திருப்பொற் சுண்ணம்/உரை 49-56
சூடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்பஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்பப்
நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை அன்னகோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே.
பதப்பொருள் :
சூடகம் தோள்வளை - கை வளையும் தோள் வளையும், ஆர்ப்ப ஆர்ப்ப - பலகாலும் ஒலிக்க, தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப - அடியார் கூட்டம் புறப்பட்டு அரகரவென்று அடிக்கடி முழங்க, நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப - நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்க, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப - நாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய, பாடகம் - கால் அணி, மெல் அடி - மென்மையான பாதங்களில், ஆர்க்கும் - ஒலிக்கும், மங்கை - உமாதேவியை, பங்கினன் - ஒரு பாகத்தில் உடையவனாகிய, எங்கள் பராபரனுக்கு - எங்களது மிக மேலானவனும், ஆடகமாமலை அன்ன - பெரிய பொன்மலையை ஒத்த, கோவுக்கு - தலைவனுமாகிய இறைவனுக்கு, ஆட - திருமுழுக்கின்பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.
விளக்கம் :
நாடவர் ஆர்த்தல் நம்மைப் பித்தரெனக் கருதி. நாம் ஆர்த்தல் அவர் தமக்கு உறுதிப் பயனை உணராமையைக் கருதி, ‘ஆர்ப்ப ஆர்ப்ப’ என்ற அடுக்கு பன்மை பற்றி வந்தது. இறைவன் செம்மேனியம் மானாதலின், ‘ஆடக மாமலை யன்ன கோ’ என்றார்.
இதனால், அடியார் உலகத்தவர் செயலை மதியார் என்பது கூறப்பட்டது.