எப்படிச் செய்வது/வீட்டு மரக்கறித் தோட்டம் வைப்பது எப்படி?

வீட்டில் மரக்கறித் தோட்டம் வைப்பது பல்வேறு பயன்களைத் தரும் ஒரு செயற்பாடு ஆகும். உணவு உற்பத்தி ஒரு முதன்மைப் பலன். சூழல், உணவுகள் பற்றிய அறிவைப் பெறுதல், இயற்கையோடு சேர்ந்தியங்கும் நிறைவைப் பெறுதல், உடற்பயிற்சி என்று மேலும் பல பயன்பாடுகள் உள்ளன. வீட்டுத் தோட்டம் மனதுக்கு அமைதியை வழங்கும் ஒரு நோய்தீர் முறையாகவும் தற்போது பார்க்கப்படுகிறது.

இந்தக் செய்முறை வீட்டுக்கு அருகாமையில் நிலத்தில் தோட்டம் வைப்பது பற்றியதே. நிலம் இல்லாவிடினும் கொள்கலன்களைப் பயன்படுத்தி கொள்கலன் தோட்டம் வைக்கலாம். அல்லது வீட்டின் கூரையில் கூட தோட்டம் வைக்கலாம்.

உலகில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தோட்ட கால நிலை வேறுபடும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக ஒரு வீட்டிடுத் தோட்டத்தைப் பேண முடியும். மேற்குநாடுகளில் இருப்பவர்களுக்கு உறைபனிக் காலத்தின் பின்பு (ஏப்பிரல் - ஒக்டோபர்) ஆண்டுக்கு ஏறக்குறைய 6 மாதங்கள் மட்டுமே இது பெரும்பாலும் சாத்தியமாகிறது. பிற மாதங்களில் பைங்குடிலில் மட்டுமே தோட்டம் வைக்க முடியும்.

தேவையான பொருட்கள்

தொகு
  • நிலம்
  • அலவாங்கு/மண்வெட்டி
  • கிளறி
  • நீர்
  • நீர் விடுதவதற்கான வசதி
  • விதைகள், செடிகள்
  • உரம்
  • மனித உழைப்பு

நிலத்தைப் பதன்படுத்தல்

தொகு

நீங்கள் தோட்டம் வைக்கப் போகும் இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் போய் வர இடம் விட்டு, எல்லைகளுக்கும் இடம் விட்டு எத்தனை பாத்திகள் போடலாம் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். பாத்தி என்பது பெரும்பாலும் நீள்சதுர வடிவிலான சிறு வரம்பு கட்டக் கூடிய பகுதி ஆகும். உங்கள் நிலம் வளம் குன்றி இருந்தால் உயர்த்தப்பட்ட பாத்தி (rasided bed) செய்வது பற்றி பரிசீலிக்கவும். உயர்த்தப்பட்ட பாத்தி என்பது பாத்தியைச் சுற்றி மரப் பலகையால் அல்லது பிற பொருட்களால் 2-4 அடி உயரம் வரை அடைத்து விட்டு அதற்குள் மண்ணை இட்டு அங்கு பயிரிடுவதாகும். தாவரங்கள் இலகுவாக வேர் விட்டு வளரவும், பராமரிப்பிற்கும் உயர்த்தப்பட்ட பாத்தி உதவும், இது சற்றுக் கூடிய விளைச்சலையும் தரக்கூடியது.

பெரும்பாலும் நிலத்தில் நேரடியாக பாத்தியைப் போட முடியும். பாத்தியைச் சுற்றி கற்கலால் அல்லது வேறு பொருட்கலால் சிறு வரம்பு கட்டலாம். அலவாங்கு அல்லது மண்வெட்டி போன்றவற்றால் மண்ணை ஆழமாக (சுமார் 2-3 அடி) வெட்டி, கிண்டி, கிளறிப் பதப்படுத்தவும். முதலாண்டே குப்பை அல்லது கலப்பு உரங்களைச் ஆழமாகத் தாட்டு விட்டால் அடுத்த ஆண்டு அவை மண்ணோடு கலந்து நல்ல பசளையாக அமையும். அப்படி நீங்கள் செய்யாவிடின் உரம் அல்லது பசளையை பெற்று மண்ணோடு கலந்து பதப்படுத்துங்கள்.

