திருப்பொற் சுண்ணம்/உரை 81-88

மாடு நகைவாள் நிலாஎறிப்ப

வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்

பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்

பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்

தேடுமின் எம்பெரு மானைத்தேடிச்

சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி

ஆடுமின் அம்பலத் தாடினானுக்

காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

மாடு - (பெண்களே) பக்கங்களில், நகைவாள் - பல்லினது ஒளி, நிலா எறிப்ப - நிலவு போன்று ஒளி வீசவும், அம்பவளம் - அழகிய பவளம் போன்ற உதடுகள், துடிப்ப - துடிக்கவும், வாய் திறந்து - வாயைத் திறந்து, பாடுமின் - பாடுங்கள், நந்தம்மை ஆண்டவாறும் - நம்மை அவன் ஆண்டுகொண்ட வழியையும், பணி கொண்ட வண்ணமும் - இறை பணியிலே நிற்கச் செய்ததையும், பாடிப் பாடி - அவ்வாறு இடைவிடாது பாடி, எம்பெருமானைத் தேடுமின் - எம்பெருமானைத் தேடுங்கள், தேடி - அவ்வாறு தேடி, சித்தம் களிப்ப - மனம் உன்மத்த நிலையையடைய, திகைத்து - தடுமாறி, தேறி - பின்னர் மனம் தௌ¤ந்து, ஆடுமின் - ஆடுங்கள், அம்பலத்து - தில்லையம்பலத்தில், ஆடினானுக்கு - நடனஞ் செய்தவனுக்கு, ஆட - திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

நிலா என்பது பல்லினது ஒளிக்கும், பவளம் என்பது உதட்டினது நிறத்துக்கும் உவமையாயின. இவை, பொற்சுண்ணம் இடிக்கும் பெண்களது இளமையைக் காட்டின.

‘நந்தம்மை ஆண்டவாறும்’ என்றதனால், இறைவன் குருவாய் எழுந்தருளி வந்த ஆண்ட தன்மையையும், ‘பணி கொண்ட வண்ணமும்’ என்றதனால், ஆட்கொண்டதோடு நில்லாமல் இறைபணியிலேயும் நிற்கச் செய்தமையையும் குறிப்பிட்டார், இறைபணி நிற்றலாவது, எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணியிருத்தல்.

இதனால், இறைவன் ஆன்மாக்களை ஆட்கொண்டு, இறைபணியில் நிற்கச் செய்கிறான் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_81-88&oldid=2329" இலிருந்து மீள்விக்கப்பட்டது