எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1

[10] படைத்தவர் கைகளில் இருந்து புறப்படும் பொழுது அனைத்தும் நன்றாகவே உள்ளன; அனைத்தும் மாந்தன் கைகளில் சீரழிகின்றன. அவன் (மாந்தன்) ஒரு நிலம் பிறிதொரு பொருளை ஆக்க வற்புறுத்துகின்றான், ஒரு மரத்தில் மற்றொரு பழத்தை உருவாக்குகின்றான். வானிலையையும், இயற்கையின் கூறுகளையும், பருவங்களையும் கலந்து குழப்புகின்றான். அவன் நாயையும், குதிரையையும், அடிமையையும் சிதைக்கின்றான். அவன் அனைத்தையும் தலைகீழாக மாற்றுகின்றான் அனைத்தையும் மூளியாக்குகின்றான், அவன் சிதைப்புகளையும் அரக்கரையும் விரும்புகின்றான். அவன் இயற்கை உருவாக்கியவாறு எதையும் விரும்புவதில்லை, மாந்தனாகிய அவனுட்பட. அவனுக்கு மாந்தன் ஒரு சேணம் ஏற்றிய குதிரையைப் போல பயிற்றப்படவேண்டும்; அவன் தோட்டத்தில் உள்ள மரங்களைப் போல் அவனை புதுப்போக்குக்கு ஏற்ப வடிவமைக்கப்படவேண்டும்

டthumb
டthumb

[11] இவையின்றி அனைத்தும் இன்னும் மோசமாக இருக்கும்; நம் இனம் அரைகுறையாக இருத்தல் கூடாது. இப்பொழுதுள்ள நிலைமையின் படி மாந்தன் பிறந்த்தில் இருந்தே அவன் போக்கில் விட்டால் மற்ற அனைத்தையும் விட சிதைந்த நிலையில் இருப்பான். முற்சாய்வு, அதிகாரம், தேவை, எடுத்துக்காட்டு, ஆகிய நாம் மூழ்கி இருக்கும் எல்லா குமுக சூழல்களும்- அவனுடைய இயல்பை திணறச்செய்து அவற்றுக்கு ஈடாக எதையும் வைக்காது இருக்கும். மாந்தன் இயல்பு ஒரு நெடுஞ்சாலையின் நடுவே தற்செயலாக இடப்பட்ட நாற்று போல் இருக்கும்; இப்படியும் அப்படியுமாகச் சாய்ந்து விரைவில் வழிப்போக்கர்களால் நசுக்கப்படும்.

[12] இது உங்களுக்காகத்தான் மென்மையான, முன்னோக்கான தாயே குறிப்பு-1 - உங்களுக்குத் தெரியும் எப்படி போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில் இருந்து விலகி மாந்தக் கருத்துகளில் இருந்து வளரும் இந்த இளம் நாற்றைக் காப்பாற்றுவது என்பது! நாற்று மடியும் முன்பு நீர் விட்டு பண்படுத்து, அதன் பழங்கள் ஒருநாள் உன் மகிழ்ச்சியாக விளங்கும். தொடக்கத்திலேயே உன் குழந்தையின் உள்ளத்தைச் சுற்றி வேலி அமை. வேறு ஒருவர் சுற்றுப்பஉற வட்டத்தைக் குறிக்கலாம், ஆனால் நீ மட்டுமே வேலி கட்ட வேண்டும் குறிப்பு-2

[13] செடிகள் பயிர்வளர்ப்பால் அவற்றின் அமைப்பைப்பெறும், மாந்தன் கல்வியால். ஒரு மாந்தன் உயரமாகவும் வலுவாகவும் பிறந்தால், அவனுடைய உருவவளவும் வலிமையும், அவற்றை அவன் பயன்படுத்தக் கற்கும் வரை அவனுக்குப் பயனற்றவை; அவை, பிறர் அவனுக்கு விரும்பி உதவ வருவதைக் கூட தடுத்துத் தீமை தரக்கூடும் குறிப்பு-3. அவன் பாட்டுக்கு அவனை விட்டால், தன் தேவைகளை அவன் உணரும் முன் அவன் துன்பத்தால் இறக்கவும் கூடும். குழந்தைநிலையில் (தனக்குத் தான்) உதவமுடியாதநிலையில் இருப்பதைக் கண்டு வருந்துகிறோம்; மாந்த இனமே அற்றுவிட்டிருக்கும், அவன் குழந்தைநிலையில் தொடங்காமல் இருந்திருந்தால் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்.

