திருக்கோத்தும்பி/உரை 33-36

கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்

சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு

மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த

கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! கரணங்கள் எல்லாம் - கருவிகள் எல்லாவற்றிற்கும், கடந்து நின்ற - அப்பாற் பட்ட, கறைமிடற்றன் - நஞ்சு பொருந்திய கண்டத்தை யுடையவனது, சரணங்களே - திருவடிகளையே, சென்று சார்தலும் - சென்று அடைதலும், எனக்கு - அடியேனுக்கு, மரணம் பிறப்பு என்ற - இறப்பு பிறப்பு என்று சொல்லப்பட்ட, இவை இரண்டின் - இவை இரண்டால் வரக்கூடிய, மயக்கு அறுத்த - மயக்கத்தைப் போக்கின, கருணைக்கடலுக்கே - கருணைக்கடல் போன்றவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

இறைவன் கரணங்களின் துணைகொண்டு காண முடியாதவன் ஆதலின், ‘கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்’ என்றும், அவனைத் திருவருளின் துணைகொண்டு காணலாம் ஆதலின், ‘கறைமிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே’ என்றும் கூறினார். இறைவன் திருவடியை அடைந்தும், வினையும் அதனால் வரும் பிறவியும் பற்றா ஆதலின், ‘மரணம் பிறப்பென்றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடல்’ என்றார்.

இதனால், இறைவன் திருவடியைச் சார்ந்தவர் பிறவித்துன்பம் நீங்குவர் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_33-36&oldid=2358" இலிருந்து மீள்விக்கப்பட்டது