தமிழின் தொன்மை
உயிர் மொழி
தமிழின் சிறப்பு
தொகுசெம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.
குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்து செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்து தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.
சங்கங்கள் இருந்தமைக்கும், அவை பழமை வாய்ந்தவை என்பதற்கும் உரிய பல இலக்கியக் குறிப்புகள் சங்கப்பாடல்களிலேயே கிடைக்கின்றன.
"ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் ( புறநானூறு.2)
என்ற பாவடிகள் சேரமன்னனான பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் பெருமைப் படுத்த முடிநாகராயர் என்ற புலவரால் பாடப்பட்டதாகும். இவ்வடிகளில் பாண்டவர்கள் ஐவர், கௌரவர்கள் நூற்றுவர் ஆகியோருக்குப் பாரதப் போரின்போது பெருஞ்சோற்றினை மேற்கண்ட அரசன் வழங்கினான் என்று குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் பாரதம் நிகழ்ந்த காலத்தோடு சங்க இலக்கிய காலம் ஒன்று படுவது தெரியவருகிறது.
இதுபோன்று பல இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை எடுத்தியம்பினாலும், சான்றுகளைத் தரும் இலக்கியங்களின் காலம் என்பது ஐயத்திற்கு இடமளிப்பதால் இவை தரும் சான்றுகளை துணைச் சான்றுகளாகவே வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் எழுத்துவடிவ இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் வரி வடிவம் என்பது பன்னெடுங்காலமாக பல்வகை மாற்றத்திற்கு உட்பட்டு வளர்ந்து வந்திருப்பதால் இவற்றினைக் கொண்டு பண்டைக்கால வரலாற்றினை உறுதி செய்ய முடிவதில்லை. அதனோடு பண்டைய வரி வடிவத்தையும் உணரமுடியாமல் போய்விடுகின்றது.
இக்குறை நீங்கி உண்மை உணர, உணர்த்தப்பட குகைக் கல்வெட்டுக்கள், நடுகற்கள், பழைய கால நாணயங்கள், கடல் அகழ்வாய்வுகள், அகழ்வாய்வுகள் போன்றன தரும் எழுத்துவடிவச் சான்றுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை ஆராய அறிஞர்கள் முயல்கின்றனர். இவற்றின் உண்மைத்தன்மை மாறாத நிலைப்புத் தன்மை கொண்டவை என்பதனால் இவை முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன.
குகைக் கல்வெட்டுக்கள்
தொகுதமிழ்நாட்டில் உள்ள தொன்மைவாய்ந்த குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கும் எழுத்துவடிவங்களை ஆராய்ந்து அவற்றின் வழியாக தமிழின் தொன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
ஐராவதம் மகாதேவன் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ளப் பண்டைய காலக் குகைக் கல்வெட்டுக்கள் மூன்றினை முன்வைக்கின்றார்.
"குகைக்கல்வெட்டுக்களில் மிகவும் முக்கியமானவை மூன்று. மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனும் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு), ஜம்பையில் அதியன் நெடுமான் அஞ்சியும் (கி.பி. முதல் நூற்றாண்டு), புகழுரில் சேரல் இரும்பொறையும் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) வெட்டி வைத்த கல்வெட்டுக்களாகும். இவை சங்ககாலத்தைச் சார்ந்தவை என்று உறுதியாகக் கூறலாம்" என்ற அவரின் கருத்து தமிழ்ச்சங்க காலத்தின் கால எல்லையை உறுதிப்படுத்தும் ஆவணமாகும்.
