பிடித்த பத்து/உரை 5-8

விடைவிடா துகந்த விண்ணவர் கோவே

வினையனே னுடையமெய்ப் பொருளே

முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்

முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து

கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட

கடவுளே கருணைமா கடலே

இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.


பதப்பொருள் :

விடை விடாது உகந்த - இடபத்தை விடாமல் விரும்பின, விண்ணவர் கோவே - தேவர் பெருமானே, வினையனேன் உடைய - வினையை உடையேனாகிய எனது, மெய்பொருளே - உண்மையான பொருளே, அடியேன் - அடியேனாகிய யான், முடை விடாது - புலால் நாற்றம் நீங்காது, முழுப் புழுக்குரம்பையில் கிடந்து - முழுவதும் புழு நிறைந்த கூட்டினிற்கிடந்து, அறமூத்து - மிகவும் முதுமை எய்தி, மண்ணாய் - பாழாய், கடைபடா வண்ணம் - கீழ்மையடையா வகை, காத்து என்ன ஆண்ட - தடுத்து என்னை ஆண்டருளின, கடவுளே - எல்லாம் கடந்தவனே! கருணை மாகடலே - கருணையாகிய பெருங்கடலே, இடைவிடாது - இடையறாமல், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - 'உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

விளக்கம் :

விடை, அறத்தின் சின்னம், அறத்தை நடத்துபவன் இறைவனாகலின், 'விடை விடாதுகந்த விண்ணவர் கோவே' என்றார். இவ்வுடம்பு புழுக்கள் நிறைந்த கூடு ஆதலின், 'முழுப் புழுக்குரம்பை' என்றார். இக்கருத்துப் பற்றியே 'முடையார் புழுக்கூடு' என்று திருச்சதகத்தில் கூறியிருத்தலையும் காண்க. 'இறை நினைவிலேயே அழுந்தியிருக்க வேண்டும்' என்பார், 'இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார்.

இதனால், இறைவன், புலால் துருத்தியாகிய உடம்பைப் பூந்துருத்தியாக்க வல்லவன் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிடித்த_பத்து/உரை_5-8&oldid=2381" இலிருந்து மீள்விக்கப்பட்டது