பிடித்த பத்து/உரை 29-32
அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
பதப்பொருள் :
அத்தனே - தந்தையே, அண்டர் அண்டமாய் நின்ற - தேவராயும் தேவர் உலகமாயும் நின்ற, ஆதியே - முதல்வனே, யாதும் ஈறு இல்லா - சிறிதும் முடிவு இல்லாத, சித்தனே - ஞான வடிவினனே, பத்தர் சிக்கெனப் பிடித்த - அடியார்கள் உறுதியாகப் பற்றின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, பித்தனே - அன்பர்பால் பேரன்பு கொண்டவனே, எல்லா உயிருமாய்த் தழைத்து - எல்லா உயிர்களுமாய்க் கலந்து விளங்கியும், பிழைத்து - நீங்கி, அவை அல்லையாய் நிற்கும் - அவை அல்லாமல் தன்மையால் வேறாய் இருக்கின்ற, எத்தனே - மாயம் உடையவனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கெழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
விளக்கம் :
அறிவே வடிவமாய் உள்ளவனாதலின், முதலும் முடிவும் இன்றி விளங்குகின்றான் என்பார், 'யாதும் ஈறில்லாச் சித்தனே' என்றும், உயிர்களிடத்து விருப்பமுடையவனாதலின், 'பித்தனே' என்றும், உயிரோடு கலந்திருந்தும் அவற்றில் தொடக்குறாது நிற்றலின், 'எத்தனே' என்றும் விளித்தார்.
இதனால், இறைவனது இயல்பு கூறப்பட்டது.