பயனர் பேச்சு:Ravidreams/மணல்தொட்டி/rdbms

இக்கட்டுரைப்பக்கத்தில் உள்ள உரை, தான் தமிழ் விக்கி நூல்களில் எழுத விரும்பும் ஒரு நூல் குறித்த முன்னோட்டமாக பயனர்:வேணுகோபாலன் என்னிடம் தந்தது. இது குறித்த கருத்துக்கள், பங்களிப்புகளை தொடக்க நிலையில் இருந்து நூலை மேம்படுத்துமாறு வேண்டியிருக்கிறார். தற்பொழுதைக்கு உரையின் விக்கியாக்கத்தை விட்டுவிடுவோம். அதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். நூல் நடை, வடிவமைப்பு குறித்த என் கருத்துக்களை மட்டும் பதிகறேன். பிறரும் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன்.

உள்ளடக்கப் பட்டியலையும் அறிமுகக் குறிப்பையும் படித்து நான் புரிந்து கொண்டதை வைத்து இக்கருத்துக்களை பதிகிறேன். பிழையாக இருந்தால் பொறுத்துக் கொள்ளவும். இக்கருத்துக்கள், விக்கி நூல்களில் எழுதப்படக்கூடிய பிற நூல்களுக்கும் பொருந்தும். இக்குறிப்புகள் கட்டுரையைத் தொடங்குபவருக்கு மட்டுமல்லாது, நூலில் பங்குகொள்ள இருக்கும் அனைத்துப் பயனர்களுக்குமான எனது வேண்டல்.

