சமச்சீர்க் கல்வி

சமச்சீர்க் கல்வி என்பது அனைவருக்கும் ஒரே சீரான கல்வி அளிப்பதைக் குறிக்கும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது போலவே கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதைக் களைந்து அனைவரும் ஒரே சீரான கல்வி பெறுதல் என்னும் ஒரு கோட்பாடு தான் இந்தக் கல்வியின் மூலாதாரம். ஆனால் நடைமுறையில் சமச்சீர்க் கல்வியை உடனடியாக அமல்படுத்த முடியுமா? கண்டிப்பாக முடியாது. எப்படி சமூக ஏற்றத்தாழ்வுகளை உடனடியாகக் களைய முடியாதோ அப்படியேதான் சமச்சீர்க் கல்வியையும் உடனடியாக அமல்படுத்த முடியாது. 'தனிஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழிப்போம்' என்ற வரி உலகில் அனைவருக்கும் குறைந்தபட்சம் உணவாவது கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்னும் உயரிய கொள்கையை வலியுறுத்தினாலும் அதை நடைமுறைப்படுத்த, அதாவது உலகில் ஒரு மனிதனுக்கு உணவு கிடைக்கவில்லை என்னும் பொழுது உலகத்தையே அழித்துவிடவோ அல்லது உலகில் பசி பட்டினியில் யாருமே வாடவில்லை என்ற நிலையை உருவாக்கவோ இதுவரை எவராலும் முடியவில்லை. எனவே 'ஏழைகள் உணவுக்காகச் சிரமப்படும் பொழுது வசதியானவர்கள் மட்டும் எப்படி உணவு உட்கொள்ள முடியும்? என எப்படி ஒருவர் கேள்வி கேட்க முடியும்? அல்லது, ஏழைகளுக்கு உணவு கிடைக்காத போது யாரும் உணவு உண்ணக்கூடாது அனைவரும் ஒரே வகையான உணவைத்தான் உட்கொள்ள வேண்டும்' என்று சட்டம் இயற்றுவதைப்போலத் தான் இருக்கும் சமச்சீர்க் கல்வியை உடனடியாக அமல்படுத்துவது!

இந்தியாவைப் பொறுத்தளவில் கல்வி என்ற ஒன்றில் பழம் பெரும் பல்கலைக்கழகங்களை பன்நெடுங்காலத்திற்கு முன்னரே ஏற்படுத்தி உலகளவில் மாணவர்களை இந்தியா ஈர்த்துள்ளது உலகறிந்த வரலாறு. இருப்பினும் விடுதலைக்கு முன்னர் வசதி படைத்தவர்கள் மட்டும் கல்வி பெற முடியும் என்ற நிலை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. 'கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு', 'கல்வி கரையில; கற்பவர் நாள் சில' என காகிதம், எழுதுகோல், அச்சு என எதுவும் வருவதற்கு முன்னரே தமிழகத்தில் கல்வியின் பெருமையையும், அறிவின் தேவையையும் அறிந்திருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்தில் வளம் பெற்றிருந்தாலும், கற்போரின் எண்ணிக்கை முன்காலத்தில் மிகவும் குறைவாகத்தான் இருந்தது என்றால் அதற்கு கல்வி நிறைய பேருக்கு எட்டவில்லை எனக் காரணம் சொல்லலாம். எனினும் கல்வியே தனிமனித முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் இன்றியமையாத் தேவை என்பதை உணர்ந்த, ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்கள் விடுதலைக்குப் பின்னர் கல்வியை இலவசமாக அனைவருக்கும் வழங்க முடிவு செய்தனர். இப்படிக் கல்வியை இலவசமாக வழங்க முடிவு செய்த பொழுது தேவையான அளவு பாடசாலைகளை ஏற்படுத்த அரசினால் இயலவில்லை என்ற நிலையில், குறிப்பாக நிருவாகம் செய்வதில் அரசுக்கு பெருமளவு இயலாமலிருந்ததால், புதிய கல்விக்கூடங்களை நிருவகிக்க தனியாரின் துணையை அரசு நாடியது. இந்த நேரத்தில் தான் பல தனியார்களும், இயக்கங்களும், மத ரீதியான அமைப்புக்களும் கல்விக் கூடங்களை நிருவகிக்க முன்வந்தன. இப்படி வந்தவைதான் அரசு உதவி பெரும் தனியார் கல்விக்கூடங்கள் (Government Aided Educational Institutions) ஆகும். இப்பள்ளிகளில் நிருவாகம் மட்டுமே தனியார் வசம் இருந்ததே தவிர, ஊதியம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் அரசே மேற்கொண்டது. இந்த முறையில் பெரும்பான்மையான இடங்களில் தொடக்கக் கல்வியையும், சில இடங்களில் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியையும் மிகச் சில இடங்களில் கல்லூரிக் கல்வியையும் வழங்க அரசு உதவியுடன் தனியார் நிருவாகத்தில் கல்விக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கல்வி என்பது கடலை விட மிகப் பெரியது என்ற நிலையில் அனைத்துக் கல்வி அறிவையும் அரசு இலவசமாக வழங்க முடியுமா? எனவேதான் தொடக்கக் கல்வியை மட்டும் முழு அளவிலும், இடைநிலைக் கல்வி மற்றும் உயர் கல்வியை முடிந்த மட்டும் அரசு வழங்கத் தயாராக இருந்தது. இங்கே அரசு வழங்காத கல்வியை ஒருவர் பொருள் செலவழித்துக் கற்றுக் கொண்டால் அதைத் தடுக்க அரசுக்கு ஏதேனும் உரிமை உள்ளதா என்றால் இல்லை என்பதே இந்திய அடிப்படை உரிமைகள் சட்டத்தின் படிப் பொருள் கொள்ளப்படும்.

