தேவையைத் தீர்மானிப்பது யார்
பெரும்பாலும் இன்று கிடைக்கக் கூடிய மென்பொருட்களெல்லாம், ஏதோ யாரோ நமது தேவைகளை எல்லாம் முன்னதாகவே புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் வடிவமைத்து, தயார் நிலையில் நமக்குக் கொடுக்கும் ஒன்று என்கிற எண்ணம் பரவலாக இருக்கின்றது. அங்ஙனம் செய்பவர்கள் ஏதோ ஞானக் களஞ்சியங்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.
மற்ற எந்தவொரு பொருளைப் போலவும் மென்பொருளும் நமது தேவைகளுக்காக நாம் ஆக்கிக்கொள்ளக் கூடிய பொருள் என்பதை உணர்ந்தால் இன்று மென்பொருளின் மீதும் அத்துறையின் மீதும் இருக்கும் மிகப் பெரிய மாயை அகன்றுவிடும்.
சின்னக் குழந்தையொன்றுக்கு அதன் தேவைகள் தெரியாத பருவத்தில் அதற்குத் தேவையான உணவு, உடை முதலியவற்றை அக்குழந்தையின் உறவினர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். வளர வளர அந்தக் குழந்தை உற்றார் சுற்றாருடன் கலந்தாலோசித்துத் தமது தேவைகளைத் தாமே தீர்மானிக்கும் ஆற்றலினைப் பெறுகின்றது.
முதன் முதலில் மென்பொருளுக்கு அறிமுகமாகிற ஒருவருக்கு வேண்டுமாயின் மென்பொருள் கிடைக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம். காலம் செல்லச் செல்ல அதுவும் தமது விருப்பங்களுக்கு இணங்க, தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு பொருளென்ற உணர்வைப் பெற வேண்டும். அங்ஙனம் வந்துவிட்டால் மென்பொருட்களிடமிருக்கும் எதிர்பார்ப்பு தெளிவாகிவிடும்.
கிடைக்கக் கூடிய மென்பொருள் நமது தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதுமென இருந்து விடுகின்றோம். அதைத் தாண்டி யோசிப்பது இல்லை. விளைவு நாம் கட்டப்படுவதை உணர மறந்துவிடுகின்றோம். காலம் கடந்து கண்ணும் கெட்ட பிறகுதான் அடிமைச் சாசனத்திற்கு ஒப்பமிட்டதை உணரப் போகிறோமா?
எந்தவொரு பொருளை நாம் வாங்கினாலும் அதன் உற்பத்தியாளரால் நாம் கட்டுபடுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்தானே! பரஸ்பர நலன்களைக் கருத்தில் கொண்டு உறவுகளை நல்ல முறையில் பேண விரும்புவோமேயன்றி உற்பத்தியாளர்கள் நம்மைக் கட்டுபடுத்த விரும்புவோமா?
உனது தேவையாக நான் எதைக் கருதிச் செய்கிறேனோ அதுதான் கிடைக்கும். இருக்கக் கூடிய வழுக்களையும் என்னைத் தவிர வேறு யாராலும் களைய இயலாது. உனது விண்ணப்பங்களைச் சொல். முடிந்தால் பரிசீலித்து அடுத்த வெளியீட்டில் தர முயல்கின்றேன். இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. விலை இலட்ச ரூபாய் மட்டும் என உற்பத்தியாளர் சொன்னால் என்ன செய்வது?
எனது தயவின்றி காலத்துக்கும் இப்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்த இயலாது என மென் உற்பத்தியாளர் மிரட்டுவது போலல்லவா இருக்கின்றது. பரஸ்பர நன்மை இதில் எங்கு இருக்கிறது? தங்களுடைய தேவையைத் தீர்மானிக்கும் உரிமை தமக்கே இருப்பதாகச் சொல்கிறது தனியுரிம மென்பொருள். அவரவர் அவரவர் விரும்பியப் படி மென்பொருளைப் பெற வழி செய்வது கட்டற்ற மென்பொருள். உங்கள் விருப்பங்களையும் தேவைகளையும் யார் தீர்மானிக்க வேண்டும்?