[14] நாம் வலுவின்றிப் பிறக்கின்றோம், நமக்கு வலு தேவை; ஒன்றுமே இல்லாமல் பிறக்கின்றோம், நமக்கு உதவி தேவை; அறிவின்றிப் பிறக்கின்றோம், தீர்வறிவு தேவை. பிறக்கும்பொழுது நம்மிடம் இல்லாத, வளர்ந்தபின் நமக்குத் தேவையான அனைத்தும் கல்வியால் கிடைக்கின்றது.

[15] நமக்கு இக்கல்வி இயற்கையில் இருந்தும், மாந்தர்களிடம் இருந்தும், பொருள்களில் இருந்தும் கிட்டுகின்றது. உடல் உறுப்புகளின் வளர்ச்சியும், சிந்தனைக் கூறுகளின் வளர்ச்சியும் இயற்கையின் கல்வி, இவ்வளர்ச்சியை நாம் பயன் படுத்திக்கொள்வது மாந்தர்களின் கல்வி, சுற்றுச்சூழல்களில் இருந்து நாம் பட்டறிவாகப் பெறுவது பொருள்களில் இருந்து நாம் பெறும் கல்வி.

[16] ஆக நாம் மூன்று ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றோம். எந்த மாணவருக்கு அவர்களின் வேறுபட்ட பாடங்கள் முரண்படுகின்றனவே அந்த மாணவர் தனக்குள் தான் இயல்பான சீரிசைவுடம் இருக்கமாட்டார்; எந்த மாணவருக்கு அப்பாடங்கள் இணங்கி ஒரே பொருளைத்தந்து ஒரே முடிவை நோக்கி செல்கின்றனவோ, அவர் நேரடியாக அவருடைய குறிக்கோளை எட்டுவார், தன்னுள் இசைவுடன் வாழ்வார். பின்னவர் செம்மையான வளர்ச்சி எய்தியவர்.

[17] கல்விக்கான இந்த மூன்று கூறுகளில், இயற்கையில் இருந்து பெறும் கல்வி நம் கையில் இல்லை; பொருள்களில் இருந்து பெறும் கல்வியும் ஒரு பகுதிதான் நம் கையில் உள்ளது; மாந்தர்களிடம் இருந்து பெறும் கல்வி ஒன்றுக்கு மட்டுமே நாம் முழு ஆசிரியர். இங்கும்கூட நம் வல்லமை பெரும்பாலும் மாயத்தோற்றம்தான், ஏனெனில் ஒரு குழந்தையைச் சூழ்ந்திருக்கும் எல்லோருடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் யார் கட்டுப்படுத்தி இயக்க முடியும்?

[18] ஆகவே கல்வி என்பது அந்த அளவுக்குக் ஒரு கலையே, இது வெற்றியடைதல் என்பது ஏறத்தாழ இயலாதது, ஏனெனில் வெற்றியடைவதற்கான நிகழ்நிலை எந்த ஒரு தனி மாந்தனை மட்டும் பொருத்தும் இல்லை. ஒருவர் தன் முயற்சிகளால் செய்யக்கூடியதெல்லாம் ஏறத்தாழ குறிக்கோளை நோக்கி நகர்வதே. அதனை எட்டுவதற்கு நல்லூழ் (நல்வாய்ப்பு) தேவை

[19] குறிக்கோள் என்ன? இயற்கையில் குறிக்கோள் என்பதுதான் நிறுவப்பட்டது. செம்மைநிலையை எட்ட மூன்று கூறுகளின் ஒத்தியக்கம் தேவை என்பதால், நாம் கட்டுப்படுத்தக்கூடிய இரண்டு கூறுகளும், நம் கட்டுப்பாட்டில் அடங்காத ஒன்றின் வழியைப் பின்பற்ற வேண்டும். ஒருகால் இந்த இயற்கை என்னும் சொல் மிகவும் தெளிவில்லாத பொருளைத் தருகின்றது. இதனை நாம் வரையறை செய்வோம்.