விதைகளை, கண்டுகளை தேர்வு செய்தல், நடுதல்

தொகு

உங்களுக்கு என்ன மரக்கறிகள் வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். தமிழ்ச் சமையலில் அதிகம் இடம்பிடிக்கும் வெண்டி, கத்தரி, மிளகாய், தக்காளி, அவரைகள், உருளைக் கிழங்கு போன்ற மரக்கறிகள், கீரைகள், மல்லி வெந்தையம் உள்ளி இஞ்சி வெங்காயம் போன்ற சுவைப்பொருட்கள் எனப் பல்வேறு விதமான தாவரங்களை நீங்கள் பயிரிட முடியும்.

விவசாயிகள் பயிரிடுவதற்கான விதையை சிறப்பாகத் தேர்தெடுத்து வைத்திருப்பார்கள். அதே போல உங்களுக்கு விரும்பிய மரக்கறிகளுக்கான தரமான விதைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். நெடுங்காலம் தோட்டம் செய்பவர்களிடம் சென்று கேட்டால் வெண்டிக்காய், மிளகாய், அவரை போன்றவறுக்கான விதைகளைத் தருவார்கள் அல்லது விற்பார்கள். கடைகளிலும் விதைகள் மற்றும் சிறு செடிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விதைகளை அல்லது செடிகளை எப்பொழுது எப்படிப் பயிரிடுவது என்பதும் முக்கியம். குளிர் நிலப்பகுதிகளில் உறைபனி முடிந்த பின்னரே பயிரிட வேண்டும். அதற்கு முன் வீட்டுக்குள் சில பயிர்களை வளர்க்கத் தொடங்கலாம்.

சில விதைகள் மேலே தூவி விடுதல் போதுமானது. சில விதைகள் மெதுவாக தாக்கப்பட வேண்டும். மேலும் சில சற்று ஆழமாக தாக்கப்பட வேண்டும். விதைக்கும் போதோ அல்லது செடிகளை நடும் போதோ போதிய இடம் விட்டு செய்ய வேண்டும். வெவ்வேறு தாவரங்களுக்கு வெவ்வேறு இடைவெளிகள் தேவைப்படலாம். நெருக்கமாக நட்டால் வேர்கள் பரவ இடமில்லாமலும், உரம் போதிய அளவு கிடைக்காமலும் வளர்ச்சி குன்றி உற்பத்தி பாதிப்படையும்.

தண்ணீர், உரம் இடுதல்

தொகு

நட்டு விட்ட பின்ன பயிர்களுக்குத் தேவையான தண்ணீர் விடுவது முக்கியமானதாகும். அதிகாலை செடிகள் வாடி இருந்தால் தண்ணீர் தேவைப்படுகிறது. தாவரங்களின் அடியில் நீர் விடுதல் நன்று. இம் முறை நீர் வேர்களுக்குப் போவதை உறுதி செய்கிறது. இலைகளில் நீர் மிகுவாக விழும் போது நோய் வருவதற்காக வாய்ப்பு சற்றுக் கூடுகிறது.

தாவரங்கள் வளர்ந்து வரும் போதும், உற்பத்திக் காலத்தின் போதும் உரம் இடுதல் உற்பத்தியைக் கூட்டும். நீங்கள் கடையில் உரத்தை வாங்குவதானால் என்ன மாதிரிச் தாவரங்களுக்கு என்ன மாதிரி உரம் அவசியம் என்பதை அறிந்து செய்வது முக்கியம். இல்லாவிடின் பணம் வீணாவுதடன் பலனும் கிட்டாது. நெல், சோளன் போன்ற தானிய வகைகளுக்கு நைட்ரசன் கூடுதலாக உள்ள உரம் தேவை. பூக்கும், காய்க்கும் தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற செடிகளுக்கு பொசுபரசு கூடுதலாக உள்ள உரம் தேவை.

அறுவடை

தொகு

மிளகாய், தக்காளி, வெண்டி, கத்தரி போன்றவை சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக உங்களுக்கு அறுவடை தரக்கூடியவை. கீரைகளை நீங்கள் நுள்ளி எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள, அவற்றின் இலைகள் மீண்டும் தளைக்கும். கிழங்குகளைப் பொதுவாக கடைசியாக ஒரு முறை அறுவடை செய்யலாம்.

வெளி இணைப்புகள்

தொகு