  • தலைப்புகள், துணைத் தலைப்புகள் ஆகியவற்றில் ஆங்கில அடைப்புக்குறி விளக்கங்களை அறவே தவிர்க்கலாம். கட்டுரை உரையில் மிதமாகப் பயன்படுத்தலாம். தேவையான அளவு அருஞ்சொற்பொருள் பட்டியல் விளக்கத்தை பக்கத்தின் இறுதியில் தரலாம். இது பொதுவாகப் பின்பற்றப்படும் விக்கி நடைமுறையும் கூட.
  • வழக்கமான அச்சுத் துறை சார்ந்த எளிய அறிமுக நூல்களில் உள்ள கைப்பிடித்து விளக்கும் வகையில் அமைந்த கட்டுரை நடையை தவிர்க்கலாம். சலிப்பூட்டும் இந்நடை தொழில் சிறப்பு (professional) வாய்ந்த்தாகத் தோன்றவில்லை. இந்நடையில் புரிய வைப்பதில் உள்ள கவனம் அதீத எளிமைப்படுத்தலுக்கு இட்டுச்செல்கிறது என்றும் விடயங்களை மேம்பாக்காக விளக்கிச் செல்கிறது என்பதும் என் எண்ணம்.
  • பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்குப் புரியும் வகையிலான மொழி நடையில் இந்நூல் நடையும் உள்ளடக்க எல்லையும் பரப்பும் இருக்க வேண்டுமா என்பது கேள்விக்குறியது. பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த கணினிகள், கணினியில் பற்றிய பொதுவான எளிய விளக்க நூல் ஒன்றை உருவாக்க முனையலாம். அடிப்படை கணினி அறிவுடையோரே இது போன்ற அடுத்த நிலை துறை சார் கணினி இயல்களை படிக்க முயல்வர் என்பதால், கட்டுரை நடை technical-ஆகவே அமையலாம். வார இதழ்களில் வரும் கணினிக் கட்டுரைகள், 50 - 100 ரூபாய் மதிப்புடைய நூல்களின் எழுத்து நடை ஆகியவற்றை நாம் பின்பற்ற வேண்டாம் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டப்படிப்புக்கான ஒரு பாடப்புத்தகம் அல்லது கையேட்டின் தரத்துடன் இந்நூலை உருவாக்கலாம். இத்தரத்தில் நேரடியாக இக்கருத்துக்களை பகிர்வது கடினம் என்றால், பொதுவான கணினி பின்புலக் கருத்துக்களுக்கான நூலை முதலில் உருவாக்கிவிட்டு, பின்னர் இந்நூலை உருவாக்கலாம். தமிழ் படிக்கத் தெரிந்த கணினி ஆர்வம் உடைய எவருக்கும் எழுதப்படுவது என்பது இத்துறையை மிகவும் எளிமைப்படுத்தி அறிமுகப்படுத்தி விடுமோ என்பது என் கவலை. எனினும், உள்ளடக்கப் பட்டியலை பார்த்து இக்கருத்துக்களை பகிர்வது சற்று அதிகம் தான். நூல் உருவாக உருவாக கருத்துகளை பகிரலாம். உள்ளடக்கங்கள், எழுத்து நடையை மாற்றி அமைக்கலாம்--Ravidreams 12:56, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply
நல்ல முயற்சி. இரவி குறிப்பிட்டதுபோல் இது சற்றே பின்புலம் கொண்ட பயனர்கள் படிக்கக்கூடியது. அதனால், நடையும் நல்ல தரமான பாடப்புத்தகங்களையொத்து இருக்கலாம். ஆங்கில இணைச் சொற்களை தனியாக பின்னிணைப்பு ஒன்றில் தரலாம். உள்ளடக்கச் சட்டத்தில் உள்ள தலைப்புகளுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைப் பார்த்து தமிழில் இணைப்பெயர்கள் தெரியாதவர்கள் :( அறிந்து கொள்ளட்டும். "கவி" போன்ற சொற்கள் அண்மையில் புனையப்பட்டவை போன்று தோன்றுகிறது. இது காரணப் பெயரா?
வணிகப்பெயர்களை மொழிபெயர்க்க வேண்டாம், எழுத்துப்பெயர்ப்புச் செய்தால் போதும். "கவிமொழி அரசன்" என்று எவரைக்/எதைக் குறிப்பிடுகிறீர்கள்? சற்றே இலக்கிய நடையில் உள்ளது, முடிந்தால் மாற்றலாம். மற்றபடி, இம்முயற்சிக்கு எனது முழு ஆதரவு உண்டு. எனக்கு மிகப் பிடித்த பாடங்களில் ஒன்று. இதைப் பற்றி நான் ஓரளவு ஆழமாகக் கற்றுள்ளேன், நானும் எனது நண்பர்களும் ஒரு சிறிய தொடர்புசால் தரவுதளத்தையும் உருவாக்கியிருக்கிறோம். என்னால் முடிந்த அளவு பங்களிக்க முயல்கிறேன். -- Sundar 13:20, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply
மிக நல்ல முயற்சி. தமிழில் முதல் விக்கிநூல். கட்டாயம் செய்யலாம். தமிழில் கலைச்சொற்கள் கண்டுபிடிப்பதும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதிலும் நிறைய கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். --Sivakumar 14:00, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply


கருத்துக்களுக்கு நன்றி.

விகி புத்தகம்/விகிபீடியா ஒரு வழி (means). இலக்கு பெரிய எண்ணிக்கையிலான ஒரு மாணவ/இளைஞர் சமுதாயத்திற்கு தரவுதளம் பற்றிய நேரடியாகப் பயனளிக்கக்கூடிய அறிவை வழங்கும் ஒரு நூலாக இது விளங்க வேண்டும். கணினித்துறையில் வரவிருக்கும் வேலைவாய்ப்புக்களைப் பற்றி மிகப்பெரிய எண்கள் பேசப்படுகின்றன. இத்துறைக்கு தரவுதள மேலாண்மை ஒரு மிக அடிப்படை விஷயம். ஆனால் தொழில் ரீதியாக நான் அடிக்கடி மிகவும் மதிப்பெண்கள் பெற்ற, ஆனால் அடிப்படை விளங்காத பலரைப் பார்க்கிறேன். இதில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் தேர்ச்சி குறைந்தவர்கள். ஆயின் கடின உழைப்பும், புத்திக்கூர்மையும், அடிப்படைகளைக் கற்பதில் ஆர்வமும் கொண்டவர்கள். எனவே இவர்களுக்குப் புரியும் வழியில், மேலும், அறிந்த அறிவை சீக்கிரம் ஒரு வேலை கிடைக்க, மேலும் ஆழமான (ஆங்கிலத்திலுள்ள) பாடங்களைப் படிக்க உபயோகப்படுத்தும் வகையில், பாடங்கள் இருத்தல் அவசியம்.

