திருக்கோத்தும்பி/உரை 13-16

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்

சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு, இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும், என் அப்பன் - என் தந்தை, என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத, என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி, வண்ணம் பணித்து - யான் ஒழுக வேண்டிய வகையைத் தெரிவித்து, என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வான் கருணை - மேலாகிய கருணையையுடைய, சுண்ணம் - பொடியாகிய, பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

அடிகள் தமக்கு இறைவன் செய்த அருள், கண்ணப்பர் போன்ற தலையன்புடையார்க்கே செய்யத்தக்கது என்பார், ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்றார். முற்றுந்துறந்த முனிவராகிய பட்டினத்து அடிகளும், ‘நாளறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன்’ என்று கண்ணப்பரின் அன்புச் செயலைப் பாராட்டியுள்ளார். ‘கோலமார்தரு பொதுவினில் வருக’ என அருளியதாக முன்னர் அடிகள் கூறியதனால், ‘வாவென்ற வான்கருணை’ என்றதற்குத் தில்லைக்கு வருக என்று பொருள் கொள்ளப்பட்டது.

கண்ணப்பர் அன்பு காட்டியது :

தொண்டை நன்னாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் வேடர் குலத்தில் தோன்றியவர் கண்ணப்பர். இவரது இயற்பெயர் திண்ணனார். பருவம் வந்ததும் வேட்டையாடும்பொருட்டுச் சென்றவர் காளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்; துணைவன் நாணானால் குடுமித் தேவர் அம்மலைமீதுள்ளார் என உணர்ந்தார்.

முன்னைத் தவப்பயனால் மலைமீதேறிப் பெருமானைக் கண்டார்; அன்பு கொண்டார்; இலிங்கத்தின்மேல் பூவும் பச்சிலையும் இருக்கக் கண்டு, அவற்றை அந்தணர் ஒருவர் சார்த்தி வழிபட்ட முறையை நாணன் கூறக் கேட்டார். பின்பு வாயாகிய கலசத்தில் நீரை முகந்துகொண்டும், பூவும் பச்சிலையும் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டும், வேட்டையாடிய இறைச்சியாகிய உணவைத் தேடிக் கொண்டுவந்தும், இலிங்கத்தின்மீதிருந்த பூ முதலியவற்றைத் தம் செருப்புக்காலால் நீக்கி, தாம் கொணர்ந்த நீரை உமிழ்ந்து பூவையும் இலையையும் சொரிந்து, ஊனமுதை இட்டு வழிபட்டார்; இங்ஙனம் ஐந்து நாள்கள் வழிபாடாற்றினார். இதைக் கண்டு மனம் பொறாது வருந்திய சிவகோசரியாருக்குத் திண்ணனாரின் அன்பைப் புலப்படுத்த எண்ணிய இறைவன், ஆறாம் நாள் தன் கண்ணில் உதிரம் சொரியச் செய்தான். இதைக் கண்ட திண்ணனார் துடிதுடித்துத் தம் கண்ணையே இடந்து அப்பினார். இறைவனது மற்றொரு கண்ணிலும் உதிரம் வரக் கண்டு தமது மற்றொரு கண்ணையும் அம்பினால் தோண்டும் போது இறைவன், ‘நில்லு கண்ணப்ப’ எனத் தடுத்து நாயனாரின் அன்பை வெளிப்படுத்தினான்.

இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_13-16&oldid=2353" இலிருந்து மீள்விக்கப்பட்டது