திருவாசகம்/சிவபுராணம் உரை 41-48

ஆக்க மளவிறுதி யில்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

45. மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

பதப்பொருள் :

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் - தோற்றம் நிலை முடிவு என்பவை இல்லாதவனே, அனைத்து உலகும் - எல்லா உலகங்களையும், ஆக்குவாய் - படைப்பாய், காப்பாய் - நிலைபெறுத்துவாய், அழிப்பாய் - ஒடுக்குவாய், அருள் தருவாய் - அருள் செய்வாய், என்னை - அடியேனை, போக்குவாய் - பிறவியிற்செலுத்துவாய், நின் தொழும்பில் - உன் தொண்டில், புகுவிப்பாய் - புகப்பண்ணுவாய், நாற்றத்தின் நேரியாய் - பூவின் மணம்போல நுட்பமாய் இருப்பவனே, சேயாய் - தொலைவில் இருப்பவனே, நணியாய் - அண்மையில் இருப்பவனே, மாற்றம் மனம் கழிய நின்ற - சொல்லும் மனமும் கடந்து நின்ற, மறையோனே - வேதப் பொருளாய் உள்ளவனே, சிறந்த அடியார் சிந்தனையுள் - சிறந்த அன்பரது மனத்துள், கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல - கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடினது போல, தேன் ஊறி நின்று -இன்பம் மிகுந்து நின்று, பிறந்த பிறப்பு அறுக்கும் - எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற, எங்கள் பெருமான் - எம்பெருமானே.

விளக்கம் :

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன இறைவனது ஐந்தொழில்களாம். அறியாமையில் கட்டுண்டிருக்கும் உயிருக்கு இறைவன் உடம்பைக் கொடுத்துப் படைக்கிறான்; எடுத்த உடம்பில் இருவினைகளை நுகரும்போது அறியாமையை நீக்கிக் காக்கிறான்; உயிர் அலுக்கா வண்ணம் ஓய்வு கொடுக்க அழிக்கிறான்; இவ்வாறு பிறப்பு இறப்புகளில் உழலும்படி அறிவை மறைக்கிறான்; குற்றம் நீங்கிப் பக்குவம் (மல பரிபாகம்) வந்த காலத்து அருளுகிறான் என்பவற்றை விளக்க, "ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்" என்றார். ஆக்குதல் முதலிய நான்கனைக் கூறவே, மறைத்தலும் கொள்ளப்படும்.

ஆக்கமும் கேடும் இல்லாதவன்தானே ஆக்கவும் அழிக்கவும் இயலும்? இதனால், "ஆக்கம் அளவிறுதி யில்லாய்" என்றார்.

இறைவன் உயிர்க்ளைப் பக்குவம் வருவதற்கு முன்பு பிறவியில் செலுத்தியும், பக்குவம் வந்த பின்பு தனது திருவடிக்கு ஆளாக்கியும் ஆண்டுகொள்வனாகலின், "போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்" என்றார்.

பூவில் மணம் போல ஆன்மாவில் இறைவன் கலந்திருக்கிறான். மலர் அரும்பாயிருக்கும்போது மணம் வீசாது; அலர்ந்த பின்னரே மணம் வீசும். அதைப் போல, ஆன்மா பக்குவப்பட்டது