இப்படி ஏற்படுத்தப்பட்ட கல்விக்கூடங்களில் அரசினர் கல்விக் கூடங்கள் மற்றும் அரசு உதவி பெரும் தனியார் கல்விக் கூடங்களில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் படித்துவந்தனர். தொடக்கக் கல்விக் கூடங்கள் அனைத்து சிற்றூர் முதல் பட்டணம் வரை இருந்ததால் இடறேதுமின்றிப் பலர் ஆர்வத்துடன் பள்ளி சென்று படித்தனர். ஆனால் இடைநிலைக் கல்வி கற்க, பேருந்து வசதி கூட இல்லாத அந்த நேரத்தில் அதிக அளவாக பத்து 'கிலோ மீட்டர்' தொலைவைக் கூட நடந்து சென்று படிக்க வேண்டிய கட்டாயமிருந்தது. இதனால் சிலர் பல வித வண்டிகளைப் பயன்படுத்தி பள்ளிக்குச் சென்று வந்தனர். இதைப்பார்த்த ஒரு சில கல்விச் சிந்தனையாளர்கள் 'உண்டு, உறைவிடப் பள்ளிகளை (Schools with Hostels-ஐ)த் ' தொடங்கினர். தொடக்கக் கல்வியை இலவசமாக வழங்கிய அரசால் இவற்றையும் இலவசமாக வழங்க முடியுமா? எனவே உணவிற்காகவும், கட்டிடம் கட்டுவதற்காகவும் இப்பள்ளிகளில் கட்டணம் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதுவே பிற்காலத்தில் நன்கொடை என்ற அளவிற்கு மாறியது. இப்படி நன்கொடை வாங்கி, கட்டடம் கட்டி வைத்துவிட்டு மாணவர்களைச் சேர்க்காமல் இருந்தால் பொருள் இழப்பு ஏற்படுமே. அதனால் மாணவர்களைச் சேர்க்கும் கட்டாயம் ஏற்படவே, இந்த அரசு உதவி பெரும் கல்விக் கூடங்கள் 'கற்பித்தலை' மேம்படுத்தின. இதனால் இக்கல்விக் கூடங்களில் கல்வியின் தரம் உயர்ந்தது, இவைகளுக்கு மிகவும் நல்ல பெயர் ஏற்பட்டது. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் 'ஆசிரியரின் பிரம்படிக்குப்' பயந்தே பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்றனர். இப்போதுள்ள நிலையைப்போல் அப்போதைய பெரும்பாலான மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கவில்லை. பெற்றோர் அடித்துத் துன்புறுத்தியே பள்ளிக்கு அனுப்பிவந்தனர். பெரும்பாலான மாணவர்களைப் பொறுத்த அளவில் கற்றல் என்பதே பெரிய தலைவலியாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு, பெற்றோருக்கும் தெரியாமல், ஆசரியர்களுக்கும் தெரியாமல் பள்ளிக்குச் செல்லாமலேயே சுற்றித் திரிந்தனர். அரசு உதவி பெரும் தனியார் கல்விக்கூடங்களில் கல்வியின் தரம் உயர்ந்து இருந்ததாலும், மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்திக் கற்பித்ததாலும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இது போன்ற தனியார் கல்விக்கூடங்களில் சேர்த்தனர். அரசினர் கல்விக் கூடங்களில் சரியாகப் படிக்காத மாணவர்களும் இத் தனியார் கல்விக் கூடங்களில் அதிக மதிப்பெண்கள் பெரும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து மழலையர் பள்ளிகளும் உருவாயின. இப்பள்ளிகளில் அரசினர் கல்விக் கூடங்களிலோ, அரசு உதவி பெரும் தனியார் கல்விக் கூடங்களிலோ இல்லாத பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. கற்றல், கற்பித்தல் ஆக்கிய இரண்டுமே உயர் தரத்துடன் இருந்தன. இது போன்ற கல்வி நிலையங்களில் ஆங்கிலமே பயிற்று மொழியாகத் திகழ்ந்தது. பொது மக்களின் ஆங்கில மோகம் இப்பள்ளிகளை அதிக அளவில் நாட வைத்தது.

