திருக்கோத்தும்பி/உரை 53-56
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் :
கோத்தும்பீ - அரச வண்டே! உலகினுக்கு - உலகத்துக்கு, கரு ஆய் - பிறப்பிடமாய், அருவாய் - அருவமாய், அப்புறமாய் - அப்பாற்பட்டதுமாகி, இப்புறத்து - இவ்வுலகத்தில், மரு ஆர் - மணம் நிறைந்த, மலர் - மலரையணிந்த, குழல் - கூந்தலையுடைய, மாதினொடும் - உமையம்மையோடும், மறைபயில் - வேதங்களை ஓதுகின்ற, அந்தணனாய் - வேதியனாய், வந்தருளி - எழுந்தருளி, ஆண்டுகொண்ட - என்னை அடிமை கொண்ட, திரு ஆன தேவர்க்கே - அழகிய தேவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
விளக்கம் :
அருவம் - உருவமின்மை. உலகுக்கு அப்பாற் பட்டிருக்கும்போது இறைவனுக்கு உருவம் இன்றாதலின் ‘அருவாய்’ என்றும், ஆனால், உலகம் தோன்றுவதற்குக் காரணமாயிருத்தலின், ‘கருவாய்’ என்றும், தோன்றிய உலகில் அருள் செய்ய வரும்போது மாதொரு கூறனாய் வருகின்றானாதலின், ‘மலர்க்குழல் மாதினொடும்’ என்றும், தம்மை ஆட்கொண்ட வடிவம் அந்தணக் கோலமாதலின், ‘மறைபயில் அந்தணனாய் வந்தருளி’ என்றும் கூறினார்.
இதனால், இறைவன் உயிர்கள் ஆட்கொள்ள வரும் முறை கூறப்பட்டது.