பிடித்த பத்து/உரை 17-20

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்

உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே

மெய்ப்பதம் அளியா வீறிலி யேற்கு

விழுமிய தளித்ததோ ரன்பே

செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தி

செல்வமே சிவபெரு மானே

எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே.


பதப்பொருள் :

உனக்கு ஒப்பு இல்லா - உனக்கு ஒருவரும் நிகரில்லாத, ஒருவனே - ஒருத்தனே, அடியேன் உள்ளத்துள் - அடியேனது மனத்தில், ஒளிர்கின்ற ஒளியே - விளங்குகின்ற ஒளியே, மெய்ப்பதம் அறியா - உண்மையான நிலையை அறியாத, வீறு இலியேற்கு - பெருமையில்லாத எனக்கு, விழுமியது - மேன்மையாகிய பதத்தை, அளித்தது - கொடுத்ததாகிய, ஓர் அன்பே - ஒப்பற்ற அன்பானவனே, செப்புதற்கு அரிய - சொல்வதற்கு அருமையான, செழுஞ்சுடர் மூர்த்தி - வளமையான சுடர் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, எய்ப்பு இடத்து - இளைத்த இடத்தில், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கு எழுந்தருளிச் செல்வது?


விளக்கம் :

இறைவன் தனக்குவமையில்லாதவனாதலின், 'ஒப்புனக்கில்லா ஒருவனே' என்றார். மெய்ப்பதமாவது, பேரின்ப நிலை. சிறப்பொன்றும் இல்லாத தமக்குச் சிறப்பினை நல்கிய இறைவனது கருணையை, 'அன்பே' என அழைத்தார். எய்ப்பிடமாவது, தமக்கு ஒரு பற்றுக்கோடு இன்றி இளைத்த இடம்.

இதனால், இறைவன் சிறப்பென்னும் முத்திச் செல்வத்தை அருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிடித்த_பத்து/உரை_17-20&oldid=2384" இலிருந்து மீள்விக்கப்பட்டது