இந்த நேரத்தில் கல்வியின் தேவையும் மாறியது. வாழ்கையின் அடித்தளத்தை அறிந்து கொள்ளும் அளவிற்கான தொடக்கக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் இலவசமாகப் பெற்ற பின்னர் அதற்கு மேல் 'வேலைக்குச் சென்று பணம்' சம்பாதிக்கக் கூட கல்வி தான் தேவை என்ற ஒரு நிலையும் வர அரசு வழங்கும் இலவசக் கல்வியைத் தாண்டி பணம் கொடுத்தேனும் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தனியார் கல்விக் கூடங்கள் பெருக இதுவே காரணம். வேறு மாநிலங்களில் இருந்து கூட ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகத் தனியார் பள்ளிகளில் வந்து தங்கிப்படித்தனர். இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்கெல்லாம் தேவையான புதிய பள்ளிக் கூடங்களை ஏற்படுத்த அரசிற்கும் முடியவில்லை. எனவே அரசு தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகள் உருவாவதைத் தடுக்கவோ அவைகளின் பாடத்திட்டங்களுக்குத் தடை ஏற்படுத்தவோ முன்வரவில்லை. அப்படி அரசு ஏதேனும் செய்து, தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளின் திறமைக்கு ஒரு தடை போட்டிருந்தால் தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகள் பெருகி இருக்காது; மாணவர்களின் எண்ணிக்கை கூடியதற்காக அரசும் புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டி புதிய ஆசிரியர்களை நியமித்துக் கல்வி வழங்கி இருக்காது; இன்றைய தமிழகக் கல்வி 'அதல பாதாளத்திற்குச்' சென்று இருக்கும். இப்படிக் கல்விக் கூடங்கள் பெருக, இவைகளுக்கு இடையில் போட்டி போட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கும் கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு தனியார் 'மெட்ரிகுலேசன்' கல்விக் கூடங்களில் கல்வியின் தரம் உயர்ந்தது. தரத்தை உயர்த்தத் தேவையான நிதி ஆதாரம் பெற்றோர்களால் பங்கிட்டுக் கொள்ளப்பட்டதால் இது எளிமையான ஒன்றானது. ஆனால் அரசினர் கல்விக் கூடங்களில் செலவுகளைப் பங்கிட்டுக்கொள்ள யாருமில்லை. எனவே கற்பித்தலை மேம்படுத்த தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளுக்கு ஈடு கொடுத்துப் பணியாற்ற முடியவில்லை. இதற்குப் பல சமூக மற்றும் அரசியல் காரணங்களையும் கூறலாம்.

