திருக்கோத்தும்பி/உரை 57-60
நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் :
கோத்தும்பீ - அரச வண்டே! தாழ்சடையோன் - நீண்ட சடையையுடைய சிவபெருமான், தானும் தன் தையலும் - தானும் தன் தேவியுமாய் எழுந்தருளி, ஆண்டிலனேல் - ஆட்கொள்ளவில்லையாயின், நானும் - யானும், என் சிந்தையும் - எனது உள்ளமும், நாயகனுக்கு - தலைவனாகிய அவனுக்கு, எவ்விடத்தோம் - எந்த இடத்தில் இருப்போம், வானும் - ஆகாயமும், திசைகளும் - திக்குகளும், மாகடலும் - பெரிய கடல்களும், ஆயபிரான் - ஆகிய பெருமானது, தேன் உந்து - தேனைச் சொரிகின்ற, சேவடிக்கே - திருவடிகளிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
விளக்கம் :
இறைவனே ஞானத்தை நல்கி ஆட்கொள்ளவில்லை யெனின், ஆன்ம அறிவினால் அறிய முடியாது என்பார், ‘நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்’ என்றார். ‘நானார் என் உள்ளமார் ஞானங்களார்’ என்று முன்னரும் கூறினார். ‘எவ்விடத்தோம்’ என்றது சேய்மையைக் குறித்தது. அண்டத்துக்கு அப்பாற்பட்ட இறைவன் அண்டமாயும் இருக்கிறான் என்பார், ‘வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்’ என்றார். ‘வானானாய் நிலனானாய் கடலானாய்’ என்ற சுந்தரர் வாக்கையுங்காண்க.
இதனால், இறைவன் அண்டமாயும் இருக்கிறான் என்பது கூறப்பட்டது.