எனவே செறிவு குறையாமல் சற்று எளிமைப்படுத்தல் (சமயத்தில் சிறிய இலக்கிய சுதந்திரம் எடுத்துக்கொண்டாயினும்), தேவை என்பது அடியவனின் கருத்து.

10வது வரை படித்த தமிழ்வழிக்கல்விப் புத்தகங்களில், ஒவ்வொரு கலைச்சொல்லிற்கும் பின் அடைப்புக்குறிக்குள்ளிருந்த ஆங்கிலச்சொல்லும் என் அம்மா சொற்படி, மனனம் செய்து படித்தது, எனது ஆங்கில வழி மேல் நிலைப்பள்ளி வாழ்க்கைக்கு இன்றியமையாதிருந்தது.

அதுபோலவே, உரிய தமிழ்ச்சொற்களும், சிறந்த எளிய நடையும், கருத்துக்களை ஒரு பயனருக்கு படம்போல் விளக்கினாலும், அவருக்கு புரிந்தபின் அதனை பிற ஆ.கூ.ந (ஆங்கிலம் கூறும் நல்லுலகு)-ற்கு, எடுத்துக்கூற, நேர்காணலில் தேர அவருக்கு அதனதன் ஆங்கில வார்த்தை கூடவே தெரிந்திருக்க வேண்டும். மேலும், குறிப்பாக கணினித்துறையில் அன்றாட மாற்றங்கள் வருகையில், இந்த அறிமுக நூல், மிக எளிதாக ஒரு பயனர், ஆங்கிலத்திலுள்ள இணையக் கருத்துக்களை படித்துத் தெரிந்து கொள்ள உதவ வேண்டும்.


கவி மொழி - மிகச்சமீபத்தில் புனையப்பட்டது. இன்னும் பரவலாக ஏற்கப்படாதது. SQL - கட்டமைப்புள்ள வினவு மொழி. இன்னும் சுருக்கி, கவி மொழி. (உபயோகமும் நன்றாகவே இருக்கும்.... 'இந்த ரிபோர்ட்(?)க்கு தேவையான கவிமொழி எழுதிக்கொண்டுவா' )

கவிமொழி அரசன் - Select Statementற்கு கொடுத்த அடைமொழி. ரவி இதுபோன்ற மசாலாக்களைத் தான் வேண்டாமென்கிறார் எனத் தெரிகிறது. ஓரளவிற்கு அதில் உடன்படுகிறேன். ஆனால், ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆவணம் போல் செறிவு மட்டுமே கொண்டு, மெத்தப் படித்தவர்க்கு மட்டுமாக ஒரு நூல் வேண்டுமா என சிந்திக்க வேண்டும். (we shouldn't try to get a proof of concept of a tech book in tamil, to be read by tech people who already know it in english and to commend, 'yes it conveys it right, well we can say the same in tamil'. The acid test is whether a person who knows only tamil well, reads it and LEARNS it to the point of benefiting from it, either by getting a job, or getting a headstart in further explorations. - _please_ pardon my english here)

நான் இதனை 50-100 ரூபாய் புத்தகம் போலக்காணவில்லை.. சுமார் 10-20 ரூபாய்க்கு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் mass-print செய்து உயர் நிலைப்பள்ளிகள் தோறும் கொடுக்க இயல வேண்டும். --பயனர்:வேணுகோபாலன்