[20] இயற்கை என்பது வெறும் பழக்கம்தான் என்கிறார்கள் குறிப்பு-4. இது எதைக் குறிக்கின்றது? இயற்கையுடன் முரண்படாதவாறு, வலுக்கட்டாயமாக பழக்கங்கள் உருவாக்கப்படுவதில்லையா? எடுத்துக்காட்டாக செடிகள் நிமிர்ந்து வளர்வதற்கு மாறாக வேறு கோணத்தில் வளரும்படி மாற்றப்படுவது. விடுவிக்கப்பட்ட நிலையிலும், அச்செடி அது வளைத்துவிடப்பட்ட வடிவிலேயே நிற்கின்றது. ஆனாலும் மரத்தில் ஊறும் பால் தன் முதல் திசையை மாற்றிக்கொள்ளவில்லை, அதில் தோன்றும் புதிய கிளைப்புகள் யாவும் நிமிர்ந்து நேராகவே இருக்கும். மாந்தர்களின் போக்குகளும் இப்படியே. அதே சூழல்களில் நாம் இருக்கும் வரை, பழக்கத்தால் ஏற்படும் அப்போக்குகளை, நமக்குச் சிறிதும் இயல்பல்லாத அப்போக்குகளை, கொண்டிருப்போம். ஆனால் சூழல் மாறியவுடன், பழக்கம் நின்றுவிடுகின்றது, இயற்கை தன் மீளாட்சி செய்கின்றது. கல்வி கட்டாயம் ஒரு பழக்கம்தான், ஏனெனில் சிலர் அதைச் சிலர் மறக்கின்றார்கள், வேறுசிலர் தக்கவைத்துக்கொள்கின்றனர். எப்படி இந்த வேறுபாடு எழுகின்றது? பழக்கங்களில் இயற்கையோடு ஒத்துப்போகும் அப்பழக்கங்களுக்கு மட்டும் இயற்கை என்னும் பெயரை வரையறுத்தால், குழப்பத்தில் இருந்து நாம் நம்மைக் காக்கமுடியும்.

[21]பிறக்கும்பொழுதே நாம் உணர்ச்சியுடையவர்களாகப் பிறந்தோம், அதன் பின் நம்மைச் சுற்றியுள்ள பொருள்களால் நாம் பல்வேறுவிதமாக மாற்றம் உறுகின்றோம். நம் உணர்வுகளை நாம் தன்னுணர்வுடன் உணரத்தொடங்கியவுடன், முதலில் நம் போக்கு ஒன்று இன்பமாக இருப்பதால் விரும்பிச் செல்வதும், இன்பமாக இல்லாதவற்றில் இருந்து விலகிச் செல்வதுமாக இருக்கும், பிறகு அது நமக்கு வசதியாக இருக்கின்றது அல்லது அப்படி இல்லை என்பதாகவும், கடைசியாக மகிழ்ச்சி தருவது, நன்மையுடையது என்னும் நம்முடைய அறிவு மதிப்பீடுகளின் அடிப்படையில் அணுகுகின்றோம். நாம் மேலும் உணர்வுக் கூர்மையுடையவர்களாகவும், உயர் அறிவுடையவர்களாகவும் ஆகும்பொழுது இப்போக்குகள் இன்னும் வலிமை உடையதாகவும் நிலைபெற்றதாகவும் ஆகின்றன. ஆனால் இவை நம் பழக்கவழக்கங்களால் நாம் அடிமையுற்றபின்பு, அவை ஏறத்தாழ நம் தனிக்கருத்துகளால் ஒழுக்கமற்றுவிடுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படும் முன்னர் நம்முள் இருப்பனவற்றை நான் இயற்கை என்று உரைப்பேன்.

[22] எனவே இந்த அடிப்படை போக்குகளுடனேயே நாம் அனைத்தையும் தொடர்புபடுத்தவேண்டும்; அதாவது நம்முடைய கல்வியின் மூன்று நிலைகளும் ஒன்றோடு ஒன்று மாறுபடுவதாக மட்டுமாக இருப்பின் இப்படி இயலும். ஆனால் அவை ஒன்றோடு ஒன்று எதிரானதாக அமைந்துவிட்டால், அதாவது ஒருவர் தனக்காக உயர்வதுக்கு மாறாக பிறருக்காக எழுவதாக இருந்தால் என்ன செய்ய முடியும்? அப்பொழுது சீரிணக்கம் என்பது இயலாததாகிவிடும். இயற்கையையோ, குமுக நிறுவனங்களையோ எதிர்த்தாட வேண்டிய பொழுது நீங்கள் ஒரு மாந்தனை உருவாக்கவேண்டுமா அல்லது ஒரு குடிமகனை உருவாக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டும், ஏனெனில் இரன்டையும் ஒரே நேரத்தில் செய்தல் இயலாது.