இந்நிலையில் மாணவர்களின் அறிவுப் பசிக்கு நல்ல தீனி போடும் நிலையில் தனியார் கல்விக் கூடங்களும், இதற்கு எதிர் நிலையில் அரசினர் கல்விக் கூடங்களும் இருந்ததை மறுப்பதற்கில்லை. இருப்பினும் அரசினர் கல்விக் கூடங்களில் இருந்த பாட திட்டங்களைக் குறை கூற முடியாது என்றாலும், அவற்றை மேம்படுத்தத் தேவையான கல்வியியல் உபகரணங்கள், மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளில் தனித்தனிப் பாடத்திட்டங்களை உருவாக்குவதில் அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் ஒவ்வொரு தனியார் பள்ளி நிருவாகமும் பல திறமைகளைக் கையாண்டு மிகச் சிறந்த பாடத்திட்டங்களை உருவாக்கின. தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகள் தரமான கல்வி வழங்கியதன் பின்னணியில் அவர்களின் பாடத் திட்டமும், அதை அமல்படுத்தத் தேவையான வசதிகளும், உழைப்பும், திறமையும் காரணமாக அமைந்தன. எனவே தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்தரக் கல்வி அறிவு பெற்றனர். இவர்கள் பிற்காலத்தில் உயர் கல்வி பெரும் பொழுது தாங்கள் சிறு வயதில் தனியார் பள்ளிகளில் கற்ற உயர் தரக் கல்வி இவர்களுக்குத் துணை நின்றது என்பதையும் மறுக்க முடியாது.

இந்த உயர் தரக் கல்வியை ஏழை மாணவர்கள் பெற முடியவில்லை என்ற கசப்பான உண்மையை மாற்ற அரசு பெரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்ற ஒரு மிகப்பெரிய குறையையும் யாரும் மறுக்க முடியாது. இந் நடவடிக்கைகளை அரசு எடுக்க முன்வருமானால் அதற்குப் பெரும் அளவில் நிதி தேவைப்படும். தனது மொத்தச் செலவினத்தில் பெரும் பகுதியை கல்விக்கு என்றே ஒதுக்கியும், அந்நிதி பள்ளிகளை நவீனமயப்படுத்தவோ, கற்பித்தலை மேம்படுத்தவோ உதவும் அளவிற்கு இல்லாததால் கல்வியின் தரத்தை உயர்த்த முடியவில்லை. இதனால் கல்வி கற்றலில் ஒரு ஏற்றத் தாழ்வு ஏற்பட்டது.

இந்த ஏற்றத் தாழ்வுகளைச் சரி செய்ய வேண்டுமானால் அரசு படிப்படியாக அரசுப் பள்ளிகளில் கட்டடம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். கற்பித்தலுக்குத் தேவையான உபகரணங்களைத் தருவிக்க வேண்டும். தகுதியுடன், திறமையும் மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இப்படிப் பல வழிகளில் முயன்றால் ஒழிய சமச்சீர்க் கல்வியைக் கொண்டு வர முடியாது. ஒரே பாடத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தினால் மட்டும் சமச்சீர்க் கல்வியை எக்காலத்திலும் கொண்டு வர முடியாது.

மாறாக பாடத் திட்டங்களை மட்டும் ஒரே சீராக மாற்றுவதில் பல சமுதாயச் சீர்கேடுகள் ஏற்படவே நிறைய வாய்ப்புகள் உள்ளன. முதலில் தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகள் அரும்பாடுபட்டு உருவாக்கிய தனித்தனிப் பாடத் திட்டங்கள் முடங்கி விடும். இது கற்பிக்கும் ஆசிரியர்களையும், நிருவாகத்தினரையும் சோர்வடையச் செய்யும். ஏனென்றால் எதிலும் ஒரு போட்டி இருந்தால் தான் எவரும் திறம்படச் செயல்பட முடியும். உலக அளவில் நடைபெறும் துடுப்பாட்டப் (Cricket) போட்டிகளில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வீரரும் 'உயிரைக் கொடுத்தேனும்' மிகத் திறமையாக விளையாடிப் பரிசு பெறவேண்டும் எனத் துடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளிலும் தமது பாடத்திட்டங்கள் மற்ற கல்விக்கூடங்களின் பாடத் திட்டங்களை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற துடிப்புடனேயே ஒவ்வொரு பள்ளியும் பாடத் திட்டங்களை நடைமுறைபடுத்துகின்றன. இப்படி நடைமுறைப்படுத்தப்படும் துடிப்பான பாடத்திட்டங்களே நிருவாகத்தையும், ஆசிரியர்களையும் துடிப்புடன் செயல்படத் தூண்டுகின்றன. கற்போருடைய அறிவாற்றலை வளர்க்கத் தூண்டும் வகையில் சிறப்பான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் தங்களது தனித்தன்மையைப் பயன்படுத்திச் சாதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. துடுப்பாட்டப் போட்டியில் ஒரு வீரர் சரியாக பயிற்சி பெற வாய்ப்புக் கிடைக்காததால் மோசமாக விளையாடுகிறார்; அவர் பயிற்சி பெறமுடியாமைக்குக் காரணம் அவருடைய வறுமை என்று வைத்துக்கொள்வோம். இதைக் காரணம் காட்டி, அனைவரும் மோசமாகத் தான் விளையாட வேண்டும் அல்லது ஒரே மாதிரியாகத்தான் விளையாடவேண்டும் என்று சட்டம் போட்டால் எப்படி இருக்கும்?

