டி சாத்துவதே
அவனுக்கு உகந்தது என முடிவெடுத்தார். அதன்படி நந்தவனம்
உண்டாக்கி மாலை கட்டி அதை பெருமானுக்கு சாத்தி மகிழ்ந்தார்.

அக்காலத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வருகையில் ஒரு திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
புதியவனைக் கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில்,  மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “நமக்கு இப்போது குறையொன்றுமில்லை. மறுமைக்காக நாம்
செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.

செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய எம்பெருமான்
கிழியை அறுத்து வாவென்றார். அது வேதாந்த பரமான சான்றோருக்கு
நானோ ஏதும் அறியாதவன் என்ற ஆழ்வாரின் வாதத்தை பரமன் ஏற்க
மறுத்தான். விழித்தெழுந்து அது விடியற் போது என்றுணர்ந்த ஆழ்வார்
இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.

மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா?  என்று சலசலத்தனர். என்றாலும் அபிமான துங்கனான
செல்வநம்பி மறுமைக்குத் தேவையான மார்க்க தரிசனம் காட்ட
ஆழ்வாரை வேண்டினான். ஆழ்வாரும் ஸ்ரீமன் நாராயணனே பரமேட்டி
என்று ஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண மேற்கோள்களால்
விளக்கினார். அப்போது கிழிகட்டிய தோரணமானது அவர் முன்
வளைந்து கிழியை அறுக்க ஏதுவாக நின்றது. ஆழ்வாரும் வேந்தரும்
மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.

இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார். ஆழ்வார் எமபெருமானின்
கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர்
மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த
யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி
திருப்பல்லாண்டு பாடி அருளினார். மன்னன் மற்றுள்ள பக்தர்களையும்
தன்னோடு பாடச்செய்தார்.

மனமகிழ்ந்து பணிந்த மன்னனை வாழ்த்தினார். அவன் தந்த பரிசில்களை
ஏற்று வில்லிபுத்தூர் திரும்பினார். பொற்கிழியையும் பரிசில்கனையும்
வட பெருங் கோயிலுடையானுக்குக் கொடுத்து விட்டு எப்போதும் போல்
மாலை கட்டி சாத்தும் தொண்டைத் தொடர்ந்தார். தன் மனத்துக்கினிய
அவதாரமான கண்ண பிரானின் பிறப்பு, வளர்ப்பு, ஆனிரை மேய்த்தல்,
தீராத விளையாட்டுக்கள் மற்றும் பக்தர்களைக் காக்கும் அவன் பேரருட்
குணங்களை பெரியாழ்வார் திருமொழி எனும் திவ்ய பிரபந்தமாக உலகம்
உய்யப் பாடி அருளினார்.

	நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
          நானூற் றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
       சொல்லறிய வானிதனிற் சோதிவந்தான் வாழியே
          தொடைசூடிக் கொடுத்தாளை தொழுமப்பன் வாழியே
       செல்வநம்பி தனைப்போல சிறப்புற்றான் வாழியே
          சென்றுகிழி யறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
       வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே
          வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே.

		பெரியாழ்வார் திருவடிகளே சரணம்