மயிலை சீனி. வேங்கடசாமி ஏறக்குறைய இருபத்தைந்து குகைக் கல்வெட்டுக்களை தமிழின் தொன்மைக்கு முன்வைக்கின்றார். மீனாட்சிபுரம் கல்வெட்டு, திருவாதவூர் கல்வெட்டு, கீழவளவு, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி, சித்தன்னவாசல், கருங்காலக்குடி, மருகல்தலை, அழகர்மலை, வரிச்சியூர், திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி, ஆனைமலை, புகழுர், திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, மாமண்டுர், அரசலூர், பிள்ளையார்பட்டி, திருநாதர் குன்றம், கழிஞ்சமலை, ஐயர்மலை, சங்கரமலை, மாலகொண்டாக் கல்வெட்டு போன்ற கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகள், மற்றும் எழுத்து வடிவங்கள் போன்றனவற்றைக் கொண்டு தமிழின் தொன்மையை மயிலை சீனி . வேங்கடசாமி நிறுவுகின்றார். (மயிலை சீனி. வேங்கடசாமி, சங்ககாலத் தமிழக வரலாறு பக் 4565) இவற்றை அவர் அசோகப் பேரரசர் காலத்திற்கு முன்னது என்றும் உறுதி செய்கின்றார். மேலும் இக்கல்வெட்டுக்களில் காணலாகும் எழுத்து வடிவங்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னதாக வடிக்கப் பெற்ற கல்வெட்டுக்களில் இருந்து வேறுபட்டன என்பதையும் அவர் உறுதி செய்கின்றார். இதன் காரணமாக முத்த கல்வெட்டுக்களாக இவை உறுதி செய்யப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களின் வாயிலாக சங்க காலத்தைய ஊர்ப்பெயர்கள், வணிகக் குழுக்கள், அரசர்கள், மக்கள் பெயர்கள் போன்றன அறியப் பெறுகின்றன. இவற்றின் வாயிலாக சங்க இலக்கிய மரபுகளுடன் இவை ஒத்துப்போவதால் இவை சங்கத்தின் காலத்தை முடிவு செய்ய உதவியுள்ளன என்பது குறிக்கத்தக்கது.
நாணயங்கள்
தொகுதொன்மை காலத்து நாணயங்களில் காணப்படும், எழுத்து, உருவ அமைப்புகள் கொண்டும் தமிழின் இருப்பை, தொன்மைக் காலத்தது என்று உணர்த்த முடிகின்றது. நடன. காசிநாதனின் `தமிழர் காசுஇயல்' என்ற நூல் சங்ககாலம் முதல் தமிழகத்தின் நாணய வளர்ச்சியை எடுத்தியம்புவதாக உள்ளது.
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அழகன் குளம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றில் நிகழ்த்தப்பெற்ற கடலாய்வுகள் வழியாகக் கண்டெடுக்கப் பெற்ற நாணயங்கள் தமிழின் தொன்மையைக் காட்டும் மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.
"பூம்புகாரக் காசில் முன்பக்கம் யானையின் உருவமும், பின்பக்கம் புலி வலது காலைத் தூக்கிய நிலையில் உள்ள உருவமும் காணப்படுகிறது. அழகன் குளக் காசுகளில் பெரியதாக உள்ள காசில் முன்பக்கம் யானை மற்றும் எண் மங்கலச் சின்னங்களும் பின்பக்கம் மீன் உருவம் போன்றும் உள்ளன." (நடன. காசிநாதன், தமிழர் காசுஇயல். ப.21) என்ற அவரின் கருத்து இதனை மெய்ப்பிப்பதாக உள்ளது.
இவை தவிர பல வெளிநாட்டுக் காசுகளும் தமிழகத்தில் கிடைத்துள்ளன. குறிப்பாக ரோமாணிய நாட்டின் காசுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைத்து வருகின்றன. இவற்றின் கால அளவும் தமிழின் தொன்மையை அறிவிக்க உதவுகின்றன. `இய்யல் என்னும் ஊர் சேர நாட்டின் பண்டைத் துறைமுகங்களாகியத் தொண்டி மற்றும் முசிறி ஆகியவைகளுக்கிடையில் அமைந்துள்ளது. இய்யலில் கிடைத்துள்ள காசுகளில் நான்கு காசுகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ரோமானிய நாட்டில் நிலவிய 'ரிபப்ளிகன்' காலத்தில் வெளியிடப்பட்டவை. அவை மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனாலும் கி. மு. 123 ல் இருந்து கி. மு. 86 ஐச் சார்ந்தது என்பது தெளிவாகும் என்று டாக்டர் பரமேஸ்வரி லால் குப்தா தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள், மேலது) இக்கருத்தின் முலம் தமிழர்களின் வாணிகப் பெருமை ரோமாபுரி வரை பரவியிருந்தமை தெரியவருகிறது. இவற்றின் மூலமாகவும் தமிழின் காலத்தை நிர்ணயித்துக் கொள்ள முடிகின்றது.
