திருப்பொற் சுண்ணம்/உரை 1-8

தில்லையில் அருளிச்செய்தது

செல்வர் பூசும் வாசனைப்பொடியே பொற்சுண்ணம் எனப்படுவது. அப்பொடியை உரலில் இடிக்கும்போது, மகளிரால் பாடும் பாட்டாகச் செய்யப்பட்டமையால், இப்பகுதி பொற்சுண்ணம் எனப்பட்டது. அம்மானை ஆடுதல் போல இதுவும் மகளிர் செயலாம்.

ஆனந்த மனோலயம்

சிவானந்தத்தில் ஆன்மாவின் உணர்வு ஒன்றியிருத்தல், ஆனந்த மனோலயமாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி

முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்

சத்தியுஞ் சோமியும் பார்மகளும்

நாமக ளோடுபல் லாண்டிசைமின்

சித்தியுங் கௌரியும் பார்ப்பதியுங்

கங்கையும் வந்து கவரிகொண்மின்

அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி

ஆடற்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.


பதப்பொருள் :

முத்து நல் தாமம் - (தோழியர்களே) முத்துகளாலாகிய நல்ல மாலையையும், பூமாலை - பூமாலையையும், தூக்கி - தொங்கவிட்டு, முறைக்குடம் - முளைப்பாலிகையையும், தூபம் - குங்குலியத் தூபத்தையும், நல்தீபம் - நல்ல விளக்கையும், வைம்மின் - வையுங்கள், சத்தியும் - உருத்திராணியும், சோமியும் - திருமகளும், பார் மகளும் - நிலமகளும், நாமகளோடு - கலைமகளோடு கூடி, பல்லாண்டு இசைமின் - திருப் பல்லாண்டு பாடுங்கள், சித்தியும் - கணபதியின் சத்தியும், கௌரியும் - கௌமாரியும், பார்ப்பதியும் - மகேசுவரியும், கங்கையும் - கங்கா தேவியும், வந்து - முன் வந்து, கவரி கொண்மின் - வெண்சாமரை வீசுங்கள், அத்தன் - எமது தந்தையும், ஐயாறன் - திருவையாற்றை உடையவனுமாகிய, அம்மானை - எம் தலைவனை, பாடி - பாடி, ஆட - அவன் நிரம்ப அணிதற்பொருட்டு, பொற்சுண்ணம் பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.


விளக்கம் :

நவதானியங்களை நீர் விட்டு முளையாக்கி வைக்கப்பட்ட மட்கலம் முளைப்பாலிகை எனப்படும். முத்து மாலை பூமாலை தொங்க விடுதல், முளைக்குடம் தூபம் தீபம் வைத்தல் ஆகிய இவை இறைவன் வருவதற்கு முன் செய்து வைத்தல். இனிப் பல்லாண்டு இசைத்தல் கவரி கொள்ளல் இல்லத்துக்கு வந்த பின்னர் முறையாக நிகழும். சத்தி முதலியவர் தேவியின் பேதங்கள், பல்லாண்டு இசைத்தலாவது ‘பல்லாண்டு வாழ்க’ எனப் பாடுதல்.

இதனால், இங்கு இறைவனுக்குரிய உபசாரம் கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருப்பொற்_சுண்ணம்/உரை_1-8&oldid=2319" இலிருந்து மீள்விக்கப்பட்டது