ஏழையாகப் பிறந்தும் அரசுப் பள்ளிகளில் படித்தே மிகவும் திறமையாகவும், மன உறுதியுடனும், கடின உழைப்புடனும் அதிக மதிப்பெண்கள் பெறும் சிலரும் உள்ளனர். அப்படி ஒருவர் முன்னேறி தனது திறமையால் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதன் நிருவாகக் காரணங்களுக்காக வான ஊர்தியில் வெளிநாடு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஏழைகள் பேருந்துக் கட்டணம் செலுத்திப் பேருந்திலேயே செல்ல முடியாமல் இருப்பதால் அவரும் 'மாட்டு வண்டியில்' தான் பயணிக்க வேண்டும், வான ஊர்தியில் பயணிக்கக் கூடாது என்று சட்டம் போட்டால் எப்படி இருக்கும்?

சமச்சீர்க் கல்வி என்பது அனைவரும் ஒரே சீரான கல்வி பெற வேண்டும் என்பது தான். இங்கு மலைவாழ் மக்கள், நரி குறவர் உள்ளிட்ட சில சமூக மக்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கே அனுப்புவதில்லை. எனவே அவர்கள் கல்வி கற்கக் கூட முடியாத நிலையில் இருப்பதால், இன்னும் சமச்சீர்க் கல்வியை நாம் எட்ட வில்லை; எனவே, அவர்களும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் வரை மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்று சட்டம் போட்டால் எப்படி இருக்கும்? பள்ளிக்கூடத்திற்கே செல்லாத குழந்தைகளை முதலில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முயற்சிகள் எடுக்க வேண்டும். பின்பு அவர்களிடையே கற்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இப்படிப் படிப்படியாக அவர்களையும் அனைவருக்கும் சமமான ஒரு நிலைக்கு உயர்த்த வேண்டுமே ஒழிய அவர்கள் படிக்கும் வரை பிற யாரும் படிக்கக் கூடாது என்று சொன்னால் என்ன பொருள்?

நன்றாகப் படிக்கும் குழந்தை முதல், நன்றாக ஆட்சி செய்யும் பிரதமர் வரை அவர்களுடைய செயலை மிளிரச் செய்ய மேலும் மேலும் அவர்களை உழைக்க வைக்க வேண்டும் என்றால் அவர்களுடைய உழைப்பு மதிக்கப்பட வேண்டும்; மதிப்பிடப்பட வேண்டும். இந்த மதிப்பிடலில் இந்த உழைப்பு போற்றப்பட்டால் தான் அவர்களால் ஊக்கத்துடன் செயல்படமுடியும். அதற்காகத் தான் படிக்கும் மாணவனுக்கு, அவனை ஊக்குவிக்கும் விதமாக மதிப்பெண்கள் வழங்கப்பெறுகின்றன; விளையாடும் வீரனுக்குப் பரிசு வழங்கப்படுகிறது! அவர்களுடைய உழைப்பு மதிக்கப்படாவிட்டால் அவர்களால் மிளிர முடியுமா? தேர்வில் நன்றாகப் படிக்கும் மாணவனுக்கும் ஒரே மதிப்பெண், மோசமாகப் படிக்கும் மாணவனுக்கும் ஒரே மதிப்பெண் என்று அறிவித்தால் அது மோசமாகப் படிக்கும் மாணவனுக்கு மகிழ்ச்சியையும், நன்றாகப் படிக்கும் மாணவனுக்கு வேதனையையும் அல்லவா தரும்? விளையாட்டில் மோதிக்கொள்ளும் இரு அணியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், இருவருக்கும் ஒரே பரிசு; பெருமை என்று சொன்னால் எப்படித் திறமையைப் பயன்படுத்தி விளையாட முன்வருவர்?

