நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/8ம் திருமொழி
--வெ.ராமன் 09:42, 22 ஜூலை 2006 (UTC)
கண்ணபுரத்து காகுத்தன் தாலாட்டு தரவு கொச்சகக் கலிப்பா மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!* தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்!* செம்பொன்சேர் கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!* என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ. 1 புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே!* திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்!* கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே!* எண்டிசையு மாளுடையாய்! இராகவனே! தாலேலோ. 2 கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்!* தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ!* கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!* எங்கள்குலத் தின்னமுதே! இராகவனே! தாலேலோ. 3 தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!* தசரதன்தன் மாமதலாய்! மைதிலிதன் மணவாளா!* வண்டினங்கள் காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே!* ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ. 4 பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி* ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே!* சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே!* தாராளும் நீண்முடியென் தாசரதீ! தாலேலோ. 5 சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே!* அற்றவர்கட் கருமருந்தே! அயோத்திநகர்க் கதிபதியே!* கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே!* சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ. 6 ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே!* வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே!* காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!* ஆலிநகர்க் கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ. 7 மலையதனால் அணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே!* அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே!* கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே!* சிலைவலவா! சேவகனே! சீராமா! தாலேலோ. 8 தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய் !* வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே!* களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே!* இளையவர்கட் கருளுடையாய்! இராகவனே! தாலேலோ. 9 தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே!* யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே!* காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே!* ஏவரிவெஞ் சிலைவலவா! இராகவனே! தாலேலோ. 10 கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்* தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை* கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன* பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே. 11 குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்