திருவாசகம்/சிவபுராணம் உரை 11-16

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி

சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

பதப்பொருள் :

ஈசன் அடி போற்றி - ஈசனது திருவடிக்கு வணக்கம், எந்தை அடி போற்றி - எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம், தேசன் அடி போற்றி - ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானது திருவடிக்கு வணக்கம்; நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்; மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி - நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்; சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். ஆராத இன்பம் அருளும் மலை போற்றி - வெறுக்காத இன்பத்தைக் கொடுக்கின்ற மலைபோலும் கருணையையுடைய வனுக்கு வணக்கம்.

விளக்கம் :

ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். "எண் குணத்தான்தாள்" என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க.

இவற்றால் வணக்கம் கூறப்பட்டது.