பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்
தேசிய கீதங்கள்
1. பாரத நாடு
1. வந்தே மாதரம்
ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி
பல்லவி
வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
- ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
- ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
- வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
- வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) 1
- ஈனப் பறையர்க ளேனும் அவர்
- எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
- சீனத்த ராய்விடு வாரோ? - பிற
- தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 2
- ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
- அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
- தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
- சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 3
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
- ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
- நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
- ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 4
- எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
- யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
- முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
- முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) 5
- புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
- போயின நாட்களுக் கினிமனம் நாணித்
- தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
- தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) 6
தேடிச்சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?