திருக்கோத்தும்பி/உரை 77-80

பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்

றேமாறி நிற்க அடியேன் இறுமாக்க

நாய்மேல் தவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த

தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! பூமேல் அயனோடு - தாமரை மலர்மேல் இருக்கின்ற பிரமனோடு, மாலும் - திருமாலும், புகல் அரிது என்று - அடைதல் அருமையானது என்று, ஏமாறி நிற்க - ஏங்கி நிற்கவும், அடியேன் இறுமாக்க - அடியேன் இறுமாப்பு அடையவும், தவிசு - யானை முதலியவற்றின்மேல் இடும் மெத்தையை, நாய் மேல் இட்டு - நாயின்மேல் இட்டது போல, நன்றா - நன்மையடைய, பொருட்படுத்த - என்னை ஒரு பொரளாக நன்கு எண்ணியாண்ட, தீ மேனியானுக்கே - நெருப்புப் போன்ற திருமேனியுடையானிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

நாய்மேல் தவிசு இடல் என்பது, தகுதிக்கு மேற்பட்ட சிறப்பினைச் செய்தல் என்பதாம். ‘நாய்மேல் தவிசிட்டு’ என்றதற்கு நாய் போன்ற எனக்கு உயர்ந்த இடமளித்து என்று பொருள் கொள்வாருமுளர்.

இதனால், இறைவன் அன்பராயினார்க்கு அளவற்ற கருணையைச் செய்கின்றான் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_77-80&oldid=2369" இலிருந்து மீள்விக்கப்பட்டது