திருக்கோத்தும்பி/உரை 9-12
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் :
கோத்தும்பீ - அரச வண்டே! தினைத்தனை உள்ளது - தினையளவாய் இருக்கின்ற, ஓர் பூவினில் தேன் உண்ணாது - மலரிலுள்ள தேனைப் பருகாமல், நினைத்தொறும் - நினைக்குந்தோறும், காண்தொறும் - காணுந்தொறும், பேசுந்தொறும் - சொல்லுந்தொறும், எப்போதும் - மற்று எக் காலத்தும், அனைத்து எலும்பு - எல்லா எலும்புகளும், உள்நெக - உள்ளே நெகிழும்படி, ஆனந்தத் தேன் சொரியும் - பேரின்பத் தேனைப் பொழிகின்ற, குனிப்புடையானுக்கே - கூத்துடைய பெருமானிடத்திலேயே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
விளக்கம் :
பூவிலுள்ள தேனைத் ‘தினையளவு’ என்றது, ‘உலக இன்பம் சிறிது’ என்பதையும், இறைவனது கூத்தினை, ‘தேன்மழை’ என்றது, ‘இறையின்பம் அளவற்றது’ என்பதையும் குறித்தபடியாம்.
இதனால், இறைவன் திருவடி இன்பம் அழியாத் தன்மையது என்பது கூறப்பட்டது.