திருப்பொற் சுண்ணம்/உரை 145-152

வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி

மத்தமும் பாடி மதியும்பாடிச்

சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்

சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்

கட்டிய மாசுணக் கச்சைபாடிக்

கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்

இட்டுநின் றாடும் அரவம்பாடி

ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே.


பதப்பொருள் :

வட்டம் - சிவபெருமானது வட்ட வடிவாகிய, கொன்றை மலர் மாலை பாடி - கொன்றை மலர் மாலையைப் பாடி, மத்தமும் பாடி - ஊமத்த மலரையும் பாடி, மதியும் பாடி - பிறையையும் பாடி, சிட்டர்கள் வாழும் - பெரியோர் வாழ்கின்ற, தென் தில்லை பாடி - அழகிய தில்லை நகரைப் பாடி, சிற்றம்பலத்து - அங்குள்ள ஞான சபையிலுள்ள, எங்கள் செல்வம் பாடி - எமது செல்வமாகிய பெருமானைப் பாடி, கட்டிய மாசுணக் கச்சை பாடி - அரையிற்கட்டிய பாம்புக் கச்சையினைப் பாடி, கங்கணம் பாடி - கையில் சுற்றியுள்ள கங்கணம் பாடி, கவித்த கைம்மேல் - மூடின கையின்மேல், இட்டு - வைக்கப்பட்டு, நின்று ஆடும் - படமெடுத்து ஆடுகின்ற, அரவம் பாடி - பாம்பைப் பாடி, ஈசற்கு - இறைவனுக்கு, சுண்ணம் - வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.

விளக்கம் :

ஊமத்தம் ‘மத்தம்’ என முதற்குறையாயிற்று. இறைவனுக்கு உகந்த மலர்களுள் ஊமத்தம் ஒன்று. சிஷ்டர் என்ற வடமொழிச்சொல் சிட்டர் என வந்தது.

மூடிய கைம்மேல் அரவத்தை இட்டு ஆட்டியது :

திருப்புறம்பயத்தில் ஓர் அடியவள்பொருட்டு இறைவன் பாம்பாட்டியாய்ச் சென்று, பாம்பு தீண்டி மாண்ட அவள் கணவனை உயிர்ப் பித்தருளினன். கச்சாகவும் கங்கணமாகவும் அணிந்த ஏனையவை, தாருகாவனத்து முனிவர்கள் இறைவன் மேல் ஏவப்பட்டவையாம்.

இதனால், இறைவனது அணி கூறப்பட்டது.