அதே போல், கற்பித்தலில், என்ன கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அல்லது பாடத் திட்டத்தை வகுத்துக்கொள்ளும் உரிமை கற்றுக்கொடுப்பவருக்கே முழுக்க முழுக்க அளிக்கப்பட வேண்டும். இதில் அரசு எதிர்மறையாகத் தலையிடக் கூடாது. மாணவர்களின் அறிவிற்கு இலக்கை வேண்டுமானால் அரசு நிர்ணயிக்கலாம். அந்த இலக்கை அடையும் வழியை வகுக்கும் உரிமை முழுவதும் கற்றுக் கொடுப்பவருக்கே வழங்கப்பட வேண்டும். இப்படி வகுக்கப்படும் பாடத்திட்டங்களில் குறை இருப்பதாகக் கண்டுபிடித்தால் வேண்டுமானால் அரசு அதில் தலையிடலாம். அதை விடுத்து, திறமையாக உருவாக்கப்படும் பாடத்திட்டத்தைக் கைவிட்டு விட்டு அரசு சொல்லும் பாடத்திட்டத்தைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது கற்றுக்கொடுப்பவரின் உரிமையில் தேவையில்லாமல் தலையிடுவதற்குச் சமம். எவருடைய உரிமையிலும் தேவையில்லாமல் தலையிட எவருக்கும் உரிமை இல்லை என்பதை அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி இந்த உரிமையை அளிக்கும் பொழுதுதான் பாடத் திட்டங்கள் தயாரிப்பில் ஒரு தரமான போட்டி நிலவும். அப்பொழுதுதான் மிகச் சிறந்த பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும்; உலகத் தரத்திற்கு ஏதுவாக மாணவர்கள் உருவாக்கப்படுவர். தற்பொழுது உள்ள அரசுப்பாடத் திட்டங்களில் கூட தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளின் பாடத் திட்டங்களின் பாதிப்பு இருப்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் தரமான தனியார் பாடத்திட்டங்கள் இல்லாமலிருந்திருந்தால் அரசின் பாடத் திட்டம் கல்வியைக் குழி தோண்டிப் புதைக்கும் அளவிற்கே இருந்திருக்கும் என்ற நிதர்சனத்தை அரசு பெருந்தன்மையுடன் ஒத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பாடத் திட்டங்கள் தான் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் உயிர்நாடி என்பதும், மிகச் சிறந்த பாடத் திட்டங்களை உருவாக்குவதிலும், அதை நடைமுறைப்படுத்தி மாணவர்களை அதிக அளவில் சாதிக்க வைப்பதிலும் இருக்கும் மன நிறைவு தான் தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளுக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். இது ஒரு மாணவன் அதிக மதிப்பெண் வாங்குவதில் உள்ள மகிழ்ச்சியையும், வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்கள் பரிசு பெரும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியையும் விடப் பெரிய மகிழ்ச்சியை- மன நிறைவை இப்பள்ளிகளுக்கு அளிப்பதாலேயே அவர்கள் துடிப்புடன் செயல்பட்டு, அரசினர் பள்ளி மாணவர்களையும் தங்களிடம் ஈர்த்துள்ளனர். பல்கலைக் கழகங்களில் கூட பட்டம் வழங்குவதற்கு ஏற்ற தகுதியைத் தான் அரசு நிர்ணயித்துள்ளது. பாடங்களை ஒவ்வொரு பல்கலைக்கழகமும், அல்லது கல்லூரியும் தமக்கு ஏற்றார்போல்தானே நிர்ணயிக்கின்றனர்? தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளில் மாணவர்களின் பழக்கவழக்கங்களும் மிக நேர்த்தியாக கற்றுக்கொடுப்பதையும் அரசு உணர வேண்டும். ஒவ்வொரு மாணவனின் மீதும் தனிக் கவனம் செலுத்தி, அவர்களுடைய பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் உள்பட அனைத்திலும் பெற்றோருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தரமான குடிமக்களை உருவாக்குவதிலும் தனியார் பள்ளிகள் மிகப்பெரும் பங்களித்திருப்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரே பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளின் உத்வேகம் தடைபடும். இப்படித் தடைபடும் பொழுது தமிழகத்தில் கல்வியின் தரம் குறையும். 'வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றல்' என்ற நிலை மாறி, தமிழக மாணவர்கள் கல்விக்காக தமிழகத்தை விட்டு பெருமளவு வெளியேறும் நிலைமை ஏற்படும் என்ற உண்மையையும் அனைவரும் உணர வேண்டும். தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளை மாணவர்களின் பழக்கவழக்கங்களும் மிக நேர்த்தியாக கற்றுக்கொடுப்பதையும் அரசு உணர வேண்டும். ஒரே சீரான பாடத் திட்டத்தை ஏற்படுத்தி அதனால் தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளின் செயல் வேகத்தைக் குறைக்கும் பொழுது தனியார் பள்ளிகளை மூடிவிட்டால் அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை என்ன? அந்த நேரத்தில் அவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்த்துக் கொள்வதற்கு அரசிடம் போதுமான வசதி இருக்கிறதா? இதற்கும் மேல், இப்பள்ளிகளை, பள்ளி என்ற தன்மைக்கு வெளியே தனியார் தனிப்பயிற்சி நிலையங்களாக மாற்றி, அங்கு தனியாக வேறு பாடத் திட்டங்களைக் கற்றுக்கொடுத்தால், பெற்றோர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களுடன் அவைகளும் முழு வெற்றி பெரும்; அவ்வேளையில் தனியார் பள்ளிகள் அனைத்தும் தனிப் பயிற்சி நிலையங்களாக மாறும். மாணவர்களை அரசுப் பள்ளிகளிலேயே சேர்த்துவிட்டுத் தனியாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், மற்ற நாள்களில் காலை மற்றும் மாலை வேலைகளிலும் மட்டும் செயல்பட்டுப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களாக இவை மாறினால், அதைத் தடுக்க அரசால் முடியுமா? அப்பொழுதும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை படித்து சான்றிதல் வாங்குவதை விட, தனியார் பயிற்சி நிலையங்களில் படித்து விட்டுப் பின்பு தரமான 'திறந்தநிலைப் பல்கலைக் கழகங்கள்' வாயிலாகத் தேர்வு எழுதிச் சான்றிதல் பெற்றுக்கொள்ளலாம் என்ற மனோநிலைக்குத் தள்ளபடுவர். எனவே ஒரே சீரான பாடத்திட்டத்தால் நன்மை ஏதும் விளையாவிட்டாலும், தீமைகளே அதிகம் விளையும். இதுவன்றி, தனியார் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளாக மாறிவிட்டால், அப்பொழுது தமிழக அரசின் பாடத் திட்டங்களும் செல்லாது. சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தையும் அரசுப் பள்ளிகளில் உடனடியாகக் கற்றுக்கொடுக்கும் வசதி இல்லை என்ற நிலையில் மீண்டும் கல்வியில் சமத்துவம் மங்கிவிடும். எனவே, இந்தத் தேவையற்ற சமச்சீர்க் கல்வியை உடனடியாகக் கைவிடவேண்டும்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, அரசு நினைத்தால் தனியார் 'மெட்ரிகுலேசன்' பள்ளிகளை விட பல மடங்கு உயர்தரத்துடன் கூடிய பாடத்திட்டங்களைத் தயாரிக்கக் முடியும்; இதற்கு யாரும் குறுக்கே நிற்பதில்லை; இதை யாரும் எதிர்க்கவுமில்லை என்ற உண்மையையும் உணர்ந்து அரசு தனது வல்லுனர்களின் துணையுடன் மிகச் சிறப்பான பாடத் திட்டத்தை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும். உழைப்பவனையும், முன்னேறுபவனையும் பார்த்து, 'என்னாலும் உன்னைவிட அதிகமாக உழைக்க முடியும்; உன்னை விட அதிவேகமாக முன்னேற முடியும்' என்று பொங்கி எழுவத விட, 'என்னுடைய நிலைமை மிக மோசமாக இருக்கிறது; அதனால் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு ஏற்றத் தாழ்வு நிகழ்கிறது; இதைச் சரி செய்யவும் என்னால் முடியாது; எனவே, நீயும் என்னைப்போலவே உன் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்வதைப் போல் தான் இருக்கிறது சமச்சீர்க் கல்வி முடிவு.

பாடத் திட்டங்களை மட்டும் மாற்றியமைத்தல் என்பது மைய அரசு நேரடியாக நடத்தும் பள்ளிகள், 'சர்வதேசப்' பள்ளிகள், சி.பி.எஸ்.சி. பள்ளிகள் போன்ற பல நிலைகளில் மிகக் கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=சமச்சீர்க்_கல்வி&oldid=16002" இலிருந்து மீள்விக்கப்பட்டது