திருக்கோத்தும்பி/உரை 41-44
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் :
கோத்தும்பீ - அரச வண்டே! வன்னெஞ்சக் கள்வன் - வலிய நெஞ்சினையுடைய கரவுடையவன், மனவலியன் - திருந்தாத மனவலிமையுடையவன், என்னாது - என்று நீக்காமல், கல்நெஞ்சு உருக்கி - கல்லைப் போன்ற என் மனத்தை உருகச் செய்து, கருணையினால் - தன் பெருங்கருணையினால், ஆண்டு கொண்ட - என்னை ஆட்கொண்டருளின, அன்னம் திளைக்கும் - பொய்கையில் அன்னப்பறவைகள் மூழ்கி விளையாடு கின்ற, அணிதில்லை அம்பலவன் - அழகிய தில்லையம்பலவாணனது, பொன் அம் கழலுக்கே - பொன்னால் ஆகிய அழகிய கழலணிந்த திருவடியிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
விளக்கம் :
‘வன்னெஞ்சக் கள்வன்’ என்றது இறைவனிடத்தில் அன்பு கொண்டு உருகாத நிலையையும், ‘மனவலியன்’ என்றது, அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாது எத்தகைய தீய செயலையும் செய்யத் துணிதலையும் குறித்தனவாம்.
இதனால், இறைவன் வலிய நெஞ்சத்தையும் உருக்கி ஆட்கொள்ள வல்லான் என்பது கூறப்பட்டது.