வேணு, கட்டற்ற நூல்கள் இலவசமாகவோ மலிவு விலையிலோ பதிப்பிக்கப்படும் என்பது உண்மை தான் (நீங்கள் சொன்னது போல் 10-20 ரூபாயில் கூட). நான் சொல்ல வந்தது, உள்ளடக்கமும் மலிவாகி விடக் கூடாது என்பது தான். மலிவு விலை அறிமுக நூல்கள் பதிப்பிக்கும் தமிழ் அச்சு நிறுவனங்கள் செய்யும் பிழை இது. அது போன்ற நூல்களை படித்தால், மேம்பாக்கான ஒரு எண்ணம் மட்டுமே தோன்றுமே தவிர செயற்பாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாது. அது போன்ற குறைகள் நம் விக்கி நூல்களில் இல்லாமல் ஒரு மாற்றுத் தளமாக செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மித மிஞ்சிய அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கிலப் பயன்பாடு வாசிப்பனுபவத்திற்கு ஊறாக இருப்பதுடன், சிந்தனையை ஆங்கில வழியாகப் புரிந்து கொள்ள வேண்டிய தூண்டுதலை உண்டுபண்ணும். எனவே, இதை மிதமாகச் செய்யலாம். ஆனால், அருஞ்சொற்பட்டியலில் எவ்வளவு வேண்டுமானாலும் ஆங்கிலப் பதங்களைத் தரலாம். அதில் ஆட்சேபணையில்லை. கலைச்சொல்லாக்கத்தை பொருத்த வரை கவிமொழி ஏற்றுக்கொள்ளத்தக்க சுருக்கமாக இருக்கிறது. ஆனால் கவிமொழி அரசன் என்பது மிதமஞ்சிய தமிழ்ச்சுவையாக உள்ளது. statement போன்ற சொற்கள் rdbms தாண்டி பல கணினித் துறைகளிலும் பொதுவாகப் புழங்கும் சொல். இது போன்ற கலைச்சொல்லாக்கங்களில் கவனமும் நீண்ட கால நோக்கும் தேவை. அந்தந்த பேச்சுப் பக்கங்களில் அவசியம் கலந்துரையாட வேண்டும்.


ஏற்கனவே நன்கு ஆங்கிலமும் தொழில்நுட்பமும் தெரிந்தவர்கள் ஆங்கில நூல்களையே படித்துவிட்டுப் போய்விடுவார்களே..அவர்களுக்குரிய தரத்தில் ஏன் விழி பிதுங்க வைக்கும் நுட்பத் தமிழ் நடையில் எழுத வேண்டும்? என்பது நியாயமான கேள்வி. நான் சொல்ல வந்தது - நூலின் நீளம், பேச்சு நடையில் விளக்குதல், மிதமான இலக்கியச் சுவை / தமிழ்ச் சுவையில் எழுதுவது ஆகியவற்றுக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. சொல்லப்போனால், இறுக்க நடையில் எழுதப்படும் தூக்கத்தை வரவழைக்கும் பெரும்பாலான இந்திய நூலாசிரியர்களின் நுட்ப நூல்களை விட பேச்சு நடையில், படங்கள், விளக்கக்குறிப்புகளுடன் அமைந்த வெளிநாட்டு நுட்ப நூலாசிரியர்களின் நூட்கள் மிகப் பயனுள்ளவை. நான் இந்தியர்களை குறை சொல்லவில்லை. அவர்கள் எழுதப் பட்ட விதமும் அது தான்.

நம் விக்கித் தளத்துக்கு வேண்டாத நடை:

  • படிக்கத் தூண்டாத இறுக்க நடை.
  • interactiveness, applied understanding இல்லாத theoretical approach
  • படிக்கத் தூண்டும் எளிய நடை - ஆனால் கருத்தாழமும் பயன்பாடுமற்ற நடை


விக்கித் தள நூல்களுக்கு நான் பரிந்துரைக்கும் நடை:

  • படிக்கத் தூண்டும் எளிய தமிழ். தகுந்த இடங்களில் பேச்சு நடையையும் கையாளலாம்.
  • மிரள வைக்காத நுட்பத் தமிழ்.
  • ஏராளமான விளக்கப்படங்கள், குறிப்புகள், எடுத்துக்காட்டுக்கள், பாடத்தின் இறுதியில் சிந்தனையைத் தூண்டும் வினாக்கள், மாதிரிப் பயிற்சிக்கான நிரல்கள்.
  • படிப்பவர் முழு நூலையும் முழு மூச்சில் படித்து விட்டு, rdbms என்று ஒன்று ஏதோ உள்ளது என்று நினைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போய் விடக்கூடாது. ஒவ்வொரு பாட இறுதியிலும் கணினியைப் பயன்படுத்திப் பார்த்து புரிந்துகொள்ளத் தக்க பயிற்சிகள் இருக்க வேண்டும். முந்திய பாடத்தை சரியாகப் புரிந்து கொண்டாலே அடுத்த பாடத்தை திறம்பட புரிந்து கொள்ள முடியும் என்று வகையில் பாட வரிசை எழுதப்பட வேண்டும்.

