சமையல் நூல்/ஒட்டு மா (முட்டை மா)

  அரிசிமா (வறுத்தது) - ஒரு சுண்டு (நிரப்பி)(399 கிராம்)
  முட்டை - 2
  சீனி (சர்க்கரை) - அரை சுண்டு (199 கிராம்)
  நல்லெண்ணெய் - அரை சில்வர் டம்ளர்
  வெனிலா - 2 மேசைக்கரண்டி
  உளுத்தம்மா - கால் சுண்டு (99 கிராம்)


  ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
  உடைத்து ஊற்றிய முட்டைகளின் மேல் சீனியை(சர்க்கரையை) போடவும்.
  பின்பு இவையிரண்டையும் நன்றாக அடித்து கரைக்கவும்.
  (சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக கரைய வேண்டும் (எக் பீட்டரினால் அடிக்கவும்).
  சீனி(சர்க்கரை) முட்டையுடன் சேர்ந்து நன்றாக கரைந்த பின்பு அதனுடன் வெனிலாவையும் சேர்த்து அடிக்கவும்.
  அதன் பின்பு அடித்து வைத்து உள்ள இக்கலவையுடன் வறுத்த அரிசிமா, உளுத்தம்மா ஆகியவற்றை சிறிது சிறிதாக தூவி எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  எல்லாம் கலந்த பின்பு அதனுடன் நல்லெண்ணெயை விட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.
  குழைத்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் விடவும்.
  நல்லெண்ணெய் விட்டபின்பு தாட்சியை(வாணலியை) அடுப்பிலிருந்து எடுத்து நல்லெண்ணெய் தாட்சியின்(வாணலியின்)எல்லா பக்கமும்படும்படி நன்றாக சுற்றவும்(அப்பத்திற்கு சுற்றுவது போல).
  பின்பு தாட்சியை (வாணலியை) அடுப்பில் வைத்து அதில் குழைத்து வைத்த மாக்கலவையை போடவும்.
  தாட்சியில்(வாணலியில்) போட்ட மாக்கலவை அடிப்பிடிக்காமல் இருக்க கரண்டியால் இடைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டிருக்கவும்.
  இக்கலவை நன்றாக உதிர்ந்து மண்ணிறமான சிறு மணிகள்போல இருக்கும்போது முட்டைமா தயாராகி விடும்.
  முட்டைமா தயாராகிய பின்பு இந்த முட்டைமா உள்ள தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கவும்.
  அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில் இருக்கும் முட்டை மாவை ஒருபாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.
  முட்டை மா நன்றாக ஆறிய பின்பு இதை சுத்தமான போத்தலில் போட்டு காற்று போகாதவாறு நன்றாக இறுக்கி மூடிவைக்கவும்.
  முட்டைமா சாப்பிட தேவைப்படும் போது முட்டைமா உள்ள போத்தலை எடுத்து அதன் மூடியை திறந்து தேவையான முட்டைமாவை எடுத்து சாப்பிடலாம்.

சுவையானது சத்தானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடியதும் கல்சியம், மினரல், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், விற்றமின், பொஸ்பரஸ், இரும்பு போன்ற பலசத்துகள் அடங்கியதும் வித்தியாசமானதும் ஆகும். இதனை ஓட்டுமா எனவும் அழைப்பார்கள். எச்சரிக்கை - இருதயநோயாளர், சர்க்கரைநோயாளர் வைத்தியரின் ஆலோசனையை கேட்ட பின்பு சாப்பிடலாம். கவனிக்கவேண்டியவிசயங்கள் - முட்டைமாவை(2 - 8)கிழமைவரை வைத்து சாப்பிடலாம்.