திருவாசகம்/சிவபுராணம் உரை 23-25
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
25. பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
பதப்பொருள் :
விண் நிறைந்தும் - வானமாகி நிறைந்தும், மண் நிறைந்தும் - மண்ணாகி நிறைந்தும், மிக்காய் - மேலானவனே, விளங்கு ஒளியாய் - இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி, எண் இறந்து - மனத்தைக் கடந்து, எல்லை இலாதானே - அளவின்றி நிற்பவனே, நின்பெருஞ்சீர் - உன்னுடைய மிக்க சிறப்பை, பொல்லா வினையேன் - கொடிய வினையையுடையவனாகிய யான், புகழும் ஆறு ஒன்று அறியேன் - புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன்.
விளக்கம் :
இறைவன் ஐம்பெரும்பூதங்களில் கலந்தும் அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கிறான் என்பதை விளக்க, "விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்" என்றார். "உலகெலா மாகி வேறாய் உடனுமா யொளியாய்" என்ற சித்தியார் திருவாக்கும் இதனையே வலியுறுத்துகிறது. இறைவனது பெருமையைக் காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லா வினையேன்’ என்றார்.
இவற்றால் அவையடக்கம் கூறப்பட்டது.