அறிமுக நூல் என்றும் அச்சுப் பக்க எண்ணிக்கை என்ற கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் மீறி, ஆங்கிலமும் அடிப்படை நுட்ப அறிவும் பெற்ற ஒருவர் ஆங்கில பாட நூல் கொண்டு என்ன பயனை பெறுவாரோ அதே பயனை இந்நூல் பெறச் செய்ய வேண்டும் என்பது என் அவா. அறிமுக நூல் என்பதை தாண்டி, ஒரு முழுமையான கையேடாக இது அமைந்தால் சிறப்பாக இருக்கும். அறிமுகம் பெறத் தமிழ் நூல், புரிந்து வினைத் திறன் பெற ஆங்கில நூல் என்ற நிலையைத் தாண்டி அனைத்தையும் தமிழ் மூலமே செய்வது என்ற சாத்தியத்தை இது உருவாக்க வேண்டும். குறைந்த கால எல்லைக்குள் இதை சாதிக்க இயலாது என்பது புரிந்து கொள்ளத் தக்கது தான். முதலில் எளிமையான நூல் கட்டமைப்பை (skeleton)ஐ உருவாக்கி, ஒவ்வொரு பாடத்தையும் சிறிது சிறிதாக வளர்க்கலாம். உலகெங்கும் தமிழார்வமும் கணினித் திறமும் உடைய பலர் இருக்கின்றனர். நிச்சயம் பங்கு கொள்வர் என்று நினைக்கிறேன். இந்த பாட நூலை ஒரு ஆண்டுக்குள் முதற் பதிப்பாக வெளியிட முடிந்தால் கூட அது சாதனை தான். காலமோ பக்க எண்ணிக்கையோ மொழி நடையோ நூலின் தரத்துக்கு பயன்பாட்டுத் திறத்துக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்பது நிலை.

இந்தத் துறையில் என் அறிவு zero. அதனால், கட்டுரை உரை குறித்த கருத்துக்கள், பங்களிப்புகள் தர இயலாது. எனினும் விக்கியாக்கப் பணிகளை வழக்கம் போல் முன்னெடுத்துச் செய்வேன் என்று உறுதி தருகிறேன். வாழ்த்துக்கள் வேணு.--Ravidreams 14:50, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply


முழுக்க உடன்படுகிறேன்.

இனி வேலை நேரம்... நண்பர்களே, செப்டம்பர் 20ற்குள் உள்ளடக்கத்தை உறுதிபடுத்தி விடுவோம். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

அடுத்தபடியாக ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சுருக்கம், கட்டமைப்பு (இறுதியில் பயிற்சி என்பது போல), முதலியவற்றைப் பற்றி ஒரு ஒத்த கருத்துருவாக்குவோம்.

பின்னர் அவரவர் விருப்பப்பட்ட மற்றும் தெரிந்த அத்தியாயத்தை செய்யத் தொடங்குவோம்.


வேணு


சில கருத்துக்கள் தொகு

அருமையான முன்மாதிரி.

இப்படிப்பட்ட பாடபுத்தகங்களில் எடுத்துக்காட்டுக்களை முன்வைத்து எழுதுவது நன்று. அடிப்படைகளை விளக்கி விட்டு அதற்குரிய எடுத்துக்காட்டுக்களை முன்வைப்பது நன்று. குறிப்பாக கட்டற்ற மொன்பொருட்களின் உதவியுடன் நன்கு செதுக்கிய எடுத்துகாட்டுக்களை படிநிலையாக விளக்கி முன்வைப்பது நன்று.