[23]எல்லாச் சிறுகுழுமங்களும், அவை தங்களுக்குள் ஒற்றுமையுடனும், இறுக்கமாகவும் உறவு கொண்டதாக இருப்பின், அவை பெரிதான பொதுக் குமுகத்தில் இருந்து வேறானதாக இருக்கும். ஒவ்வொரு நாட்டுப்பற்றாளனும், வேற்றுமக்களிடம் இரக்கமின்றி நடந்துகொள்கின்றான்; அவனுக்கு அவர்கள் வெறும் மாந்தர்கள் மட்டுமே, வேறொன்றும் இல்லை [1]. இந்தக் குறைபாடு தவிர்க்கமுடியாதது, ஆனால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததன்று. முக்கியமானது என்னவென்றால் தாம் வாழும் மக்களோடு நாம் நல்லபடியாக நடந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டில், எசுப்பார்த்தியன் (Spartiate, Spartan) தன்னலத்துடனும், பேராசையுடனும், அறமில்லாமலும் நடந்துகொள்கின்றான், ஆனால் அவனே தன்னுடன் வாழ்பவர்களிடம் தன்னலமில்லாமலும், அறமுடனும், சீரிணக்கத்துடனும் நடந்துகொள்கின்றான். பலவினப்பழக்க உலகநோக்கர் எனக் கூறிக்கொள்வோரை நம்பமுடியாது, அவர்கள் பல நூல்களில் உள்ள கடமைகளைப் பற்றிப் பேசுவர் ஆனால் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அவற்றை நிறைவேற்றமாட்டார்கள். அப்படிப்பட்ட மெய்யியலாளர்கள் தங்கள் அண்டை இனத்தார்களிடம் அன்புடன் நடக்காத தார்த்தாரை[2]. விரும்புவார்கள்.

[24] இயற்கை மாந்தன் தனக்காத் தான் வாழ்கின்றான்; அவன் ஓர் எண்ணிக்கை அலகு, அவனே அவனுக்கு எல்லாம் பொறுப்பு, அவனைப் போன்றதும் அப்படியே. ஒரு குடிமகன் (அப்படியல்ல) முழுமையான கூட்டத்தின் (குமுகத்தின்) ஒரு பகுதி மட்டுமே (குடிமகன் பின்னத்தின் மேல் எண் போல், அடியெண் முழுக் குமுகம்), அவன் மதிப்பானது அவன் சார்ந்திருக்கும் குமுகத்தைப் பொறுத்தது. நல்ல குமுக அமைப்புகள், அவனை தன் இயற்கையில் இருந்து விலகிப் போகச் செய்து, தான் தனித்து இருந்த விடுபாட்டு நிலையை குமுகத்தோடு இணைத்துக் கட்டுப்பட்டு மொத்த குமுகத்தின் வரலாற்றின் ஒரு பகுதியாகவே மாறி மொத்தக் குமுகத்தையே பொருட்படுத்துகின்றான். உரோமையின் ஒரு குடிமகன் கேயசோ, அல்லது இலூசியசோ அன்று, அவன் உரோமானியன்; அவன் தன்னைவிடத் தன் நாட்டை அதிகம் நேசித்தான். பிடிபட்டிருந்த இரெகுலசு தான் ஒரு கார்த்தாச்சினியன் என்றே கூறிக்கொன்டான், தான் தன்னுடைய முதலாளிகளின் உடைமைப்பொருளாகிவிட்டபடியால். தன் வெளிநாட்டான் நிலையால் அவன் உரோமானிய மேலவையில் உட்கார மறுத்தான்; ஒரு கார்த்தாச்சினியன் வந்து ஆணையிட்டால் மட்டுமே அங்கு உட்காருவான். அவன் தன்னுடைய உயிரைக் காக்க மற்றவர்கள் முயன்றபொழுது வெறுப்புற்றான்; அவனுக்கு உள்ளுறுதி இருந்தது, வென்று திரும்பி வந்து வீரத்துடன் தன்னுடைய கொடுமையான இறப்பை ஏற்றான். இரெகுலசுக்கும் தற்கால மாந்தனுக்கும் இடையே ஒற்றுமை ஏதும் இல்லை.


மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. ..
  2. தார்த்தார் என்பார் துருக்கி மொழி பேசும் நடு ஆசிய மக்களில் ஒரு பகுதியினர். இப்பொழுது உருசியாவில் உள்ள குடியரசுகளில் ஒன்றாக இருக்கும் மக்கள் இனத்தவர்