கனடாவிற்கு குடிவரவு/அறிமுகம்

கனடா உலகின் சிறந்த வாழ்தரம் கொண்ட, அமைதியான, நவீன, பல்லினப் பண்பாட்டு நாடுகளில் ஒன்று. குடிவரவாளர்களால் கட்டப்பட்ட நாடுகள் சிலவற்றில் கனடாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் அதன் மக்கள் தொகையில் கணிசமான விழுக்காட்டை குடிவரவில் இருந்து கனடா பெற்றுக் கொள்கிறது.

கனடாவிற்கு குடிபெயர்வது சாதக பாதகங்களைக் கொண்ட ஒரு நகர்வு ஆகும். குடிவரவு முறைமை சிரமானது, போட்டிகள் நிறைந்தது, நீண்ட காலத்தை எடுக்கக் கூடியது. நீங்கள் இங்கு குடிபெயர்ந்த பின்பும் உங்களை பொருளாதார சமூக நிலையில் நிலை நிறுத்திக் கொள்ள பெரும் சவால்களை எதிர்கொள்வீர்கள். நீங்கள் தனியாக குடிபெயர்வதென்றால் உங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்களை விட்டு தூர தேசத்தில் வாழ்வது உங்களை உள உடல் நோக்கில் பாதிக்கலாம். கால நிலை மாற்றம், பண்பாட்டு அதிர்ச்சியும் கூட உங்களைப் பாதிக்கலாம்.

அதே வேளை கனடாவிற்கு குடிபெயர்வது உங்களை, எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்தை ஒரு உயர்ந்த வாழ்தரத்தில் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கும். சுதந்திரங்கள் மிக்க, கல்வி, பொருளாதர வாய்ப்புக்கள் மிக்க ஒரு நாட்டில் வாழ முடியும். சாதக பாதகங்களை அலசி நீங்கள் கனடாவிற்கு குடிவரவதை பரிசீலிப்பீர்கள் எனில், அதற்கான வழிமுறைகள் பற்றி இந்த நூலில் பார்க்கலாம்.