"தரவுதளம் - வகைகள்/வடிவங்கள்" பிரிவில் நீங்கள் உடனடியாக இருக்கும் வகைகள் வடிவங்களுக்கு போகாமல், அவை உருவாக காரணமான பின்னணியை சற்று விளக்கலாம். அவை எப்படி எதிர்காலத்தில் மாறலாம் என்றும் சற்று விளக்கலாம். குறிப்பாக சேகரிப்பது தேடுவது அடிப்படையை இங்கேயோ அல்லது இதற்கு முன்னரோ தர முனையலாம்.

இப்புத்தகம் இத் துறைக்கு ஒரு அறிமுக புத்தகமாக ஆனால் கணினி பின்புலம் கொண்டவர்களை அல்லது இத்துறையில் அறிமுகம் உள்ளவர்களை வாசகர்களாக மனத்தில் கொண்டு எழுதப்படுவதாக தெரிகின்றது.

இந்நூலை தொகுக்கையில் நீங்கள் அனுமானிக்கும் பின்புலத்தை தமிழ் விக்கிபீடியாவிலும் கலைச்சொல்லாக்கத்தை விக்சனரியிலும் சேர்த்தால் நன்று.

படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், பட்டியல்கள், எடுத்துக்காட்டுக்கள் பொதுவாக ஈடுபாட்டை கூட்டுகின்றன. எடுத்துக்காட்டுக்களின் போது screen shots இலகுவாக சேர்க்கப்படக்கூடிய துல்லியமாக விளக்க தரக்கூடியவை.

இந்நூலில் தரவுதளங்களைத்தான் பிரதான கருப்பொருளாக கொள்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். Application development languages பற்றிய அறிவும் முக்கியம் தானே!! அவற்றை பற்றியும் குறிப்புகள் தருவீர்களா? அடிப்படை இதுவென்றாலும், பலரின் ஈடுபாடு அவற்றில்தான். மேலும் MS Access உங்கள் உள்ளடக்கத்தில் இல்லையே, அது பிரபலமான ஒன்றாயிற்றே.

இப்பணியில் ஒரு கூட்டுமுயற்சி முறையா அல்லது பிரதான ஆக்கரின் உள்ளடக்கும் முதலில் இடப்பட்டு மேம்படுத்தல் முயற்சி முறையா பின்பற்றப்படபோகின்றது?

--Natkeeran 15:53, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நற்கீரன், தமிழ் விக்கி திட்டங்களில் இதுவரை காணப்படும் பயனர் பங்களிப்பு நடத்தை நாம் நன்கு அறிந்தது தான். துறை சார் அறிவு உள்ளோரும் கட்டுரையை தொடக்கியவரும் அதிக பங்களிப்பையும் பொறுப்பையும் எடுத்துச் செய்வர். குறைந்தது தொடக்க நிலையிலாவது நூலாக்கத்தில் வேணுவின் பங்கு அதிகமாக இருக்ககூடும் என்று எதிர்ப்பார்க்கிறேன். வேணு பிற பயனர்களிடம் எதிர்ப்பார்ப்பை விட குறைவாகவே கிடைக்கலாம். நூலாக்கத்தில் இல்லாவிட்டாலும் நூலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழக்கம் போல் சிறந்த முறையில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். பிற விக்கி பயனர்களுக்கு ஆர்வமிருந்தாலும் கூட விக்கிபீடியா, விக்சனரி திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பது ஒரு குறை. விக்கிபீடியாவை வளர்த்து பின் கவனத்தை விக்சனரிக்குத் தந்தோம். இப்பொழுது விக்சனரியும் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இனி விக்கி நூல்கள் தளத்தை கட்டமைப்பது, விளம்பரப்படுத்துவது ஆகிய பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்நூல் கொஞ்சம் வளர்ந்தபிறகு, மடற்குழுக்கள், வலைப்பதிவுகளில் கவனத்தை ஈர்த்தால் பங்களிப்புகள் அதிகரிக்கக் கூடும். --Ravidreams 17:39, 15 செப்டெம்பர் 2006 (UTC)Reply




