திருக்கோத்தும்பி/உரை 21-24

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்விஎன்னும்

பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்

சித்த விகாரக் கலக்கந் தௌ¤வித்த

வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! வைத்த நிதி - ஈட்டி வைத்த செல்வம், பெண்டிர் - மனைவியர், மக்கள் - புதல்வர், குலம் - குலம், கல்வி - கல்வி, என்னும் - ஆகிய இவையே உறுதிப்பொருளென நம்புகின்ற, பித்த உலகில் - மயங்குகின்ற இவ்வுலகத்தில், பிறப்பொடு இறப்பு என்னும் - பிறப்பு இறப்பு என்கின்ற, சித்த விகாரக் கலக்கம் - மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை, தௌ¤வித்த - போக்கிய, வித்தகத் தேவற்கே - மேலான இறைவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

நிலையில்லாத பொருள்களாகிய நிதி முதலியவற்றை நிலையுடையன என்று அறியும் அறிவு பேதைமையாதலால், இவ்வுலகைப் ‘பித்த உலகு’ என்றார். இனி, இறைவன் அடிகளுக்கு இவ்வறியாமையைப் போக்கி அறிவை நல்கினான் ஆதலால், ‘சித்த விகாரம் தௌ¤வித்த வித்தகத் தேவர்’ என்றார். பிறவி அறியாமையால் வருகிறது என்பது மறை முடிபு.

‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு’

இதனால், இறைவன் ஞானத்தை நல்குபவன் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_21-24&oldid=2355" இலிருந்து மீள்விக்கப்பட்டது