ரோமானியத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிளைனி (கி.பி. 70), பெரிபுளுஸ் (கி.பி. 80), தாலமி (கி.பி. 120)ஆகியோர் தம் குறிப்புகளும் தமிழகத்தில் முவேந்தர் ஆட்சி நடைபெற்றதையும், வணிகம் சிறப்புற்றிருந்ததையும் குறிக்கின்றன. (விரிவிற்கு: மா. கந்தசாமி, தமிழகத் தொன்மையும் சிறப்பும், குமரன் பதிப்பகம் , சென்னை)
இவ்வாறு நாணயங்கள் வழியாகவும் தமிழின் தொன்மையை நிறுவிக் கொள்ள முடிகின்றது.
மேற்காட்டியவற்றின் வழியாக சங்க காலம் என்பதன் முடிவுப் பகுதியை உறுதி செய்து கொள்ளமுடிகின்றது. அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதான வாழ்வினைச் சங்கத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர் என்பதே அந்த முடிவாகும். அக்காலத்திலேயே நயத்தக்க நாகரீகம் மிக்க உயர்குடியாக தமிழ்மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு அவர்களின் சங்க இலக்கியங்கள் சான்று பயக்கின்றன.
இந்தக் காலத்திற்கும் முன்னதாக தமிழன் வாழ்ந்திருக்கிறான் என்பதாக தற்போதைய ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற பண்டைய நாகரீகக் களத்தில் வாழ்ந்த குடி தமிழ்க்குடி என்பதே தற்போதைய ஆய்வுகளின் முடிவாகும். இப்பகுதிகளில் காணக்கிடைக்கும் வரிவடிவங்கள் தமிழின் தொன்மை வடிவங்கள் என்பதைப் பின்லாந்து அறிஞர் 'பர்கோலா' நிறுவிவருகிறார். சிந்து சமவெளி நாகரீகம் எனப்படும் இந்த நாகரீகத்தின் மூலமே 'திராவிடம்' என்ற கருத்தினை உலக அளவில் உறுதி செய்யும் ஆய்வுகள் தற்போது எழத் தொடங்கிவிட்டன.
ஆரியர்கள், திராவிடர்கள் வடமொழி, தென்மொழி என்ற இரு எல்லைகளில் ஆரியர்களுக்கு முந்தையவர்களாகத் திராவிடர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்தனர் என்ற கருத்தினுக்கு வலு சேர்க்கும் வண்ணமாக இவ்வாய்வுகள் தற்போது வலிமை பெற்று வருகின்றன. அங்குக் கிடைத்துள்ள ஆபரணங்கள், கருவிகள், மண்பாண்டங்கள் போன்றவற்றில் உள்ள எழுத்து வடிவங்களை முன்வைத்தே இவ்வாய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்கக் கிடைத்திருக்கும் சான்றுகளைக் கொண்டு அவற்றின் வழியாகப் பெறப்படும் வாழ்முறை, நாகரீகம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் திராவிட இனத்தை முன்னைப் பழமைக்கும் மூத்த பழமையாக காட்டி நிற்பதே இவ்வாய்வுகளின் நோக்கமாகும்.
இந்திய அரசின் செம்மொழி நிறுவனமும் தமிழின் தொன்மையை ஒத்துக் கொள்கிறது. அது எவ்வளவு காலம் என்பதில்தான் சிக்கல் உள்ளது. செம்மொழி நிறுவனம் தமிழின் தொன்மை என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று குறித்துத் தன்னிறைவை அடைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்கலாம் என்ற கருத்துரு ஏற்கப்பட்டிருப்பினும் தமிழின் தொன்மை அதனைத் தாண்டி மிகவும் முந்தையது என்பதை நிறுவத் தமிழ்த் தொன்மை பற்றிய ஆய்வுகள் உதவும் என்பதில் ஐயமில்லை.
பயன் கொண்ட நூல்கள்
தொகு1. கந்தசாமி. மா. தமிழகத் தொன்மையும் சிறப்பும், குமரன் பதிப்பகம், சென்னை, 2003
2. காசிநாதன்.நடன., தமிழர் காசுஇயல், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1993
3. சுப்பிரமணியம் ச.வே., தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம்.2007
4. செல்லம். வி.டி., தமிழகம் வரலாறும் பண்பாடும், மதுரை பப்ளிசிங் அவுஸ், மதுரை, 1976
5. மலர்க்குழு, உலகச் செம்மொழி மாநாட்டு மலர், தமிழ்நாடு அரசு, கோவை, 2010