எடுத்துக்காட்டுகள், screenshots (திரைப்பிரதிமைகள் ?) முதலியவை முக்கிய பங்கு பெறும். எடுத்துக்காட்டுகளை பற்றி கூறும் போது, நூல் முழுவதும் ஒரு குறிப்பிட்ட schema பேசப்படலாம். உதாரணமாக, பள்ளிக்கூடத்திற்கான தரவுதளம் எனக்கொண்டால், மாணவர் பட்டியல், ஆசிரியர் பட்டியல், தேர்வு மதிப்பெண்கள் பட்டியல் என இவற்றை முன் நிறுத்தி கோட்பாடுகள் விளக்கப்படலாம். Oracle 10g XE - zero cost licensing (even for production distribution) கிடைக்கிறது. எடுத்துக்காட்டுகள் அதன் பின்புலத்தில் செய்யலாம் என்றிருக்கிறேன். கீழ்வரும் காரணங்களுக்காக.

1. என்னிடம் உள்ளது. பரிச்சயம் உள்ளது. 2. இத்துறையின் oracle முன்னிலை வகிக்கிறது. எனவே மாணவர்களுக்கு நேரடியாக பயன்படலாம். 3. நூலாக்கத்தின் இறுதியில் நாம் ஒரு sponsored project பற்றி சிந்திக்கலாம். ஒரு ஒளித்தட்டில், linux, Oracle 10g XE, இந்த நூல் (in readily printable pdf form), Installation instructions from ground up - i.e. how to get a raw PC to run Linux, Oracle 10g XE, and try the sample scripts given in the book முதலியவை பதிந்து, பள்ளிதோறும்/பாலிடெக்னிக் தோறும் ஒன்று விநியோகிக்கலாம்.

சேகரிப்பது, தேடுவது பற்றிய அடிப்படை மற்றும் வடிவங்களின் பரிமாணத்தைப் பற்றிய புன்புலம், அறிமுக பாடத்திற்கு பின்னர் (வடிவங்களின் தொழில் நுட்ப விளக்கத்திற்கு முன்) பொருத்தமானதே. பொருளடக்கம் திருத்தலாம்.

இப்புத்தகம் இருசாராரை மனதில் கொண்டு எழுதப்படுகிறது.

முன்கூறியபடி, நான் பல பட்டய படிப்பு படித்த மாணவர்களை காண்கிறேன். பொதுவாக இந்த மாணவர்களுடைய குறை, சரியான, அடிப்படையைக் குறித்து தக்க அறிவுடன் அவர்கள் தரவுதளங்களை அறிந்து கொள்ளவில்லை. இதுகுறித்து சரியான வழிகாட்டுதல் கிடைத்தவுடன், அவர்களில் சிறந்தவர்கள், கற்பூரம் போல் பிடித்துக்கொள்கிறார்கள். எனவே, இவர்களைப்போல பெரும் எண்ணிக்கையிலுள்ள பட்டயப் படிப்பு படிக்கின்றவர்களை மனதில் கொண்டும் இது எழுதப்படுகிறது.

இரண்டாவதாக, சமீபத்தில், ஒரு 4ம் வகுப்பு மாணவன் MCSE தேர்ச்சி பெற்றதாக படித்தேன். மேலும், பல வசதியுடைய வீடுகளில்/சூழல்களில் வயது ஒரு தடையின்றி பலரும், பல துறைகளில் மேம்பட்ட தேர்ச்சி பெறுகிறார்கள்.

எனக்கென்னவோ, தரவுதளம் என்பதும், அதன் கோட்பாடுகள், அடிப்படை இயங்குமுறைகள் படித்தறிவதும், மேலும் ஒரு கணினியும், இயலியும், தக்க புத்தகமும் கிடைத்தால், அதனை மேலாண்மை செய்யும் திறன் பெறுவதும், ஒரு உயர் நிலைப்பள்ளி மாணவனுக்கு சாத்தியமே எனப் படுகிறது.

தமிழ்வழி கற்ற நான் சிறுவயதில் படித்த பலப்பல தமிழாக்க ரஷ்ய நூல்கள், அவை உள்ளிட்ட விதைகள் பிற்காலத்தில் பயன்பட்டன என்பது உண்மை.

