திருவாசகம்/சிவபுராணம் உரை 61-83

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே


65. நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே


70. இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே


75. கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

80. தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்

தேற்றனே தேற்றத் தௌ¤வேஎன் சிந்தையுள்

ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே

பதப்பொருள் :

மாசு அற்ற சோதி மலர்ந்த - களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, மலர்ச்சுடரே - பூப்போன்றே சுடரே, தேசனே - குரு மூர்த்தியே, தேனே - தேனே, ஆர் அமுதே - அரிய அமுதே, சிவபுரனே - சிவபுரத்தையுடையானே, பாசம் ஆம் பற்று அறுத்து - பாசமாகிய தொடர்பையறுத்து, பாரிக்கும் - காக்கின்ற, ஆரியனே - ஆசிரியனே, நேச அருள் புரிந்து - அன்போடு கூடிய அருளைச்செய்து, நெஞ்சில் வஞ்சம் கெட - என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய, பேராது நின்ற - பெயராமல் நின்ற, பெருங்கருணை - பெருங்கருணையாகிய, பேர் ஆறே - பெரிய நதியே, ஆரா அமுதே - தெவிட்டாத அமிர்தமே, அளவு இலாப் பெம்மானே - எல்லையில்லாத பெருமானே, ஓராதார் உள்ளத்து - ஆராயாதார் மனத்தில், ஒளிக்கும் - மறைகின்ற, ஒளியானே -

ஒளியையுடையானே, நீராய் உருக்கி - என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி, என் ஆர் உயிராய் நின்றானே - என் அரிய உயிராய் நின்றவனே, இன்பமும் துன்பமும் - சுகமும் துக்கமும், இல்லானே - இயற்கையில் இல்லாதவனே, உள்ளானே - அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே, அன்பருக்கு அன்பனே - அன்பர்களிடத்து அன்புள்ளவனே, யாவையும் ஆய் - கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, அல்லையும ஆம் - தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற, சோதியனே - பேரொளியையுடையவனே, துன் இருளே - நிறைந்த இருளானவனே, தோன்றாப் பெருமையனே - புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே, ஆதியனே - முதல்வனே, அந்தம் நடு ஆகி - முடிவும் நடுவும் ஆகி, அல்லானே - அவையல்லாது இருப்பவனே, என்னை ஈர்த்து ஆட்கொண்ட - என்னை இழுத்து ஆட்கொண்டருளின, எந்தை பெருமானே - எமது தந்தையாகிய சிவபெருமானே, கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் - மிகுந்த உண்மை ஞானத்தால், கொண்டு உணர்வார்தம் கருத்தில் - சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், நோக்கு அரிய - எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய, நோக்கே - காட்சியே, நுண்உணர்வே - இயற்கையில் நுட்பமாகிய அறிவே, போக்கும் வரவும் நிற்றலும் இல்லாத புண்ணியனே, காக்கும் எம் காவலனே - எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே, காண்பு அரிய பேர் ஒளியே - காண்பதற்கரிய பெரிய ஒளியே, ஆற்று இன்ப வெள்ளமே - மகாநதி போன்ற இன்பப் பெருக்கே, அத்தா - அப்பனே, மிக்காய் - மேலோனே, நின்ற தோற்றச்சுடர் ஒளியாய் - நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும், சொல்லாத நுண் உணர்வு ஆய் - சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும், மாற்றம் ஆம் வையகத்தின் - மாறுபடுதலையுடைய உலகத்தில், வெவ்வேறே வந்து - வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவு ஆம் - அறிவாய் விளங்கும், தேற்றனே - தௌ¤வானவனே, தேற்றத் தௌ¤வே - தௌ¤வின் தௌ¤வே, என் சிந்தனையுள் ஊற்று ஆன - என் மனத்துள் ஊற்றுப் போன்ற, உண் ஆர் அமுதே - பருகுதற்கு அரிய அமிர்தமே, உடையானே - தலைவனே.

விளக்கம் :

சோதி - பேரொளி, அதிலிருந்து தோன்றுவது சுடர். சோதியை முழுதும் காண்பது அரிது. அதன்கண் உண்டாகும் ஒரு சிறு பகுதியாகிய சுடரைக் காண்பது எளிது. ஆகவே, எளிவந்து அருள் புரிந்த இறைவனைச் "சோதி மலர்ந்த சுடரே" என்றார். இச்சுடர், மலர் போலக் குளிர்ச்சியைத் தருவதால், "மலர்ச்சுடர்" என்றார். பாசம் - அறியாமை.

அன்பர்கள் மனத்திலுள்ள வஞ்சனை கெட இறைவன் அதனை விட்டு நீங்காது பெருங்கருணை வெள்ளமாயும் அளவில்லாத இன்பப் பொருளாயும் அங்குத் தங்குகின்றான். அப்பொழுது அம்மனம் நீராய் உருகுகிறது. அவ்வாறு உருகிய உயிரை இறைவன் தன்மயமாகச் செய்கின்றான். இக்கருத்துகளை விளக்கவே, "நெஞ்சில் வஞ்சங்கெட ................. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே" என்றான்.

இறைவன் தனக்கென ஓர் இன்பமும் துன்பமும் இல்லான்; அடியார்க்கு வரும் இன்பதுன்பங்களைத் தான் ஏற்றுக்கொள்வதனால் இன்பமும் துன்பமும் உள்ளான். அதனால், "இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே," என்றார்.

இறைவன், எல்லாப் பொருளிலும் கலந்திருத்தலால் "யாவையுமாய்," தன்மையால் வேறாதலால் "அல்லனுமாய்" இருக்கிறான். ஒளியும் இருளும் அவனன்றி இன்மையால், "சோதியனே, துன்னிருளே" என்றார். உலகத்திற்கு ஆதியும் நடுவும் முடிவுமாய் நிற்கின்ற இறைவன், தனக்கு அவற்றை உடையனல்லன் ஆதலின், "ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே" என்றார்.

இறைவனது உருவத்தைக் கண்ணால் காண முடியாது, அறிவினாலும் அறிய முடியாது என்பார், "நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே" என்றார். அனுபவத்தினால் காணக்கூடியவன் இறைவன் என்பதை உணர்த்த, "சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே" என்றார்.

உயிர்களின் மனப்பக்குவத்திற்கேற்ப இறைவன் அருளுவதை விளக்க, "மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே" என்றார்.

இவற்றால் இறைவன் பண்புகள் விளக்கப்பட்டன.