எனவே இந்நூலின் பயனர்களாக, ஒரு spectrum of readers ஐக் கூறலாம். தரவுதளம் பற்றி உரிய அடித்தளம் பெற விரும்பும் மாணாக்கர்கள்/வேறுதுறை வித்தகர் முதல், அடுத்த மாதம் தரவுதளத்தில் பணி செய்ய வேண்டி உள்ள ஒரு கணினித்துறை மாணவன் வரை உள்ளவர்க்கு இந்நூல் பயன்பட வேண்டும். (மிக உயர் நிலை கோட்பாடுகள் - various algorithms used for indexing etc. - பேசப்பட மாட்டாது. வித்தியாசம் என்னவென்றால்,

தரவுதளம் என்றால் என்ன, தரவுதள மேலாண்மை நாம் எப்படி செய்வது என்பது பேசப்படும். தரவுதள மேலாண்மையை செயலி (மென்பொருள்) எப்படி செய்கிறது என்பது பேசப்படா. நல்ல எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், கார் ஓட்டக் கற்கும்போது, அவசியமான அளவுமட்டும் தொழில் நுட்பம் பேசப்படுவது போல.

MS Access விடுபட்ட ஒன்று. சேர்த்து விடலாம். (ஆனால் அது RDBMS என்ற வரையரைக்குள் வருவதில்லை என்ற கருத்தும் உள்ளது.)

Application development என்பது தரவு தளத்தில் தரவு போட, தகவல் எடுக்க உதவும் துறை என்ற மட்டில் மட்டும் அறிமுகப்படுத்தப்படும். அதிலுபரி பேச அதற்கு தனி நூல் தேவைப்படும் எனத் தோன்றுகிறது. (சிவ புராணத்தில், சிவனின் மகிமைகள் கூறி, அப்பேர்ப்பட்ட சிவனின் மனைவி பார்வதி எனக்கூறி, தேவி புராணத்தில், பார்வதியின் பெருமைகளை உயர்த்தி கூறுவது போல :) )

இம்முயற்சி சந்தேகமின்றி கூட்டுமுயற்சிதான். இப்போதே அப்படி ஆகிவிட்டது. இப்பக்கத்திலுள்ள கருத்துக்கள் நான் முதலில் கண்டதை விட ஒரு சிறந்த வடிவத்தை நூலிற்கு தருவதோடு, பல கேள்விகளை எழுப்பி என் பார்வையையும் தெளிவாக்கி விட்டது.|

பிரதான ஆக்கர் என்ற பணியை நான் மகிழ்வோடு இயன்ற வரை செய்கிறேன். ஆயின் இந்நூல் இப்போதுமுதல் ஒரு விகி புத்தக குழந்தையே. தமிழ் கூறு நல்லுலகிற்கு நம் அனைவரின் ஒரு சிறு பூ. மிகப்பல வாசகர்களின் மனதில் நாம் விதைக்கப் போகும் நல்விதை.

அன்புடன், வேணு

--பயனர்:வேணுகோபாலன் 11:21, 16 செப்டெம்பர் 2006 (IST)


இப்போதைக்கு இறுதி செய்யப்பட்டுள்ள உள்ளடக்கத்தை வரையறையாகக் கொண்டு நூலாக்கப் பணியைத் தொடங்க உத்தேசம். சுமார் ஒரு வாரத்தில் முதலாம் அத்தியாயம் முடித்து இங்கு பதிய இயலுமென நினைக்கிறேன்.

முதலத்தியாயத்தில் என்ன கொடுக்கலாம் என்பன போன்ற கருத்துக்கள் ஏதேனுமிருப்பின், வரவேற்கிறேன்.

வேணுகோபாலன் 09:07, 20 செப்டெம்பர் 2006 (UTC)Reply

புதிய சில அலுவல் பணி காரணங்களால், விக்கி புத்தகப்பணி நினைத்த வேகத்தில் தொடர/தொடங்க முடியவில்லை. கருத்தளித்த நண்பர்களின் நேர விரையத்திற்கு மன்னிக்கவும். உத்தேசம் அப்படியே தான் உள்ளது. எப்போது செயலாக்கம் பெறும் என்பதே கேள்விக்குறி. அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.

--வேணுகோபாலன் 10:36, 28 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Return to the user page of "Ravidreams/மணல்தொட்டி/rdbms".